காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் முதல் இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கன அடி உபரி நீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் வழியாக பழையாறு கடலில் சென்று சேரும். இதன் காரணமாக கொள்ளிடம் கரையோரக் கிராமங்களில் தண்ணீர் உப்புகுந்துள்ளது. கொள்ளிடம் அருகேயுள்ள நாதல்படுகை, திட்டுபடுகை, முதலைமேடுதிட்டு ஆகிய கிராமங்களைத் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் கரையோரமுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, தக்காளி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட தோட்டப்பயிர்களும், முல்லை, மல்லி, காக்கரட்டான், செண்டு பூ உள்ளிட்ட பூச்செடிகளும் வெள்ளநீர் சூழ்ந்து சேதமடைந்துள்ளன.

தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் முதலைமேடுதிட்டு, நாதல் படுகை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மூட்டை, முடிச்சுகளுடன் ஆடு, மாடு, இதர செல்ல பிராணிகளுடன் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரவு பகல் எந்நேரமும் கரையை கண்காணித்த வண்ணமும், பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையிலும் இருந்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் நாதல்படுகை கிராம மக்களில் பலர் கிராமத்திலிருந்து வெளியேறாமல் கிராமத்தின் உள்ளேயே தங்கியுள்ளனர். பாதுகாப்பான பகுதிக்கு வராமல் அங்கேயே தங்கியுள்ள சிலருக்கு அவ்வப்போது திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து அவசரக்கதியில் அங்கிருந்து தீயணைப்பு மீட்பு படையினரும் காவல்துறையினரும் இணைந்து அவர்களை மீட்டு கரைச் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான குமார் என்பவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மீட்டு, தீயணைப்புத்துறையினர் கரைச் சேர்த்தனர்.

முகாமில் இருக்கும் மருத்துவக்குழுவில் மருத்துவரின்றி செவிலியர்கள் மட்டுமே இருப்பதால், குமாரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபோன்ற இக்கட்டான நிலை அடிக்கடி ஏற்படுவதால் 'மீதமுள்ள மக்கள் தண்ணீர்ச் சூழ்ந்த கிராமங்களிலிருந்து வெளியேற வேண்டும்' என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.