Election bannerElection banner
Published:Updated:

ரயில் கழிப்பறையிலிருந்து பச்சிளம் குழந்தை கண்டெடுப்பு..!

ரயில் கழிப்பறையிலிருந்து பச்சிளம் குழந்தை கண்டெடுப்பு..!
ரயில் கழிப்பறையிலிருந்து பச்சிளம் குழந்தை கண்டெடுப்பு..!

ரயில் கழிப்பறையிலிருந்து பச்சிளம் குழந்தை கண்டெடுப்பு..!

பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தை ஈரோட்டில் ரயில் கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் ‘டீ கார்டன் எக்ஸ்பிரஸ்’ ரயிலானது நேற்று காலை 5 மணியளவில் ஈரோடு ரயில்வே ஜங்ஷனுக்கு வந்திருக்கிறது. காலை நேரம் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்திருக்கிறது. அன் ரிசர்வ்டு பெட்டியிலும் முண்டியடித்தபடி பயணிகள் ஏறியிருக்கின்றனர். அப்போது, அன்ரிசர்வ்டு பெட்டியின் கழிப்பறையின் உள்ளிருந்து பச்சிளங்குழந்தை ஒன்றின் அழுகுரல் பலமாக கேட்டிருக்கிறது. இதனையடுத்து, பயணிகள் கழிப்பறையைத் திறந்து பார்க்க, ஒரு துணி கட்டைப் பையில் பிறந்த 20 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கதறி அழுத நிலையில் இருந்திருக்கிறது. இதனைப் பார்த்து அதிர்ந்து போன பயணிகள் சைல்டு ஹெல்ப்லைன் மற்றும் போலீஸார்க்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், அந்தக் குழந்தையைக் கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் சேர்த்திருக்கின்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ‘குழந்தைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. குழந்தையின் உடல்நலம் நன்றாக இருக்கிறது’ என்று தெரிவித்திருக்கின்றனர். 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறுகையில், “குழந்தைகளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இந்தக் குழந்தையைக் கடத்தி வந்திருக்கலாம். ஒருவேளை குழந்தை தொடர்ந்து அழுதிருக்கும். இதனால், போலீஸாரிடம் மாட்டிக் கொள்வோம் என்ற நினைப்பில் குழந்தையை கழிப்பறையில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம். தற்போது குழந்தை ஈரோடு அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் நலமுடம் இருக்கிறது.

இன்னும் சில நாட்களில் இந்தக் குழந்தை, குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு, இதுகுறித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டு தகவல் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். மற்ற ஸ்டேஷன்களில் பச்சிளம் குழந்தை காணாமல் போனது சம்பந்தமான வழக்கு ஏதேனும் பதிவு செய்யப்பட்டிருக்கிறா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குழந்தையை உரிய பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு