Published:Updated:

`கஜாவால் வீடு போச்சு; குடும்பத்தை வாட்டியது வறுமை!'- மகனை ரூ.10,000க்கு அடமானம் வைத்த தந்தை

`கஜாவால் வீடு போச்சு; குடும்பத்தை வாட்டியது வறுமை!'- மகனை ரூ.10,000க்கு அடமானம் வைத்த தந்தை
`கஜாவால் வீடு போச்சு; குடும்பத்தை வாட்டியது வறுமை!'- மகனை ரூ.10,000க்கு அடமானம் வைத்த தந்தை

`கஜாவால் வீடு போச்சு; குடும்பத்தை வாட்டியது வறுமை!'- மகனை ரூ.10,000க்கு அடமானம் வைத்த தந்தை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் கஜா புயலால் குடிசை வீட்டையும், வருமானத்தையும் இழந்ததால் வறுமையின் பிடியில் சிக்கி மீண்டும் வீடு கட்ட முடியாமல் தவித்த ஒருவர், தனது 12 வயது மகனை 10,000 ரூபாய்க்கு அடமானம் வைத்து ஆடு மேய்கும் வேலைக்கு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை அருகே உள்ள முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு வசந்தா என்ற மனைவியும் 17 வயதுடைய சக்தி, 12 வயது பெரமையன் என்ற இரண்டு மகன்கள், 10 வயதுடைய காமாட்சி என்ற பெண் குழந்தை என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மாரிமுத்து அண்ணா குடியிருப்புப் பகுதியில் ரகுமான் என்பவரது தோப்பில் குடிசை அமைத்து குடும்பத்துடன் குடியிருந்ததுடன் தோப்பைக் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் கஜா புயலால் அவர்கள் குடியிருந்த குடிசை வீடு மற்றும் உடைமைகள் அனைத்தும் சேதமடைந்தது. இவருக்கு அரசு அறிவித்த நிவாரணம் மற்றும் பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் புயல் அடித்த நாள் முதல் வேலையும் இல்லாமல் போனதால் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டது.

45 நாள்களுக்கு மேலாக வெட்ட வெளியில் வெயிலிலும் மழையிலும் படாதபாடு பட்டுள்ளனர். இந்த நிலையில் எப்படியாவது குடிசை வீட்டைச் சீரமைத்துவிட வேண்டும் எனப் போராடி பலரிடம் பணம் கேட்டு அலைந்துள்ளார். ஆனால் கிடைக்கவில்லை. தோப்பின் உரிமையாளரும் உதவ முன்வரவில்லை. மாரிமுத்து தனது குடும்பத்தினருடன் தங்களின் நிலையை நினைத்து நொந்து போய் விம்மியுள்ளார். பின்னர் அருகில் இருந்த ஒருவரின் உதவியோடு குடிசை வீட்டைச் சீரமைப்பதற்காக தனது இளைய மகன் பெரமையனை நாகப்பட்டினத்தில் ஆடு மேய்க்கும் வேலைக்காக 10,000 ரூபாய்க்கு அடமானம் வைத்து அனுப்பியுள்ளார். அந்தப் பணத்தின் மூலம் வீட்டைச் சீரமைக்கும் பணியைத் தொடங்கும் போது விஷயம் வெளியே கசிந்து பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாரிமுத்துவிடம் பேசினோம். ``எனக்கு முதல்சேரி சொந்த ஊர். அங்கு எனக்குச் சொந்தமாக எந்த இடமும் இல்லை. இதனால் பட்டுக்கோட்டையில் ரகுமான் என்பவரது தோப்பில் தங்கி குடும்பத்துடன் வேலை பார்த்து வந்தேன். புயலில் வீடு போச்சு வருமானமும் போச்சு. எனக்கும்  நிவாரணம் கொடுங்க எனப் பல அரசு அதிகாரிகளிடம் முறையிட்டேன். எனக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு என எந்த ஆதாரமும் இல்லை. அதனால் தரமுடியாது என மறுத்துவிட்டனர். பணம்தான் இல்லை. மானத்தையாவது காப்போம் என  நினைத்து ஒண்டிக்கொள்ள குடிசை வீடுகூட இல்லாமல் என்ன செய்வது என மனதைக் கல்லாக்கிக் கொண்டு என் மகனை அடமானம் வைத்து விட்டேன். அம்மா நான் உன்னோடேயே இருக்கேன் என என் மகன் அம்மாவையும், என்னையும் பார்த்துக் கதறியவனை வேறு வழி இல்லாமல் அனுப்பி வைத்துவிட்டேன். இப்போது அரசு அதிகாரிகள் வந்து மகனை மீட்டு காப்பகத்தில் வைத்திருக்கிறார்கள். என் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாகக் கூறினார்கள்.

சார் எனக்கு இருக்க ஒரு இடமும் எந்த ஆவணமும் இல்லாததால் என் புள்ளைங்க பள்ளியில் சேர்க்க முடியவில்லை. அதனால் படிக்காமல் இருக்கிறார்கள். பெரியவனுக்குத்தான் வயதாகிவிட்டது. மிச்சம் இருக்கிற இரண்டு புள்ளைகளுக்குக் கல்வி அறிவையும் கொடுங்க என்றேன். நான்தான் படிக்காம படாதபாடு பட்டுவிட்டேன். என் புள்ளைகளாவது படித்துவிட்டு நல்லா இருக்கட்டும் என்றேன்'' எனப் கண்கலங்கியபடி கூறினார்.

இது குறித்துப் பேசிய சிலர், ``கடும் வறுமையினால் இந்தச் செயலைச் செய்துவிட்டார் மாரிமுத்து. இப்போது அரசுக்குக் கெட்டப்பெயர் ஏற்பட்டு விடும் என்பதால் உனக்குத் தேவையானவற்றைச் செய்து தருகிறோம் எனக் கூறி வறுமையால் அடமானம் வைக்கவில்லை எனச் சொல்லச் சொல்லி அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என அனைவரும் மாரிமுத்து குடும்பத்தை மிரட்டுகின்றனர். முன்பே அக்கறையோடு செயல்பட்டு அவருக்கு நிவாரணம் கொடுத்து இருந்தா இந்தச் செயலைச் செய்திருக்க மாட்டார்கள்'' என்றனர்.
அடுத்த கட்டுரைக்கு