
நம் நாட்டில் அமைச்சர்கள், பிரதமர், முதலமைச்சர் போன்றவர்களை ‘மாண்புமிகு' என்ற அடைமொழியுடன் அழைப்பது மரபு.
கமல்ஹாசனின் கனவுப் படமான ‘மருதநாயகம்' படத் தொடக்க விழாவிற்கு வருகைதந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், இளவரசி டயானாவின் மாமியாராக பலருக்கும் நினைவில் இருப்பார். அவர் ஆட்சிக்கு வந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கொண்டாட்டங்கள் நடந்து முடிந்து சில வாரங்களிலேயே அவர் இறந்தது பிரிட்டனில் பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மூத்த மகன் சார்லஸ் (மறைந்த டயானாவின் கணவர்) பிரிட்டன் அரசராக அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 17-ம் நூற்றாண்டில் எப்படி சடங்குகள் நடந்திருக்குமோ அதே முறையில் இதற்கான சடங்குகள் நடந்தேறின. மூன்றாம் சார்லஸ் என அவர் இனி அழைக்கப்படுவார். சார்லஸ் - டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம் இப்போது வேல்ஸ் இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டயானாவுடன் விவாகரத்து ஆவதற்குக் காரணமாக இருந்த சார்லஸின் அன்றைய காதலி கமீலாவை (ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர்) சில வருடங்களுக்கு முன்பு சார்லஸ் திருமணம் செய்துகொண்டார். அரசரின் துணைவியாக (Queen Consort) அவர் சென்ற வாரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வின்ஸ்டன் சர்ச்சில் முதல் கடந்த வாரம் பிரிட்டிஷ் பிரதமரான லிஸ் ட்ரஸ் வரை 15 பிரிட்டிஷ் பிரதமர்கள், ட்ரூமன் முதல் ஜோ பைடன் வரையிலான 14 அமெரிக்க ஜனாதிபதிகள் (லிண்டன் ஜான்சன் தவிர), ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை பத்துக்கும் மேற்பட்ட இந்தியப் பிரதமர்கள்... எலிசபெத் மகாராணி சந்தித்துக் கலந்துரையாடிப் பணியாற்றிய அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர். அத்தனை பிரதமர்களும் ஜனாதிபதிகளும் வந்தார்கள், போனார்கள். மாறாது 70 ஆண்டுக் காலம் ஆட்சி செய்தது எலிசபெத் மகாராணி மட்டுமே.

நம் நாட்டில் அமைச்சர்கள், பிரதமர், முதலமைச்சர் போன்றவர்களை ‘மாண்புமிகு' என்ற அடைமொழியுடன் அழைப்பது மரபு. பிரிட்டிஷ் மகாராணியை ‘மாட்சிமை தாங்கிய மகாராணி' (Her Majesty, the Queen) என்று அழைப்பது வழக்கம். இங்கிலாந்தில் அத்தனையும் அவர் பெயர் தாங்கி இருக்கும். அரசாங்கமே, `மாட்சிமை தாங்கிய மகாராணியின் அரசாங்கம்' (Her Majesty's Government) என்றுதான் அழைக்கப்படுகிறது. கரன்சிகள் அனைத்திலும் அவரது முகத்தைக் காணலாம். அவருக்கு விசுவாசத்துடன் இருப்பதாகச் சொல்லித்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கின்றனர். பிரிட்டிஷ் பாஸ்போர்ட்கள் அனைத்தும் அவர் பெயர் தாங்கியே தரப்படுகின்றன. நாடாளுமன்றக் கூட்டத்தொடரை அவர்தான் தொடங்கி வைக்கிறார். வாரம் ஒரு முறை பிரதமரைச் சந்திக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எந்த அரசாங்கமும் அவர் அனுமதி பெற்றே இயங்கத் தொடங்குகிறது. பிரதமரை அவரே நியமிக்கிறார். அவரைச் சந்தித்தே தன் ராஜினாமாக் கடிதத்தை சென்ற வாரம் போரிஸ் ஜான்சன் கொடுத்தார். மகாராணியின்றி ஒன்றுமே அசையாத ஒரு நிலை காணப்பட்டாலும், அதில் ஒரு மிகப்பெரிய முரண் இருக்கிறது.
அவருடைய அதிகாரம் அனைத்தும் பெயரளவில்தான். அவர் பெயரால் அனைவரும் நியமிக்கப்படுகிறார்களே தவிர, தான் விரும்பிய எவரையும் அவரால் நியமிக்க முடியாது. மக்களை பாதிக்கும் எந்த ஒரு பிரச்னை பற்றியும் தனது தனிப்பட்ட கருத்தை வெளிப்படையாக அவரால் சொல்ல முடியாது. அதிகபட்சம், அவரைச் சந்திக்கும் பிரதமரிடம் அதுபற்றிப் பேசலாம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கச் சொல்லி பிரதமரை நிர்பந்திக்க முடியாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கேள்வி கேட்கவோ, தட்டிக் கேட்கவோ அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. (அத்தனை எதிர்ப்புகளுக்கு இடையே பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தை அன்றைய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒத்தி வைத்தபோது, மறுபேச்சு பேசாமல் மகாராணி அதில் கையெழுத்திட்டார். இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றம் அந்த ஒத்திவைப்பு முயற்சியை ரத்து செய்தது வேறு விஷயம்!)
‘‘அவர் எங்களுக்கு ஒரு நல்ல ஆலோசகராக, வழிகாட்டியாக, நம்பிக்கைக்குரிய நண்பராக இருந்தார்'' என முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்கள் அத்தனை பேரும் பேட்டி கொடுத்தார்கள்.
ஒருபுறம், கிட்டத்தட்ட தங்கள் குடும்ப அங்கத்தினர் மாதிரி அவர் பிரிட்டன் மக்கள் பலரால் பார்க்கப்பட்டார். அதேநேரம், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் உலகெங்கிலும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கையில் மன்னராட்சி எதற்காக' எனக் கேள்வி கேட்கும் மக்களாட்சி ஆதரவாளர்கள் ஒரு பெரும் இயக்கமாகவே இங்கிலாந்தில்இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
‘அவருடைய மரணத்திற்கு வருந்துகிறோம். இருப்பினும் நாங்கள் மன்னராட்சியை எதிர்க்கிறோம். புதிய அரசராக சார்லஸை ஏற்க மறுக்கிறோம்' என Sinn Fein என்கிற ஐரிஷ் அரசியல் கட்சி அறிவித்துள்ளது.
இந்தியா உட்பட எத்தனையோ நாடுகளை இங்கிலாந்து அடிமையாக வைத்திருந்ததை சரித்திரத்திலிருந்து மாற்றிவிட முடியாது. ‘ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்ற குரல்கள் எலிசபெத் மகாராணியின் இந்திய வருகையின்போது எழுந்தன. ‘‘சரித்திரத்தில் சில சம்பவங்கள் சோகம் தரக்கூடியவை. சில சம்பவங்கள் மகிழ்ச்சி தரக்கூடியவை. சோக சம்பவங்களிலிருந்து நாம் பாடம் கற்கலாம்'' என்ற ரீதியில் அவர் மன்னிப்பு கேட்காமல் அதைக் கடந்து போனது சர்ச்சைக்குள்ளானது.
சொல்லப்போனால், 2012-ல் அன்றைய அரசாங்கம் எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக அரச குடும்பத்திற்கு வருடா வருடம் தரப்படும் - கிட்டத்தட்ட ஊதியம் அல்லது கப்பம் மாதிரி தரப்படும் - தொகை சீரமைக்கப்பட்டது. அரச குடும்பத்தின் செலவுகள் இன்றைக்கு தணிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றன.

ஒரு காலத்தில் இங்கிலாந்தின் காலனியாக இருந்து விடுதலை பெற்ற பிறகுகூட ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு இன்றும் இங்கிலாந்து மகாராணியே ஆட்சித் தலைவராகக் கருதப்படுகிறார். (இனி சார்லஸ் மன்னர் அந்தப் பதவியை வகிப்பார்). ஆனால் இந்த முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று குரல்கள் அத்தகைய நாடுகளில் இன்றும் ஒலிக்கின்றன. இங்கிலாந்தின் காலனியாக இருந்து விடுதலை பெற்ற நாடுகள் சேர்ந்த அமைப்புதான் காமன்வெல்த் என்று அழைக்கப்படும் கூட்டமைப்பு. அந்தக் கூட்டமைப்பை விரும்பாமலும் சில நாடுகள் வெளியேறுகின்றன. அண்மையில் இப்படி வெளியேறிய நாடு பார்படாஸ்.
‘‘ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த நவீன உலகுக்கு ஏற்ப தங்களை எப்படி மாற்றிக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அரச குடும்பங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும்'' என்று சொல்கிறார் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஒருவர். மன்னராகப் பதவியேற்ற பிறகு பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்த சார்லஸ், மறைந்த மகாராணிக்கு மலரஞ்சலி செலுத்த வாசலில் காத்திருந்த மக்களை, தான் வந்த காரிலிருந்து இறங்கி சந்தித்து உரையாடியது ஒரு பெரிய கலாசார மாற்ற நிகழ்வாகச் செய்தியானது.
கடவுளுக்கு சற்று அருகில் வழிபாட்டுக்குரியவராக அரச குடும்பம் நிறைய மக்களால் பார்க்கப்படுவது ஒருபுறம்; அதேநேரம் சர்ச்சைகளால் உள்ளூர்வாசிகளும் மற்றும் இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தை மறக்காத (அல்லது மறக்க விரும்பாத) எத்தனையோ நாடுகளால் வில்லியாகப் பார்க்கப்படுவது மற்றொரு புறம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கூட மண்டியிட்டு வணங்கக்கூடியவர் என்ற அதிகாரமிக்க பதவி ஒருபுறம்; அரசாங்கத்தில் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடக்கூடிய நிஜமான அதிகாரம் எதுவுமே இல்லாத நிலை இன்னொரு புறம். பல வசதிகளைக் கொண்ட அலங்காரமான பதவி என்பதைத் தவிர வேறு எப்படி இதை விவரிக்க முடியும்?
ஒரு சராசரிப் பணியாளர் ஓய்வு பெறக்கூடிய 73 வயதில் மன்னர் ஆகியுள்ளார் சார்லஸ். பாரம்பரியத்தை நவீனத்துடன் கைகோக்கச் செய்வதுதான் அவர் எதிர்கொள்ளக்கூடிய பெரும் சவால். பல சரித்திர நிகழ்வுகள் நம் கண்ணெதிரே நிகழக் காத்திருக்கின்றன.