Published:Updated:

பசிக் கொடுமை... பூச்சி மருந்தைக் குடித்த சிறுமி... பொருளாதார பெருமை பேசும் அரசு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பசிக் கொடுமை... பூச்சி மருந்தைக் குடித்த சிறுமி... பொருளாதார பெருமை பேசும் அரசு!
பசிக் கொடுமை... பூச்சி மருந்தைக் குடித்த சிறுமி... பொருளாதார பெருமை பேசும் அரசு!

வீட்டில் ஒரு பிடிகூட கோதுமையோ அல்லது வேறு எந்த ஓர் உணவுப் பொருளோ இல்லாத நிலையில், அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று" மிகவும் பசியாக இருக்கிறது... கொஞ்சம் கோதுமை தந்தால்கூட அதை நாங்கள் உணவாக்கி சாப்பிட்டுக்கொள்வோம்..!’’ என்று அந்தச் சிறுமி பல முறை கேட்டும் கடைக்காரர் அசைந்து கொடுக்கவில்லை.

ருபுறம் நிலவில் ஆராய்ச்சி செய்வதற்காக விண்கலத்தை அனுப்புகிறது இந்தியா. மறுபுறம் அதே இந்தியாவில் பட்டினியால் பழங்குடியின சிறுமி ஒருத்தி, வறுமை காரணமாக உணவுக்குப் பதிலாக பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்ட அவலம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பசிக் கொடுமை... பூச்சி மருந்தைக் குடித்த சிறுமி... பொருளாதார பெருமை பேசும் அரசு!

130 கோடி பேருக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியா, கடந்த 60 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் படிப்படியான வளர்ச்சி அடைந்து வந்த நிலையில், 20 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாகவே காணப்படுகிறது. இதனால், சர்வதேச அரங்குகளில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் உலகின் மிக வேகமாக வளர்ச்சி அடையும் முதல் 10 நாடுகளின்  பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( ஜிடிபி), 2018- 2019-ம் நிதியாண்டில் 0.5% சதவிகிதம் உயர்ந்து, 7.2 % சதவிகிதமாக உயர வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி 4.5 மடங்கு அதிகரித்து, தனி நபர் நுகர்வு 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோன்று உணவு தானிய உற்பத்தியும் 2 மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பிடத்தக்க அளவிலான பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியை எட்டி, தனது மக்கள் தொகைக்குத் தேவையான அளவுக்கு உணவு தானிய உற்பத்தியையும் செய்து வரும் இந்தியாவில், இன்னும் ஏராளமான மக்கள், குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும் உணவு கிடைக்காமல் அல்லது போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் வாடுவதும் உயிரிழப்பதும் தொடர் கதையாக உள்ளது. 

பசியால் துடித்த சிறுமி 

அப்படியான ஒரு நிகழ்வுதான் மத்தியப்பிரதேச மாநிலம், ரட்லம் என்ற மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் கணிசமானோர் வசித்து வருகின்றனர். மிகவும் வறுமை நிலையில் வாடும் இவர்களுக்கு, காட்டின் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்ட நிலையில், அந்தக் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வரும் கோதுமைதான், அவர்களின் பசியை ஓரளவுக்குப் போக்கி வந்தது. ஆனாலும், அந்த ரேஷன் கடையிலும் ரேஷன் பொருள்கள் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 31-ம் தேதியன்று பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி உணவு இல்லாமல் பசியால் துடித்தாள். வீட்டில் ஒரு பிடிகூடக் கோதுமையோ அல்லது வேறு எந்த ஓர் உணவுப் பொருளோ இல்லாத நிலையில், அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று கொஞ்சம் கோதுமை தருமாறு கேட்டுள்ளாள். ஆனால், கடைக்காரர் கோதுமை இல்லை என்று அவளை விரட்டி விட்டார். ``மிகவும் பசியாக இருக்கிறது... கொஞ்சம் கோதுமை தந்தால்கூட அதை நாங்கள் உணவாக்கிச் சாப்பிட்டுக்கொள்வோம்..!’’ என்று அந்தச் சிறுமி  பல முறை கேட்டும் கடைக்காரர் அசைந்து கொடுக்கவில்லை. 

இந்த நிலையில், மனம் வெதும்பிய நிலையில், பசியோடு வீடு திரும்பினாள் அந்தச் சிறுமி. அப்போது வீட்டில் உள்ள பாட்டிலில் ஏதோ ஒரு திரவம் இருப்பதைப் பார்த்த அந்தச் சிறுமி, பசியைப் பொறுக்காமல் அல்லது அதைக் குடித்தாலாவது தனது பசி போகும் என நினைத்து, அந்தத் திரவத்தை எடுத்துக் குடித்துவிட்டாள். ஆனால், அவள் குடித்தது பூச்சிக்கொல்லி மருந்து. 

பசிக் கொடுமை... பூச்சி மருந்தைக் குடித்த சிறுமி... பொருளாதார பெருமை பேசும் அரசு!

மயங்கி விழுந்த அவளை, பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவள் இன்னும் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், டிசம்பர் 31-ம் தேதியன்று நடந்த இந்தச் சம்பவம், தற்போதுதான் கசிந்து ஊடகங்களுக்குத் தெரியவந்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்ததும், தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், இது குறித்து விசாரிக்க கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. அத்துடன் அந்த ஆணையத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் சம்பவம் நடந்த கிராமத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இந்தக் கமிட்டி விரைவில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும் என்று கூறியுள்ள தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணைய அதிகாரி ஒருவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்கவில்லை.  

பட்டினிச் சாவு புதிதல்ல

இந்தியாவில் பட்டினி மற்றும் போதிய ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகளும் பெரியவர்களும் உயிரிழப்பது புதிதல்ல. கடந்த காலங்களில் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக வட மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதத்தில்கூட டெல்லியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண் குழந்தைகள் வறுமையின் காரணமாக ஒரு வாரம் பட்டினி கிடந்து,  உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்தது. 

அதிலும் மத்தியப்பிரதேச மாநிலம் பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுச் சாவுக்குப் பெயர்போனது. கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும்
6 வயதுக்குக் கீழே உள்ள சுமார் 28,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக ஏற்பட்ட நோயால் உயிரிழந்ததாக 2017-ல் வெளியான அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மாநிலப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழக்கவில்லை என அதை அப்போது மறுத்திருந்தது. ஆனால், உண்மை என்ன என்பதை தற்போதைய சம்பவம் பட்டவர்த்தனமாக உணர்த்திவிட்டது. 

2018-ம் ஆண்டின் உலகளாவிய பலப் பரிமாண வறுமைக் குறியீட்டில் (The Global Multi-Dimensional Poverty Index), இந்தியாவின் நான்காவது ஏழ்மையான மாநிலமாக மத்தியப்பிரதேசம் இடம்பெற்றுள்ளது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் மக்களின் வருவாய் மிகமிகக் குறைந்த அளவே உள்ளது. இதன் காரணமாகவே இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் வறுமையின் பிடியில் சிக்கி, பட்டினியாலும் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் உயிரிழக்க நேரிடுகிறது. 

கடந்த 15 ஆண்டுக் காலமாக பா.ஜனதா தொடர்ந்து இந்த மாநிலத்தில் ஆட்சியில் இருந்த நிலையில், அண்மையில் நடந்த தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்தியாவில் பட்டினி நிலை

மத்தியப்பிரதேச நிலை இதுவென்றால், ஒட்டுமொத்த இந்தியாவின் நிலையும் கவலை அளிப்பதாகவே உள்ளது. உலகிலேயே ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (The Food and Agriculture Organization of the United Nations -FAO) வெளியிட்ட உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை 2018-ன் அறிக்கையில், இந்தியாவில் 19.59 கோடி பேர் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்களாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கின்படி பார்த்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 14.8% பேர் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். மேலும், கர்ப்பம் தரிக்கும் 15 முதல் 49 வயதுடைய இந்தியப் பெண்களில் 51.4% பேர் ரத்த சோகையுடையவர்களாகவும் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

இதுமட்டுமல்லாது, 5 வயதுக்குக் கீழே உள்ள இந்தியக் குழந்தைகளில் 38.4% பேர், அவர்களின் வயதுக்குரிய வளர்ச்சியை அடையாமல் மிகவும் குள்ளமாக இருப்பதாகவும், 21% பேர் மிகவும் எடை குறைவாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. 

பசிக் கொடுமை... பூச்சி மருந்தைக் குடித்த சிறுமி... பொருளாதார பெருமை பேசும் அரசு!

வீணடிக்கப்படும் உணவுகளும் உணவு தானியங்களும் 

 ஒரு புறம் மக்கள் இப்படி வறுமையிலும் பசியிலும் வாடும் நிலையில், இன்னொரு புறம் உலக அளவில் மனித தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்களில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உணவுப் பொருள்களின் விநியோக சங்கிலியில் காணப்படும் திறமையற்ற மேலாண்மையால், 40% பழங்களும் காய்கறிகளும், 30% உணவு தானியங்களும் நுகர்வோர் சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படாமல் வீணடிக்கப்படுகின்றன. மேலும் அறுவடையின்போதும், அறுவடைக்குப் பின்னர் நுகர்வோர் விநியோகத்துக்குக் கொண்டு செல்லப்படும்போதும் கணிசமான உணவுப் பொருள்கள் வீணாகின்றன. அதேபோன்று அதிகமான உற்பத்தியால் சேமிப்புக் கிடங்குகளிலும் கடைகளிலும் இருப்பு வைக்கப்படுவதிலும், புதிய உணவு தானிய உற்பத்தி அறிமுகத்தின்போதும் வீணாகின்றன. 

2010-ம் ஆண்டு முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது,  நாடாளுமன்றத்தில் பேசிய அப்போதைய உணவுத்துறை அமைச்சர் ஷரத் பவார், இந்தியாவின் உணவு உற்பத்தியில் சுமார் 40 சதவிகித தானியங்கள் போதுமான கிடங்குகள் இல்லாமல் திறந்தவெளியில் கிடப்பதாலோ அல்லது உரிய இடத்துக்குக் கொண்டு செல்லப்படாததாலோ, எலி மற்றும் பூச்சிகளாலோ வீணாவதாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் இதைச் சொல்லி 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும் இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில் அதே நிலைதான் காணப்படுகிறது. 

இது ஒருபுறம் என்றால், திருமணம் போன்ற இந்தியக் குடும்பங்களில் நடத்தப்படும் விசேஷங்களின்போதும் விருந்துகளிலும் பார்ட்டிகளிலும் ஹோட்டல்களிலும் சமைக்கப்பட்ட உணவுகள் வீணாவதும் இந்தியாவில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது. 

பசிக் கொடுமை... பூச்சி மருந்தைக் குடித்த சிறுமி... பொருளாதார பெருமை பேசும் அரசு!

இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான திருமணங்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் நடத்தப்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற நிகழ்வுகளில் மும்பை நகரில் மட்டும் வீணாகும் உணவுகள், மும்பை நகரத்தின் குடிசை வாழ் பகுதி மக்களின் ஒரு நாள் உணவு தேவையைப் பூர்த்தி செய்துவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

அதேபோன்று 2012-ம் ஆண்டில் மட்டும் பெங்களூரில் இதேபோன்ற நிகழ்வுகளில் சுமார் 943 டன் உணவுகள் வீணடிக்கப்பட்டதாகவும், இது சுமார் 2.6 கோடி இந்தியர்களுக்கான சராசரி உணவு என்றும் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அனைவருக்கும் சமமான பலன்கள் கிடைக்கும் வகையில் அமையாத வரையில், இந்தியா தொடர்ந்து உலகின் மூன்றில் ஒரு பங்கு ஏழைகளைக் கொண்ட நாடாகத்தான் இருக்கும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு