அலசல்
Published:Updated:

“சோலைவனத்தைச் சுடுகாடா ஆக்குறாங்க!” - நள்ளிரவில் மாயமாகும் கோத்தகிரி காட்டு மரங்கள்...

கோத்தகிரி காட்டு மரங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
News
கோத்தகிரி காட்டு மரங்கள்...

அருகிவரும் இருவாச்சிப் பறவைகளும் காட்டத்தி மரங்களும் வானுயர்ந்த வாகை மரங்களும் நிறைந்தது கீழ்க் கோத்தகிரி சரிவுப் பகுதி.

கொரோனாவின் முதல் அலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, காட்டில் கண்ணில்பட்ட மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தது கோத்தகிரி மரக்கடத்தல் கும்பல். ஒரு சோலைவனத்தை இரக்கமின்றிக் கபளீகரம் செய்த அநியாயத்தை ‘பசுஞ்சோலையை மொட்டையடித்த டிம்பர் மாஃபியா!’ என்ற தலைப்பில் 10.06.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். கொரோனா இரண்டாம் அலையின் ஊரடங்கை எதிர்பார்த்துக் காத்திருந்த அக்கும்பல், மிச்சம் மீதம் விட்டுவைத்த காட்டு மரங்களையும் வெட்டிச் சாய்த்து வருகிறது.

அருகிவரும் இருவாச்சிப் பறவைகளும் காட்டத்தி மரங்களும் வானுயர்ந்த வாகை மரங்களும் நிறைந்தது கீழ்க் கோத்தகிரி சரிவுப் பகுதி. அதில், தற்போது புதிதாகப் பாறு கழுகுகளும் கூடு அமைத்து இனப்பெருக்கம் செய்வதை ஆவணமாக்கி மகிழ்ந்துவருகிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள். இதே முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில்தான், வனத்துறையின் துணையோடு நள்ளிரவில் நூற்றாண்டைக் கடந்த காட்டுமரங்களைக் கபளீகரம் செய்துவருகிறார்கள் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகள்.

“சோலைவனத்தைச் சுடுகாடா ஆக்குறாங்க!” - நள்ளிரவில் மாயமாகும் கோத்தகிரி காட்டு மரங்கள்...

‘‘கோத்தகிரிச் சரிவின் கடைக்கோடி ஊரான சோலூர் மட்டம் மலைக்கிராமத்திலிருந்து, ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்தத் தகரக் கொட்டகை. வாரத்துக்கு இரண்டு முறை அங்கு வருவார் அ.தி.மு.க கீழ்க்கோத்தகிரி முக்கிய நிர்வாகி. கட்சிக்கொடி காற்றில் பறக்க தோரணையாக வாகனத்தில் வருவார். அவர் வந்த சிறிதுநேரத்தில் கீழ்க்கோத்தகிரி தி.மு.க முக்கிய நிர்வாகியின் வாகனமும் வரும். இரண்டு பேரும் வந்த சில நிமிடங்களில் அரசாங்க ஜீப்பில் கீழ்க்கோத்தகிரி வனத்துறை அதிகாரி ஒருவரும் வந்துசேர்வார். நாளைய மர அறுப்பு, ஏரியா விவரம் குறித்த அனைத்து விஷயங்களையும் பேசி முடிவுசெய்துவிட்டு கமிஷன்களைக் கைமாற்றிக்கொள்வார்கள். சிறிது நேர இடைவெளிகளில், அந்த மூன்று வாகனங்களும் எந்தத் தொடர்பும் இல்லாததுபோலத் தனித் தனியாகக் கிளம்பும்.

மறுநாள் விடியற்காலையில், இரண்டு கும்பல்களின் ஆட்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக இறங்கி வனநிலம், பட்டா நிலம் என எதையும் பொருட்படுத்தாமல், தங்களுக்குத் தோதான காட்டு மரங்களை நோட்டம் விட்டு, அடையாளம் வைத்துவிட்டு வருவார்கள். அன்று இரவே ஒவ்வொரு டீமிலும் 50-க்கும் அதிகமான ஆட்கள் லாரியில் வந்துசேர்வார்கள். டார்ச் லைட், எலெக்ட்ரானிக் ரம்பம், அரிவாள் போன்றவற்றுடன் களமிறங்கி, அத்தனை மரங்களையும் கொடூரமாக வெட்டிச் சாய்ப்பார்கள். விடியற்காலை 4 மணிக்கெல்லாம் அறுப்பை நிறுத்திவிட்டு, லாரியில் மரங்களை ஏற்றுவார்கள். தார்ப்பாலினால் மூடப்பட்ட லாரிகளை, டீ பேக்டரியின் மறைவில் அன்று மாலை வரை நிறுத்தி வைப்பார்கள். இரவில் வனத்துறை அதிகாரி சிக்னல் கொடுத்ததும், லாரிகள் செக்போஸ்ட்டைக் கடந்து குறிப்பிட்ட டிப்போக்களுக்குச் சென்றுசேர்ந்துவிடும்’’ என, மரக்கடத்தல் ரகசியத்தை விவரித்தார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு லாரி ஓட்டுநர்.

குருசாமி தபேலா - அன்வர்தீன்
குருசாமி தபேலா - அன்வர்தீன்

தேர்தல் சமயத்தில் குறைந்திருந்த மரக்கடத்தல், தற்போதைய ஊரடங்கில் மீண்டும் வேகமெடுத்திருப்பதில் கலங்கிப்போயிருந்த இருளர் பழங்குடி முதியவரிடம் பேசினோம், ‘‘பொதுவாவே ஜனநடமாட்டம் இங்க இருக்காது. இது இவங்களுக்கு நல்லதாப் போச்சு. இவங்களுக்கு மனசாட்சியே கெடையாது. நைட்டு எப்ப வந்தாலும் காட்டுக்குள்ள டார்ச் எரிஞ்சிக்கிட்டே இருக்கு. யானை, காட்டுமாடு எல்லாமே இவங்க பண்ணுற அநியாயத்தால வேற பக்கம் ஓடுதுங்க. தாண்டிக்கூடுள்ள (இருவாச்சிப் பறவைகளின் கூடு) மரம், பூத்திருக்கிற நாவல் மரம்னு இவங்களுக்கு எதுவுமே கணக்கு கிடையாது. எல்லாத்தையுமே வெட்டுவாங்க. நாயம் கேட்டு யாருமே பக்கத்துல போக முடியாது. நம்ம உயிர் தப்பிச்சா போதும்னு பயந்துகெடக்குறோம். இவங்க வெட்டுன எடத்த காலைல போய்ப் பார்த்தா, சுடுகாடு மாதிரி இருக்கும். சோலவனம்ங்க இது... சுடுகாடாக்குறாங்க. வயித்தெரிச்சலா இருக்கு’’ என்றார் விரக்தியுடன்.

கடத்தல் கும்பல், இதே பகுதியிலுள்ள தனியார் பட்டா நிலங்களிலும் இரவோடு இரவாகக் கொள்ளையடிப்பதால், நீலகிரியைத் தாண்டி, கோவைக்கும் சென்னைக்கும் புகார்கள் பறந்தன. நேரில் ஆய்வுசெய்த கோவை மண்டலக் கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன், ‘‘மரக்கடத்தல் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

இந்த மரக்கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலாவிடம் பேசினோம். ‘‘கோத்தகிரி சோலூர் மட்டம், தேனாட்டுப் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் அனுமதியில்லாமல், மரம் வெட்டப்பட்டதாகக் கிடைத்த தகவல்படி சிவக்குமார், ஸ்டீபன் ஆகிய இருவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாகக் கீழ்க்கோத்தகிரி பகுதியில், வனத்துறையின் சார்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.

இந்த விவகாரம் குறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் பேசினோம். ‘‘வன நிலத்தில் மரங்கள் எதுவும் வெட்டப்படவில்லை. தனியார் பட்டா நிலத்திலுள்ள பட்டியல் வகை மரங்களை வெட்டியுள்ளனர். அப்படி வெட்டுவதானாலும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி மூலம் மரக்கடத்தல் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படும்” என்றார்.

“சோலைவனத்தைச் சுடுகாடா ஆக்குறாங்க!” - நள்ளிரவில் மாயமாகும் கோத்தகிரி காட்டு மரங்கள்...

கடத்தல் கும்பலுக்குப் புதிதாக ஏற்பட்டுள்ள சிக்கலை வனத்துறை ஊழியர் ஒருவர், ‘‘ஆரம்பத்துல எங்க ஆளுங்க சிலர் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுனாங்க. இப்போ ரொம்பச் சிக்கலாகிடுச்சு. ஏகப்பட்ட மரங்கள் வெட்டி காட்டுல கெடக்குது. வெளிய கொண்டுவர முடியல. காட்டுக்குள்ளேயே இடம்விட்டு இடம் மாத்தி மாத்தி மூடிவெச்சிருக்காங்க. அத என்ன பண்ணுறதுன்னு அவங்களுக்கே தெரியல!” என்றார் ரகசியமாக.

நேர்மையான அதிகாரிகள் களமிறங்கினால் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்!