அரசியல்
அலசல்
Published:Updated:

“வீடுகளை உடனே காலி செய்யணும்” - கறார் அதிகாரிகள்... கண்ணீர் சிந்தும் முதல்வர் தொகுதி மக்கள்!

கொளத்தூர்
பிரீமியம் ஸ்டோரி
News
கொளத்தூர்

இங்கிருக்கும் மக்களுக்கு வேறு இடம் வழங்குவது குறித்து அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. எனினும், மாற்று இடம் வழங்குவது குறித்து அரசுதான் முடிவுசெய்ய வேண்டும்.

சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலவர் மு.க.ஸ்டாலின், “ஏழை, எளிய மக்கள் வாழ்க்கைத்தரம் இந்த ஆட்சியின் மூலம் உயர்ந்தது என்பதே, இந்த ஆட்சியினுடைய சாதனையாக இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். ஆனால், அவரின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில், ஏரி புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமித்துக் குடியிருப்பதாகக் கூறி, ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் புகார் எழுந்திருக்கிறது. இது குறித்த தகவல்களைத் திரட்டத் தொடங்கினோம்...

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கங்கை அம்மன் கோயில் தெரு, திருவள்ளுவர் நகர், மகாத்மா காந்தி நகர், சிவசக்தி நகர் விரிவு, கண்ணகி நகர், சர்ச் தெரு, நீலமேகம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்துவருகின்றன. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாகக் குடிசை, கான்கிரீட் வீடுகளில் வசிக்கும் இவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், குறிப்பிட்ட இந்தப் பகுதிகள் நீர்நிலைப் புறம்போக்கு என்பதால், ‘ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளைக் காலி செய்ய வேண்டும்’ என்று தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் கடந்த 17.10.2022 அன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

“வீடுகளை உடனே காலி செய்யணும்” - கறார் அதிகாரிகள்... கண்ணீர் சிந்தும் முதல்வர் தொகுதி மக்கள்!

அதில், ‘கொளத்தூர் ஏரி நீர்வளத்துறைக்குச் சொந்தமானது. தாங்கள் ஏரியை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறீர்கள். எனவே, இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற 21 நாள்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு, அதற்குண்டான செலவுத் தொகையானது உங்கள்மீது விதிக்கப்படும். நிலப்பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு நீர்வளத்துறை எவ்விதப் பொறுப்பும் ஏற்காது’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திடீர் நடவடிக்கையால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு கண்ணீர்க் கடிதமும் எழுதியிருக்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், “நான் 1975-லருந்து இங்க குடியிருக்கேன். இங்க இருக்குறவங்க பெரும்பாலும் அடித்தட்டு மக்கள்தான். யாரும் பணக்காரங்க இல்லை. 1996-2001 கலைஞர் ஆட்சிக்காலத்துல இதே பகுதியில் 75 கல்நார் கூரை குடியிருப்புகளைக் கட்டிக்கொடுத்தாங்க. இப்போ திடீர்னு, இது ஏரி ஆக்கிரமிப்புப் பகுதினு சொல்லி இங்க இருக்குற கடைங்களை இடிச்சுருக்காங்க. வீடுங்களை எப்போ இடிப்பாங்களோன்னு பயத்தோட இருக்கோம். சின்னச் சின்னத் தொழில்களைச் செஞ்சு அதுல கிடைக்கிற காசைவெச்சு வீடுங்களைக் கட்டியிருக்கோம். இதுவும் போச்சுன்னா நாங்க நடுத்தெருவுலதான் நிக்கணும். நோட்டீஸ் கொடுக்குறப்போ, மாற்று இடம் கொடுக்கப்போறோம்னு எதுவும் சொல்லலை. முதல்வரைத்தான் நாங்க மலை மாதிரி நம்பியிருக்கோம்” என்றார் வேதனையுடன்.

“வீடுகளை உடனே காலி செய்யணும்” - கறார் அதிகாரிகள்... கண்ணீர் சிந்தும் முதல்வர் தொகுதி மக்கள்!

இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியிருக்கும் கடிதத்தில், “கடந்த 1994-ம் ஆண்டு இந்தப் பகுதியில் சுமார் 67.3 ஏக்கர் நிலம் அரசு ஊழியர்களுக்கு மாடி வீடு கட்டும் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. முன்னதாக, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, குறிப்பிட்ட நிலம் பொதுப்பணித் துறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக 29.6.1993 தேதியிட்ட அரசாணை எண் 975 வெளியிடப்பட்டது. இந்த நிலையில் குறிப்பிட்ட நிலம் நீர்நிலைப் புறம்போக்கு என்று, இங்கு வசிக்கும் பொதுமக்களின் வீடுகளைக் காலி செய்ய நீர்வளத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்கள். இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர். எனவே, தங்கள் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 3,000 குடும்பங்கள் அந்தப் பகுதியிலேயே நிரந்தரமாகக் குடியிருப்பதற்கு நிலவகை மாற்றம் செய்து அந்த மக்களை அங்கேயே குடியமர்த்தி, பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெயராஜ்
ஜெயராஜ்

இதுகுறித்து நோட்டீஸ் வழங்கிய செங்குன்றம் நீர்வளத்துறை அதிகாரிகள் சிலரிடம் விளக்கம் கேட்டோம். “இங்கிருக்கும் மக்களுக்கு வேறு இடம் வழங்குவது குறித்து அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. எனினும், மாற்று இடம் வழங்குவது குறித்து அரசுதான் முடிவுசெய்ய வேண்டும். ஆனால் சமீப காலத்தில் இது போன்ற வழக்குகளில், ஆக்கிரமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்பதால், மாற்று இடம் வழங்கக் கூடாது என நீதிமன்றம் கூறுகிறது. வீடுகளை இடிக்கும் பணிகள் இன்னும் நடைபெறவில்லை. தற்போது 83 பேருக்கு நோட்டீஸ் வழங்கியிருக்கிறோம். அரசின் பதிலைப் பொறுத்து படிப்படியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

என்ன செய்யப்போகிறார் முதல்வர்?