Published:Updated:

‘வெளி நபர்களிடம் ஜாக்கிரதை... வீட்டில் நடந்தால்?’- சைல்டு ஹெல்ப் லைனில் கதறிய மாணவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘வெளி நபர்களிடம் ஜாக்கிரதை... வீட்டில் நடந்தால்?’- சைல்டு ஹெல்ப் லைனில் கதறிய மாணவி
‘வெளி நபர்களிடம் ஜாக்கிரதை... வீட்டில் நடந்தால்?’- சைல்டு ஹெல்ப் லைனில் கதறிய மாணவி

‘வெளி நபர்களிடம் ஜாக்கிரதை... வீட்டில் நடந்தால்?’- சைல்டு ஹெல்ப் லைனில் கதறிய மாணவி

செல்விக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வெறும் 14 வயது. இன்னும் அவள் குழந்தை தான். கள்ளம் கபடமில்லாமல் அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளோடு பட்டாம்பூச்சியாய் சுற்றி விளையாடித் திரிந்தவள். இந்த 14 வயதில் தனக்கு இப்படியொரு சம்பவம் நடக்கும், அதுவும் தந்தை ரூபத்தில் ஒரு கொடூரன் வருவான் என அவள் கனவிலும் கண்டிருக்க மாட்டாள். பெற்ற தகப்பன் கொடுத்த தொந்தரவுகளையும், மிரட்டல்களையும் வெளியே சொல்ல முடியாமல் தவித்தவள், ஒரு கட்டத்தில் வெடித்து உண்மையை கொட்ட, இன்றைக்கு கொடூரனான தந்தை சிறைக் கம்பிக்கு அப்பால்...

ஈரோடு மாவட்டம், கணேசபுரத்தில் இருக்கிறது செல்வியின் வீடு. செல்வியின் அப்பா முருகன், கரூரில் உள்ள ஹோட்டல் கடை ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார். வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வாராம். செல்வியின் அம்மா, ஈரோடு பேருந்து நிலையத்திற்கு அருகேயுள்ள துணிக்கடை ஒன்றில் கால்கடுக்க நின்று சேல்ஸ்வுமனாக வேலை பார்த்து வருகிறார். செல்விக்கு மொத்தம் 3 சகோதரிகள். மூத்தவள் திண்டுக்கல்லில் உள்ள பள்ளி ஒன்றில் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறாள். செல்வியும், அவளுடைய தங்கையும் ஈரோடு நஞ்சப்பக்கவுண்டன் வலசு பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிடுவதால், பள்ளி விடுமுறை நாட்களில் செல்வியும், அவளுடைய சகோதரியும் வீட்டில் தனியே தான் இருப்பார்களாம். அந்தச் சமயத்தில் வீட்டிற்கு வரும் முருகன், வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் செல்வியிடம் பாலியல் ரீதியாகச் சில்மிஷம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். ‘அப்பா சும்மா கிச்சுக்கிச்சு மூட்டி விளையாடுறார் போல’ எனக் குழந்தை செல்வி வெள்ளந்தியாக விட்டிருக்கிறார். நாளாக நாளாக வீட்டில் ஆளில்லாத நேரம் பார்த்து இதேபோல முருகன், செல்விக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து கடுமையாக நடந்திருக்கிறார். தன் தகப்பனால் தனக்கு நடக்கும் கொடூரம் தெரிந்து பதறிப்போன செல்வி, ஒருகட்டத்தில் கத்தி கூச்சல் போட்டு, ‘அம்மாகிட்ட சொல்லுவேன்’ எனக் கதறியிருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த முருகன், ‘இந்த விஷயத்தை நீ வெளிய எங்கயாச்சும் சொன்ன, உங்க அம்மாவையும், உன் தங்கச்சியையும் கொன்னு போட்ருவேன்’ என மிரட்டியிருக்கிறார். தந்தை கொடுத்துவரும் பாலியல் தொந்தரவுகளை வெளியே சொல்ல முடியாமலும், கொலை மிரட்டலுக்கு அஞ்சியும் குழந்தை செல்வி மனதளவில் இடிந்து போய் கிடந்திருக்கிறாள்.

ஒருநாள், சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றம் தொடர்பான விழிப்பு உணர்வு நிகழ்ச்சிக்காக, செல்வி படிக்கும் பள்ளிக்குச் சென்று முகாம் நடத்தியிருக்கின்றனர். அப்போது பெண் குழந்தைகளைத் தனியே அழைத்துப் பேசியிருக்கின்றனர். செல்வியிடம், ‘உனக்கு யாராவது தொந்தரவு கொடுத்திருந்தாலோ, இனிமேல் கொடுத்தாலோ தைரியமா நீ உடனே வெளியே சொல்லணும்’ என அறிவுரை வழங்க, செல்வியின் கண்ணில் கடகடவென கண்ணீர் கொட்டியிருக்கிறது. தான் நீண்ட காலமாக வெளியே சொல்ல முடியாமல், பெற்ற தகப்பனாலேயே அனுபவித்து வரும் கொடுமைகளைச் சொல்லி வெடித்து அழுதிருக்கிறாள். செல்வியை ஆசுவாசப்படுத்தி அனுப்பியவர்கள், செல்வியின் புகாரை ஈரோடு மகளிர் காவல் நிலையத்திற்குச் சொல்லி, விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். விசாரணையில், செல்வியின் தகப்பன் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததும், கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்திருக்கிறது. அதனையடுத்து முருகனைக் கைது செய்த போலீஸார் போக்சோ சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

‘அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு’ எனக் குழந்தைகளிடம் பெற்றோர்கள் சொல்லி வளர்த்து வரும் வேளையில், வீட்டிலேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவது வேதனையளிக்கிறது. பல மாதங்களாக மனதுக்குள் பூட்டி வைத்திருந்த வலியைச் சொல்ல, செல்விக்கு இப்போது தான் தைரியமும், துணிச்சலும் வந்திருக்கிறது. வெளியே சொல்ல பயந்துகொண்டு, மனதுக்குள் அழுது கொண்டிருக்கும் இன்னும் எத்தனையோ செல்விகள் இருப்பார்கள். அவர்களுக்குத் தைரியம் கொடுக்கும் விதமாக, பள்ளிகளில் இருந்தே விழிப்பு உணர்வும், பாலியல் ரீதியிலான புரிதல்களை கற்பிக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு