பழங்காலத்தில் அரசரின் ஆணைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பாறைகளில் அவற்றை செதுக்கி பதிவு செய்யும் வழக்கம் இருந்து வந்துள்ளது. உளியால் கற்களில் வெட்டிப் பதிவிடுவதால் அதனை ‘கல்வெட்டு’ என்று அழைத்தார்கள். தமிழ்மொழியின் வரலாறு அறிய கல்வெட்டுகள் முக்கிய சான்றுகளாய் இருக்கிறது.
அடித்தல், அழித்தல், திருத்தல், மாற்றி எழுதுதல், புதிதாக ஒன்றைச் சேர்த்து எழுதுதல் என்று எவ்வகையிலும் யாரும் பின்னாட்களில் மாற்றிவிடக்கூடாது என்பதால் இப்படி கல்லில் செதுக்கப்படும் ஒரு நடைமுறை கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்பும் எந்த மாற்றமுமின்றி இந்த சான்றுகள் உள்ளது உள்ளபடியே நமக்கு கிடைத்துள்ளன.
கல்வெட்டுச் சான்றுகள் முதன்மைச் சான்றுகளாக வரலாற்றில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கல்லெழுத்துக் கலையாக கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் பரிணமித்துள்ளன. இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையில் கல்வெட்டுகள் தமிழகத்திலேயே கிடைத்துள்ளன. அதாவது இந்தியாவில் உள்ள மொத்த கல்வெட்டுகளில் 60 சதவிகிதம் தமிழ்நாட்டில்தான் உள்ளது.

கல்வெட்டுகள் அதன் காலகட்டம் மற்றும் மொழி வடிவத்திற்கு ஏற்ப நான்கு வகையில் அழைக்கப்படுகிறது. தமிழ் பிராமி கல்வெட்டுகள் என்று அழைக்கப்பட்ட கல்வெட்டுகள் அதன் கால கட்டமும் வரலாற்று ஆய்வுகள் மற்றும் புதிய தெளிவுகளின் அடிப்படையில் இன்று தமிழி கல்வெட்டுகள் என்று அழைக்கப்படுகிறது. இவை தவிர்த்து தமிழகத்தில் வட்டெழுத்துக் கல்வெட்டுகள், கிரந்த கல்வெட்டுகள், தமிழ் கல்வெட்டுகள், பிறமொழி கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.
மதுரையை கல்வெட்டுகளின் தலைநகரம் என்றே அழைக்கலாம். திருப்பரங்குன்றம், அழகர்மலை, கருங்காலக்குடி, மேட்டுப்பட்டி, விக்கிரமங்கலம், அரிட்டாப்பட்டி, நரசிங்கம், வரிச்சூர், கொங்கர் புளியங்குளம், கீழவளவு, திருவாதவூர், முத்துப்பட்டி, மீனாட்சிபுரம் ஆகிய இடங்களில் 2500 ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டுகள் இருக்கின்றன.
கீழக்குயில்குடி, அரிட்டாப்பட்டி, ஆனைமலை, முத்துலிங்காபுரம், யா.நரசிங்கம்பட்டி ஆகிய இடங்களில் 9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை பெரும்பாலும் அரசு ஆணைகளாக விளங்குகின்றன.
ஆனையூர், திடியன், நிலையூர், உலகாணி, முத்துலிங்காபுரம், அழகர்கோயில், எழுமலை, அல்லிகுண்டம், உறப்பனூர், கள்ளிக்குடி, நல்லமறம் ஆகிய ஊர்களில் கிரந்தக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
கள்ளிக்குடி, உலகாணி, நலமறம், சாத்தங்குடி, திருவாதவூர், எழுமலை, சிந்துப்பட்டி, அலப்பலச்சேரி, வடக்கம்பட்டி, சந்தையூர், பழையூர், அழகர்கோயில், முத்துலிங்கபுரம், திரளி, பேரையூர், தும்மநாயக்கன்பட்டி, மேலத்திருமாணிக்கம், ஆனையூர், திடியன், கூடக்கோயில், கொக்குலாஞ்சேரி, புளியக்கவுண்டன்பட்டி, சின்னப்பூளாம்பட்டி, வெள்ளமடம் ஆகிய இடங்களில் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.
ஆனையூர், கூடக்கோயில் ஆகிய இரு இடங்களில் பிறமொழிக் கல்வெட்டுகள் உள்ளன. இந்த பகுதிகளை நீங்கள் மதுரை மாவட்டத்தின் வரைபடத்தில் பார்த்தால் அவை மாவட்டம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன என்பதை கண்களால் உணர முடியும்.
மதுரையில் உள்ள மலைகளில் உள்ள பல்வேறு கல்வெட்டுகளில் கிடாரிப்பட்டி மற்றும் மாங்குளம் ஆகிய இரு மலைகளில் உள்ள கல்வெட்டுகளில் என்ன செய்திகள் உள்ளது என்பதை நாம் பார்க்கலாம்.
அழகர்மலை - கிடாரிப்பட்டி
அழகர்மலை சங்ககால தமிழர் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க பெயர் பெற்ற மலைகளில் ஒன்று. அழகர்கோயிலை சூழ்ந்துள்ள இந்த மலைகளில் கிடாரிப்பட்டி கிராமத்திற்குப் பின்புறம் உள்ள மலையில் உள்ள குகையின் முகப்பில் 13 இடங்களில் சிறு சிறு வரிகள் கொண்ட தமிழி கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் 2200 ஆண்டுகளுக்கு முன்பாக வெட்டப்பட்டவைகள். இங்குள்ள தமிழ் பிராமி கல்வெட்டுக்களின் சிறப்பம்சங்களில் ஒன்று 'மதிரை' என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளதுதான். இந்த மதிரை என்ற சொல் 2200 ஆண்டுகளுக்கு முன்பான இன்றைய மதுரையின் பெயராக இருந்து வந்துள்ளது என்பதன் மூலம் நமது மதுரையின் தொன்மையை நம்மால் உணர முடிகிறது.
மதிரை பொன் கொல்லன் அதன் அதன்
… அனாகன் த…
மத்திரைகே உபு வாணிகன் வியக்கன் கணதிகன்
கணக அதன் மகன் அதன் அதன்
சபமிதா இன பமித்தி
பாணித வாணிகன் நெடுமலன்
கொழு வணிகன் எள சந்தன்
ஞ்சி கழுமாற நதன் தார அணிஇ கொடுபிதஅவன்
தன்மன் கஸபன் அவ்விரு அ அர்உம் குடுபிதோ
வெண்பளிஇ அறுவை வணிகன் எளஅ அடன்
தியன் சந்தன்
கணிநாகன் கணிநதன் இருவர் அமகல்
என்பவை தான் அந்த 13 கல்வெட்டுகள் கூறும் செய்திகளாகும்.
மதிரை பொன்குலவன், மதிரை உப்பு வணிகன், மதிரை அறுவை வணிகன், மதிரை பனித வணிகன், மதிரை கொல் வணிகன் (பொன், உப்பு, துணி, சர்க்கரை, இரும்பு) என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பகுதி ஒருங்கிணைந்த வணிக வளாகமாக, வர்த்தக சங்கங்களாக (Chamber of Commerce) செயல்பட்டு வந்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது.
இந்தக் குகைகளில் சமணர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பது இந்தக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்து வந்த வணிகர்கள்தான் படுக்கைகளையும், மலையில் புருவம் போன்ற அமைப்பையும் சமணர்களுக்கு வெட்டிக் கொடுத்து, பல தர்ம காரியங்கள் செய்துவந்துள்ளதாக இந்தக் கல்வெட்டுகள் கூறுகின்றன. கடல்வழி வணிகர்கள் பௌத்தத்தை ஆதரித்ததையும் உள்நாட்டு வணிகர்கள் சமணத்தை ஆதரித்ததையும் நாம் அறிவோம்.
இந்தப் பகுதியை மிகப் பெரிய 'வணிகபெருவழி' எனச் சொல்லலாம். இந்த மலை திண்டுக்கல் - மதிரை மற்றும் நத்தம் - மதிரை என இரு வழியாக இருந்துள்ளது. மேலும் இந்த வழியில் உள்ள ஆனைமலை, வெள்ளரிப்பட்டி, அரிட்டாபட்டி, மாங்குளம் மலைகளும் இதே கருத்தை (வணிகப்பெருவழியின் தொடர்ச்சி) உணர்த்துகிறது.
மாங்குளம் மீனாட்சிபுரம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியர்கள் மதுரையை ஆண்ட வரலாற்றை நாம் அறிவோம். இந்த வரலாற்றுக்கான முக்கியச் சான்றாக விளங்குவது மாங்குளம் மீனாட்சிபுரம் தமிழிக் கல்வெட்டுகள். தமிழக வரலாற்றிற்கு முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளைத் தருகின்றன. நெடுஞ்செழியன் என்ற சங்ககாலப் பாண்டிய மன்னனின் பெயர் பொறித்த இரண்டு கல்வெட்டுகள் மாங்குளத்தில் உள்ளன. செழியன், வழுதி போன்ற பாண்டியர் குடிப் பெயர்களும், பட்டப்பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
கணிய் நந்தஅ ஸிரிய்இ குவ் அன்கேதம்மம் இத்தாஅ நெடுஞ்சழியன் பண அன் கடல்அன் வழுத்திப் கொட்டு பித்தஅ பளி இய்
என்பது முதல் கல்வெட்டு. நெடுஞ்செழியனின் அலுவலன் கடலன் வழுதி, கணிநந்த ஸ்ரீகுவன் என்ற துறவிக்கு இப்பள்ளியையும், கற்படுக்கைகளையும் வெட்டிக்கொடுத்ததைக் குறிப்பிடுகிறது.
கணிய் நத்திய் கொடிய் அவன்
என்ற மற்றொரு கல்வெட்டில் கொடிய அவன் என்பது கொட்டிய அவன் என்பதன் சிதைந்த வடிவம். இதற்கு கல்லில் வெட்டிக் கொடுத்தவன் என்று பொருளாகும்.
கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇயபளிய்
என்னும் கல்வெட்டு தனியான குகையில் மிகத் தெளிவாகவும், அழுத்தமான எழுத்துக்களாகவும் வெட்டப்பட்டுள்ளது. நெடுஞ்செழியனின் சகலையான இளஞ்சடிகனின் தந்தை சடிகன் என்பவர் இக்கற்படுக்கையை கணிய்நந்தஸ்ரீகுவனுக்கு அமைத்துக் கொடுத்துள்ளார் என்பது அதன் செய்தியாகும்.
கணி இ நதஸிரிய்குவ(ன்)வெள் அறைய் நிகமது காவிதிஇய் காழிதிக அந்தை அஸீதன் பிணஉ கொடுபிதோன்

இந்த நீண்ட கல்வெட்டின் பொருள், வெள்ளை நிகமத்தைச் சேர்ந்தவனும் காவிதிப் பட்டம் பெற்றவனுமான காழிதிக அந்தை அஸீதன என்பவன் இக்கற்பள்ளியை கணிநந்தஸ்ரீகுவனுக்கு வெட்டிக் கொடுத்தான் என்பது ஆகும். வெள்ளறை நிகமம் என்பது வெள்ளறை என்னும் சிற்றூரில் அமைந்திருந்த ஒரு வணிகக் குழு. வெள்ளறை என்பது மாங்குளத்திற்கு அருகிலுள்ள வெள்ளரிப்பட்டி என்னும் ஊருக்கு உரிய பெயராகும். நிகம என்னும் வடசொல் நிகமம் எனப்படுகிறது. வணிகக்குழுக்களைக் குறிக்கும். தற்போது கூட பாரத் சஞ்சார் நிகாம் என்பதை காணலாம். காவிதி என்ற பெயர் சங்ககாலத்திலேயே வழங்கப்பட்ட சிறப்புப்பட்டமாகும். இது தற்போது வழங்கப்படும் கலைமாமணி போன்ற பட்டம் போன்றதாக இருந்திருக்கலாம் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள்.
சந்தரிதன் கொடுபிதோன்
என்னும் மற்றொரு கல்வெட்டு சந்தரிதன் என்ற தனிப்பட்ட நபர் ஒருவர் செய்த கொடையைக் குறிக்கிறது.
வெள்அறை நிகமதோர் கொடி ஓர்
என்னும் கல்வெட்டில், வெள்ளறை என்னும் கிராமத்தின் வணிகக்குழுவினர் செய்து கொடுத்த பள்ளி என்பது இதன் பொருள்.

மாங்குளம் கல்வெட்டில் தம்மம் (தர்மம்), அசுதன் (மகன்), சாலகன் (சகலன்) போன்ற பிராகிருதச் சொற்கள் கலந்து காணப்படுகிறது. மேலும், இங்குள்ள கல்வெட்டுக்களில் கடல் அன் என்று பிரித்தே எழுதப்பட்டுள்ளது. உயிர் மெய் சேர்த்து கடலன் என எழுதும் வழக்கத்திற்கு முந்தைய கால கல்வெட்டுகள் இவை.
இந்தக் கல்வெட்டுகளின் மூலம் சங்ககாலத்தில் மக்கள் வாழ்ந்த முறைகளையும், கல்வி நிலையையும் அறிந்து கொள்ள முடிகிறது. வடநாட்டிலுள்ள கல்வெட்டுகள் எல்லாம் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தியிருப்பதைக் காட்டுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அரசர்கள், வணிகர்கள், மக்கள் என அனைவரும் இந்த எழுத்துகளை பயன்படுத்தியிருப்பதை குகைத்தளங்கள், பானைஓடுகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைக்க இது போன்ற தொன்மையான கல்வெட்டுகள் உதவியது. இவற்றைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது நமது கடமை. ஆனால் இந்தக் கடமையை நாம் நிறைவேற்றுகிறோமா?
மதுரையைச் சுற்றியிருக்கும் மலைகளில் இந்தக் கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் இத்தனை பெரிய பொக்கிஷங்களை பார்க்க நீங்கள் செல்ல வேண்டும் என்றால் இவற்றைப் பற்றிய விவரங்கள் முழுமையாக எந்தப் பொதுத் தளத்திலும் இல்லை. மதுரையின் சுற்றுலா தளங்களின் பட்டியலிலும் இந்த இடங்கள் இல்லை. பல குகைகளில் காலியான டாஸ்மாக் மது பாட்டில்கள், ப்ளாஸ்டிக் டம்ளர்கள்தான் உங்களை வரவேற்கும். நம்முடைய மூதாதையர்கள் வாழ்ந்த இந்தக் குகைகளில் ஒரு வழிகாட்டியோ, ஒரு காவலாளியோ கூட கிடையாது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு தொல்லியல் துறை, மத்திய தொல்லியல் துறை இந்த அமைப்புகள் ஏன் வருவாய் அதிகாரம் படைத்த அமைப்புகளாக இல்லை. இத்தனை அமைப்புகள் நம் நாட்டில் இருக்கும் போதிலும் ஏன் இத்தனை தொன்மையான இடங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளை சுற்றி வாழ்பவர்களால்தானே இவற்றை இன்னும் பொறுப்புடன் பாதுகாக்க இயலும், இதனை சுற்றிய கிராமப்புறங்களில் இருந்து கூட இளைஞர்களுக்கு இத்தகைய இடங்களைப் பராமரிக்கும் பயிற்சியளிக்கப்பட்டு ஒரு தொண்டர் படை உருவாக்கப்படக் கூடாதா?
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுக் கொடுத்த தொன்மையான கல்வெட்டுகள் இப்படி கேட்பாரற்று, பராமரிப்பின்றி கிடப்பது நியாயம் தானா?! நம் காலத்தில் இதை அறிந்து அமைதி காக்கும் நாமும் குற்றவாளிகள்தானே?!