Published:Updated:

கொள்ளிடம்: இரவில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞர்கள்... 3 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சோகம்!

கொள்ளிடம் கரையில் மாவட்ட ஆட்சியர்
News
கொள்ளிடம் கரையில் மாவட்ட ஆட்சியர்

``கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதையும் மீறி இளைஞர்கள் மீன் பிடித்துள்ளனர். அதில் மூன்று பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்."

Published:Updated:

கொள்ளிடம்: இரவில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞர்கள்... 3 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சோகம்!

``கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதையும் மீறி இளைஞர்கள் மீன் பிடித்துள்ளனர். அதில் மூன்று பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்."

கொள்ளிடம் கரையில் மாவட்ட ஆட்சியர்
News
கொள்ளிடம் கரையில் மாவட்ட ஆட்சியர்

கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்வதைத் தொடர்ந்து, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு நான்கு பேர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அதில் மூன்று இளைஞர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டுவருகின்றனர்.

கொள்ளிடம் ஆறு
கொள்ளிடம் ஆறு

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக அணையிலிருந்து தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டுவருகிறது. இதனால் காவிரி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் நீர்வரத்து அதிகமானதைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களின் பாசனத்துக்காகத் திறந்துவிடப்படும் தண்ணீர் அதிகரிக்கப்பட்டது.

குறிப்பாக கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கரைபுரண்டு தண்ணீர் ஓடி வருகிறது. காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் அதிகமாகச் செல்வதால் கரையோரம் வசிப்பவர்கள், சுற்றுலாப்பயணிகள் என அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்தார்.

காவிரி
காவிரி

குறிப்பாக ஆற்றின் கரையோரம் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்தக்கொண்டிருந்த மூன்று பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தீயணைப்புத்துறையினர் அவர்களைத் தேடும் பணியில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

கும்பகோணம், திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர் அருகே உள்ள மதகு சாலைப் பகுதியை சேர்ந்தவர்கள் ஆகாஷ் (24), சேகர், மனோஜ் (23), ராஜேஷ் (22),கொளஞ்சிநாதன் (34) ஆகிய நான்கு பேரும் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் மதகு சாலை கொள்ளிடம் ஆற்றின் நடுவிலுள்ள மணல் திட்டில் நின்று மீன் பிடித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்திருக்கிறது.

கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர்
கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர்

இதையடுத்து நான்கு பேரும் `எங்களை காப்பாத்துங்க’ என்று சத்தம் போட்டுள்ளனர். இதைப் பார்த்த கரையோரம் நின்ற அப்பகுதியினர் தீயணைப்புக்துறைக்குக்கும்,போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதற்குள் தண்ணீர்வரத்தும், வேகமும் அதிகரித்தன. இதில் கொளஞ்சிநாதனைத் தவிர மற்ற மூன்று பேரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். உடனடியாக வந்து தீயணைப்பு வீரர்கள் கொளஞ்சிநாதனை மீட்டனர்.

மேலும் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பேரையும் தேடிவருகின்றனர். அவர்களின் நிலை தெரியாததால் மதகு சாலை பகுதியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து இன்று காலை சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் தேடுதலைத் தீவிரபடுத்தும்படி தீயணைப்புத்துறையினருக்கு அறிவுறுத்தினார். மேலும், ``கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதையும் மீறி இளைஞர்கள் மீன் பிடித்துள்ளனர். அதில் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது” எனத் தெரிவித்தார்.