
விபத்தில் உயிரிழந்த கனகராஜ் குறித்து விசாரணை நடத்தியதில், கர்நாடகத்தில் ஏகப்பட்ட ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஜெயலலிதாவின் இரும்புக்கோட்டையாக அறியப்பட்ட கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை என ‘திக்திக்’ சம்பவங்கள் அரங்கேறி ஆண்டுகள் ஐந்து உருண்டோடிவிட்டன. ஆனாலும் இந்த விவகாரத்தில் புதைந்திருக்கும் மர்மங்கள் முடிச்சவிழ்க்கப்படாமலேயே தொடர்கின்றன!
14 முறை கால அவகாசம்!
நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் கொடநாடு வழக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கிட்டத்தட்ட தீர்ப்பை எட்டும் நிலைக்குச் சென்றது. ஆனால், தேர்தலுக்குப் பின் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாகவே... வழக்கின் வேகம் குறைந்தது. வழக்கில், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சயானுக்கு, கடந்த 2021, ஜூலையில் ஜாமீன் கிடைத்தது. ஜாமீனில் வெளிவந்த சயான், ‘தன்னிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்’ என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து திரியைக் கொளுத்திப்போட்டார். இதையடுத்து அரசுத் தரப்பில், கூடுதலாக இரண்டு சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.

மேலும் ‘இந்த வழக்கில், கூடுதல் புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என நீதிமன்றத்திடம் தகவல் தெரிவித்த காவல்துறை, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் கூடுதல் புலன் விசாரணையையும் தொடங்கியது. அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கூடுதல் புலன் விசாரணை தொடங்கப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட விசாரணையில் காவல்துறை தரப்பில் தற்போது வரை 14 முறை கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த தாமதம்?
வழக்கு, `கன்னித்தீவு’ கதையாக நீண்டு செல்வது ஏன் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான ஷாஜகானிடம் கேட்டோம். “கூடுதல் புலன் விசாரணையின் அடிப்படையில் தற்போது வரை 316 பேர் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சேலம் வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜ் மொத்தம் 13 சிம் கார்டுகள் பயன்படுத்திவந்திருப்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இதில் ஆறு சிம் கார்டுகள் கனகராஜ் பெயரில் இருந்திருக்கிறது.
சம்பவம் நடப்பதற்கு முன்பும், சம்பவத்துக்குப் பின்பும் கனகராஜ் சுமார் 100 நபர்களிடம் பேசியிருக்கிறார். அந்த நபர்கள் யார், யார் என விரிவாக விசாரிக்கவேண்டியிருக்கிறது. இதில் 516 தகவல் பரிமாற்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் இன்னும் கூடுதல் தகவல்கள் பெறவேண்டியிருக்கிறது. இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக பிற துறைகளிடமிருந்தும் தகவல்களைப் பெற வேண்டியிருக்கிறது. கேரளா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. எனவே, கூடுதல் கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம்” என்றார்.

டெல்லி லாபி!
கொடநாடு தனிப்படை விசாரணை குறித்து அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “இந்த வழக்கில் மிக முக்கியக் கட்டத்தை நெருங்கியிருக்கிறோம். அதாவது, இந்தச் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட நபருக்கு கொடநாட்டிலிருந்து போய்ச் சேர வேண்டிய ஆவணங்கள் அனைத்தும் கர்நாடக மாநிலம் வழியாக ஈரோட்டுக்குள் நுழைந்து அவருடைய கைக்குச் சென்றிருக்கின்றன. விபத்தில் உயிரிழந்த கனகராஜ் குறித்து விசாரணை நடத்தியதில், கர்நாடகத்தில் ஏகப்பட்ட ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அந்த மாநிலத்தில் சுதந்திரமாக விசாரணை நடத்த எங்களுக்கு ஏற்ற சூழல் அமையவில்லை. திட்டமிட்டே பல சிக்கல்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும், கனகராஜ் பயன்படுத்திய சிம் கார்டுகளின் தகவல் பரிமாற்றங்களை வழங்க ட்ராய் அமைப்பும் இழுத்தடித்துவருகிறது. ட்ராய்க்கு என்ன அழுத்தம் என்றே எங்களுக்குப் புரியவில்லை. இதே நிலை நீடித்தால், இன்னும் கால அவகாசம் கேட்பதைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை” என்றார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான விஜயன், வழக்கின் போக்கு குறித்து பேசியபோது, “ `தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி’ என்றும், `அவசரப்படுத்தப்பட்ட நீதி, புதைக்கப்பட்ட நீதி’ என்றும் சொல்வார்கள். இந்த இரண்டு சொல்லாடல்களும் கொடநாடு வழக்குக்குப் பொருந்தும். கடந்த ஆட்சியில், அதிகாரத்தைவைத்து இந்த வழக்கை அவசரகதியில் முடிக்கப் பார்த்தவர்கள், தற்போது டெல்லி லாபியைவைத்து இழுத்தடித்து வருகிறார்கள். தங்களுக்கு எதிராக இருக்கும் தடயங்களை அழிக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள். எனவே, தமிழக அரசு இந்த வழக்கு விசாரணையில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே உண்மைக் குற்றவாளியை மக்கள் முன்பு நிறுத்த முடியும்” என்றார் அழுத்தமாக.
உண்மையை எதைக்கொண்டும் மறைக்க முடியாது. நெருப்பைப்போல ஒருநாள் எல்லாவற்றையும் எரித்துக்கொண்டு வெளியே வரக்கூடும்!