Published:Updated:

"தமிழகத்தில் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் இயங்குவதே இல்லை!" - தேவநேயன்

போக்சோ சட்டத்தைப் பொறுத்தவரை, அரசாங்கம் அதில் திருத்தம் செய்வதைவிட, இருக்கிற சட்டத்தை ஒழுங்காக நடைமுறைப்படுத்தினாலே போதும்.

'குழந்தைகள்மீது செலுத்தப்படும் பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை வழங்கலாம்' என மத்திய மந்திரிசபை கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

போக்சோ
போக்சோ

சமீபகாலமாகக் குழந்தைகள்மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருவதால், அதைத் தடுக்கும் வகையில் தண்டனைகளைக் கடுமையாக்க, இதற்கென இருக்கும் பிரத்யேக சட்டமான போக்சோ சட்டத்தைத் திருத்தம்செய்ய சட்டத்துறைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதற்கேற்றார்ப்போல் திருத்தம் செய்யப்பட்ட புதிய போக்சோ சட்டத்தில் பிரிவு 4, 5 மற்றும் 6-வது பிரிவுகளின் கீழ் மரண தண்டனை வழங்க சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. மந்திரி சபையின் இரு அவைகளிலும் இது ஒப்புதல் பெற்றபின், விரைவில் இச்சட்டம் நடைமுறைக்கு வந்துவிடும்.

இக்குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வாகுமா, இதற்கென இருக்கும் போக்சோ சட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் விதமாக, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக குழந்தைகள் நல உரிமையில் செயல்பட்டுவரும் தேவநேயனிடம் பேசினோம்.

தேவநேயன்
தேவநேயன்
விகடன்

"தூக்குத் தண்டனையால் குற்றங்கள் குறைந்துவிடுமென நான் நம்பவில்லை. அது, தீர்வும் இல்லை. மந்திரி சபையில் மரண தண்டனைக்கு ஒப்புதல் அளித்த அன்றே, குழந்தைப் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நான்கு நடைபெற்றன. போக்சோ சட்டத்தைப் பொறுத்தவரை அரசாங்கம் அதில் திருத்தம் செய்வதைவிட, இருக்கிற சட்டத்தை ஒழுங்காக நடைமுறைப்படுத்தினாலே போதும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போக்சோ சட்டத்தின்படி, நான்கே மாதத்திற்குள் ஒரு வழக்கை முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். நீதி என நான் குறிப்பிடுவது, தவறு செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதை மட்டும் உள்ளடக்கியதல்ல. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடல் உபாதையிலும் உளவியல் சிக்கலிலுமிருந்து மீள்வதற்கு என்ன கட்டமைப்பு வசதி அரசுத் தரப்பிடம் இருக்கிறது?

குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம்
குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம்

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இதைக் கண்காணிக்க ஓர் அமைப்பு இல்லை. இதற்கென இருக்கும் தமிழக மாநிலக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் இயங்கவே இல்லை. அவர்களுக்கென ஒரு வக்கீல் இல்லை. ஆவணக் காப்பகம் இல்லை.

சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வுசெய்யவோ தொடர்ந்து கண்காணிக்கவோ பணமில்லை. கேரளாவில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு ஐந்து கோடி ரூபாய் முதல் ஏழு கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் 53 லட்சம் ரூபாய் மட்டுமே செலவுசெய்கிறார்கள்.

தஷ்வந்த்
தஷ்வந்த்
விகடன்

'போக்சோ சட்டம் பாய்ந்தது' என செய்தித்தாள்களில் நாம் படிப்பதோடு கடந்துவிடுகிறோம். அதற்குப் பிறகு நடப்பது என்ன?

ஏழு வயது குழந்தையை வன்புணர்வு செய்து கொலை செய்கிறான். அந்தக் குழந்தையைக் கொண்டுபோய் எரிக்கிறான். இவ்வளவு பெரிய கொடுமையைச் செய்த தஷ்வந்த், மூன்றே மாதத்தில் எப்படி விடுதலையாக முடிந்தது? ஒருவேளை, அவன் அம்மாவைக் கொலை செய்யவில்லை எனில், இப்போது அவன் வெளியே சுற்றிக்கொண்டுதானே இருப்பான்.

போக்சோ
போக்சோ
நீதிமன்றம்

2014-ல் தேனியில், ஒரு 10 வயது குழந்தையை மூன்றுபேர் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து கொலைசெய்தார்கள். 2015-ல் தேனி மகளிர் நீதிமன்றத்தில் மூன்றுபேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. மேல்முறையீட்டில் 2016-ல் மூன்றுபேரும் தவறே செய்யவில்லை என விடுதலை செய்யப்பட்டார்கள்.

நம்முடைய நீதித்துறை இயங்கும் விதம் இப்படித்தான் இருக்கிறது. ஆக, சட்டத்தில் திருத்தங்கள் செய்வதோ, தண்டனைகளைக் கடுமையாக்குவதோ முக்கியம் எனினும், இருக்கிற சட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதுதான் அதைவிட முக்கியம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு