சினிமா
Published:Updated:

ஷேர்பட்டா பரம்பரை! - “சினிமாதான் அடுத்த இலக்கு!”

டீமுடன் ராஜா மற்றும் விஷ்வா
பிரீமியம் ஸ்டோரி
News
டீமுடன் ராஜா மற்றும் விஷ்வா

லாக்டௌன் காலத்தில் எங்களால எந்த வீடியோவும் எடுக்க முடியலை. எங்களுடைய டைரக்டர் ஒருத்தருக்கு சொந்த ஊர் சீர்காழி. டீம் முழுக்கவும் சீர்காழிக்குப் போயிட்டோம்.

‘ஒவ்வொரு தோல்வியிலும் ஒவ்வொரு விஷயம் கத்துக்கிறோம்!’ என நம்பிக்கை ததும்பப் பேச ஆரம்பித்தார்கள், ராஜா மற்றும் விஷ்வா. இவர்கள் வெரைட்டியான கான்செப்ட்களில் வீடியோக்களை எடுத்து அவர்களுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறார்கள். மிகக் குறுகிய காலத்திலேயே தங்களுக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்தது குறித்து நம்மிடையே பேசத் தொடங்கினார்கள்.

ஷேர்பட்டா பரம்பரை! - “சினிமாதான் அடுத்த இலக்கு!”

“பல தோல்விகளைச் சந்திச்சதனால ‘இதுதான் கடைசி. இந்த முறையும் சாதிக்கலைன்னா இனிமே யூடியூப் தளத்திற்கு வரவே வேண்டாம்’ என்கிற முடிவில்தான் இந்தச் சேனலை ஆரம்பிச்சோம் அதனால்தான் இந்தச் சேனலுக்கு ‘நாக்-அவுட்’ எனப் பெயர் வச்சோம்” என்ற விஷ்வாவைத் தொடர்ந்து ராஜா பேசத் தொடங்கினார். இவர்கள் இருவரும்தான் இந்த நாக்-அவுட் பரம்பரையின் ரங்கன் வாத்தியார்கள். சின்னச்சின்ன கான்செப்ட்களை எடுத்து ரசிக்கவைக்கும் வீடியோக்கள்தான் ‘நாக்-அவுட்’ சேனலின் பலம்.

“நான் முன்னாடி வேலை பார்த்த சேனலில் பண ரீதியாகச் சில பிரச்னைகள் இருந்ததனால அங்கிருந்து வெளியேறினேன். பிறகு, கேமராவை வாடகைக்கு விட்டு அதன் மூலமா கிடைக்கிற பணத்தை வச்சு என்னுடைய தேவையைப் பூர்த்தி செய்துட்டிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் விஷ்வாவும் என்கூட வந்து சேர்ந்தார். ரெண்டு பேரும் சேர்ந்து கேமராவை வாடகைக்குக் கொடுக்கிற பிசினஸ் பண்ணிட்டிருந்தோம். எங்க ரெண்டு பேருக்குமே யூடியூப் சேனல் ஆரம்பிக்கணுங்குற எண்ணம் இருந்துச்சு. அதனால சேர்ந்தே சேனலும் ஆரம்பிச்சோம்.

ஷேர்பட்டா பரம்பரை! - “சினிமாதான் அடுத்த இலக்கு!”

கிருஷ்ணகிரி மாவட்டத்துல உள்ள தேவர் குந்தாணிங்குற கிராமம்தான் என் சொந்த ஊர். சினிமா மேல உள்ள காதல்னால ஐ.டி வேலையை விட்டுட்டு சென்னைக்கு வந்தேன். பல தடைகளைத் தாண்டி இப்போ எனக்கான அங்கீகாரம் கிடைச்சிருக்கு” என்று ராஜா சொல்லி முடித்ததும் விஷ்வா தொடர்ந்தார்.

“எனக்குத் திருச்சிங்க. எங்க வீட்ல இந்த மாதிரி ஒரு சேனல் ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னதும் ‘உனக்கு என்ன பண்ணணும்னு ஆசை இருக்கோ அதை மனப்பூர்வமாப் பண்ணு’ன்னு சொன்னாங்க. எந்த அளவுக்கு ஃபேமிலி சப்போர்ட் பண்ணுனாங்களோ அந்த அளவுக்கு என் ஃப்ரெண்ட்ஸும் சப்போர்ட்டா இருந்தாங்க. பணரீதியா எப்போ என்ன தேவைன்னாலும் யோசிக்காம உதவி பண்ணுவாங்க. அதனாலதான் தைரியமா என் கனவை நோக்கின முதல் அடியை என்னால எடுத்து வைக்க முடிஞ்சது.

2019 டிசம்பர் 23 இந்த சேனலை ஆரம்பிச்சோம். 2020 ஜனவரியில் முதல் வீடியோவை அப்லோடு பண்ணினோம். ஒவ்வொரு சீரிஸா நிறைய கான்செப்ட்களில் வீடியோ எடுக்க ஆரம்பிச்சோம். ரொம்பக் குறுகிய நாள்களிலேயே எங்க சேனல் பற்றிப் பலருக்கும் தெரிய ஆரம்பிச்சது. காதல், நட்பு, குடும்பம்னு ஒவ்வொரு கான்செப்ட்டுக்கும் அவ்வளவு மெனக்கெட்டோம்” என்றதும், அவர்களுக்கு ஷூட்டிங்கில் ஏற்பட்ட அனுபவம் குறித்து ராஜா பகிர்ந்தார்.

ஷேர்பட்டா பரம்பரை! - “சினிமாதான் அடுத்த இலக்கு!”
ஷேர்பட்டா பரம்பரை! - “சினிமாதான் அடுத்த இலக்கு!”

“லாக்டௌன் காலத்தில் எங்களால எந்த வீடியோவும் எடுக்க முடியலை. எங்களுடைய டைரக்டர் ஒருத்தருக்கு சொந்த ஊர் சீர்காழி. டீம் முழுக்கவும் சீர்காழிக்குப் போயிட்டோம். முதல் பதினைந்து நாள்கள் நாங்க எல்லோரும் எந்த வேலையும் பார்க்காமல் எங்களைத் தனிமைப்படுத்திக்கிட்டோம். பதினைந்து நாள்களில் அந்த இடத்துக்கு ஏற்ற மாதிரி கதைகளை ரெடி பண்ணினோம். பிறகு அங்கேயே ஷூட்டிங் முடிச்சு எடிட் பண்ணினோம். ஆனா, அந்த டைம்ல எங்களால நினைச்ச நேரத்துக்கு வீடியோவை அப்லோடு பண்ண முடியலை. நிறைய வீடியோக்கள் டைமிற்கு ரிலீஸ் பண்ண முடியாமப்போச்சு. இப்போ வரிசையா நிறைய வீடியோக்கள் ரிலீஸுக்காக வச்சிருக்கோம். ஒவ்வொரு சீரிஸ் மேலேயும் நிறைய நம்பிக்கை இருக்கு. நிச்சயம் எல்லாமே நல்ல ரீச் கொடுக்கும்.

ஓ.டி.டி தளத்திற்காக ஒரு கதை ரெடி பண்ணினோம். கதை முடிச்சு பாதி ஷூட் பண்ணிட்டோம். அந்தச் சமயம்தான் ‘சில்லுக்கருப்பட்டி’ படம் ரிலீஸ் ஆச்சு. அப்போ தான் ஓ.டி.டி-க்காக நாங்க ரெடி பண்ணுன கதையும், ‘சில்லுக்கருப்பட்டி’ கதையும் ஒரே மாதிரி இருந்தது தெரிஞ்சது. அதனால படத்தைப் பாதியோட நிறுத்திட்டோம். அதுல எங்களுக்கு பயங்கர நஷ்டம் ஏற்பட்டுச்சு. அந்தச் சமயம் ரொம்பவே உடைஞ்சுபோயிட்டோம். ஆனாலும், எங்க நண்பர்களும் குடும்பமும் கொடுத்த நம்பிக்கையில் அதிலிருந்து மீண்டு வந்தோம். ஒவ்வொரு தோல்வியையும் அடுத்த கட்டத்துக்கான வளர்ச்சியா எடுத்துக்கிட்டோம். அதுதான் எங்க வெற்றிக்குக் காரணம்னு நினைக்கிறோம்.

ஷேர்பட்டா பரம்பரை! - “சினிமாதான் அடுத்த இலக்கு!”
ஷேர்பட்டா பரம்பரை! - “சினிமாதான் அடுத்த இலக்கு!”

எங்க டீம்ல கிட்டத்தட்ட 25 பேர் இருக்காங்க. எல்லோருமே சினிமாவில் சாதிக்கணுங்குற ஆசையில் மட்டுமே எங்ககூட இணைஞ்சாங்க. நாங்க எங்க சேனலை ஒரு பேனருக்குக் கீழே கொண்டு வரத் திட்டமிட்டிருக்கோம். அந்த பேனர் மூலமா ஒரு படம் பண்ணணுங்குறதுதான் இப்போதைக்கு எங்க டீமோட இலக்கு. 2023-க்குள் நிச்சயம் அந்த இலக்கை அடைஞ்சிடுவோம்” என்றவரின் தோளை இறுகப் பற்றிக்கொண்டார் விஷ்வா.