கட்டுரைகள்
Published:Updated:

“குழந்தைகள் தப்ப முடியாதது கொடூரம்!”

கோழிக்கோடு விபத்து
பிரீமியம் ஸ்டோரி
News
கோழிக்கோடு விபத்து

கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் அளித்த பேட்டி.

கொரோனா, நிலச்சரிவு என்று துயரங்களால் ரணமான கேரளாவில் இன்னுமொரு துயரத்தின் வடு, வானத்திலிருந்து வந்து விழுந்தது. ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ், துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் விபத்துக்குள்ளாகிப் பல உயிர்களைப் பலிவாங்கியுள்ளது.

கோழிக்கோடு விபத்து
கோழிக்கோடு விபத்து

விபத்து நடந்த கோழிக்கோடு விமானநிலையம் அமைந்துள்ள கரிப்பூர்ப் பகுதிக்குச் சென்றோம். மீட்புப்பணிகள் முழுவதும் முடிந்து, மழை கொட்டிக்கொண்டிருந்தது. விபத்தில் உயிரிழந்த ஒரு சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டி ருந்தது. அதனால், மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள், விமானத்தில் பயணித்தவர்கள், உடனிருந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த மீட்புப் பணிகளில் முன்னிலை வகித்த மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன், நாமக்கல் மாவட்டம், திருச்சங்கோட்டுப் பகுதியைச் சேர்ந்த தமிழர். தூக்கமின்றி 24 மணி நேர தொடர் பணிகளுக்கு மத்தியில் நம் அழைப்பை ஏற்றவரைச் சந்தித்துப் பேசினேன்.

“வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு முதல் தகவல் கிடைத்தது. விமானம் விழுந்துவிட்டது என்று சொன்னார்கள். 15 நிமிடங்களில் அந்த இடத்துக்குச் சென்றுவிட்டோம். நேரில் பார்த்த காட்சிகள் மிகவும் வேதனையளிப்பவை. பள்ளத்தில் விழுந்து, மூன்று பாகங்களாக விமானம் உடைந்திருந்தது. மக்களின் அழுகுரல்கள் எங்களை உலுக்கியெடுத்தன. கோழிக்கோடு விமான நிலையம் இருப்பது மலப்புரம் மாவட்டம். அதனால், மீட்புப் பணிகளில் எங்கள் மாவட்டம் முன்னிலை வகிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

 கோபாலகிருஷ்ணன்
கோபாலகிருஷ்ணன்

நாங்கள் செல்வதற்கு முன்பே அந்தப் பகுதி மக்கள் மீட்புப் பணிகளைத் தொடங்கிவிட்டனர். கொரோனா பற்றிய அச்சத்தையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, உள்ளூர் மக்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டது பிரமிக்கவைத்தது. அடுத்தடுத்து மருத்துவக்குழு, காவல்துறை, தீயணைப்பு, சி.ஐ.எஸ்.எஃப், என்.டி.ஆர்.எஃப், தன்னார்வலர்கள் விரைந்து வந்தனர். 45 நிமிடங்களில் 100 ஆம்புலன்ஸ்கள் வந்துவிட்டன. இரண்டு மணிநேரத்தில் மீட்புப் பணிகள் முடிந்துவிட்டன. இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. இவ்வளவு விரைவாக மீட்புப் பணிகள் முடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

கோழிக்கோடு விபத்து
கோழிக்கோடு விபத்து

தொடர் மழைக்கு மத்தியில் மீட்புப் பணியை மேற்கொண்டது பெரும் சவாலாக இருந்தது. விமானத்தின் முன்பகுதியில் இருந்தவர்களுக்கு சேதம் அதிகம். நடுப்பகுதி, பின்பகுதியில் இருந்தவர்களுக்கு பாதிப்பு சற்றுக் குறைவு. மீட்புப் பணிகளின்போது, எரிபொருள் கசிந்துகொண்டிருந்தது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற அபாயம்.

“குழந்தைகள் தப்ப முடியாதது கொடூரம்!”

எல்லோரையும் மீட்டுவிட்டோம். ஆனால், விமானத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் சிக்கியிருந்தனர். ஆண் ஏற்கெனவே இறந்துவிட்டார். அந்தப் பெண்ணை மீட்கதான் அதிக நேரம் எடுத்தது. எரிபொருள் லீக்கேஜால் எலக்ட்ரானிக் கட்டரைப் பயன்படுத்த முடியாது. எலக்ட்ரானிக் கட்டரைப் பயன்படுத்தி விமானம் வெடித்துவிட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதேநேரத்தில், பெண்ணை உயிருடன் மீட்க வேண்டும். எந்த இடத்திலும் தீப்பிடித்துவிடக்கூடாது என்று தீயணைப்புத்துறையினர் கெமிக்கல் ஸ்ப்ரேகளை அடித்துக் கொண்டே இருந்தனர். மிகுந்த கவனத்துடன் கையாண்டோம். 45 நிமிடங்கள் போராட்டதுக்குப் பிறகு அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டோம். அதிர்ஷ்டவசமாகத் தொடர் மழையால், விமானம் வெடிக்கும் அபாயமும் தடுக்கப்பட்டது.”

“உங்களுக்கு மிகவும் வலியைக் கொடுத்த விஷயம்?” என்றதும் சில விநாடிகள் மௌனத்துக்குப் பின் குரல் கம்மப் பேசினார்.

“குழந்தைகள் தப்ப முடியாதது கொடூரம்!”

“இந்த விபத்தில் பெரியவர்கள்கூடத் தப்பித்துவிடலாம். ஆனால், குழந்தைகள் அப்படித் தப்பிக்க முடியாது. விமானத்தில் சிக்கிவிட்டால் அவர்களால் எழும்பக்கூட முடியாது. விமானத்தில் இரண்டு வயதுக்குட்பட்ட 10 குழந்தைகள் பயணித்தனர். அவர்களில் நான்கு குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர். சில பெற்றோர், குழந்தை களை இழந்து தவித்துக் கொண்டிருந்தனர். சில குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து அழுதுகொண்டிருந்தன. இதை என்னால் எளிதில் கடக்க முடியவில்லை.”

இப்போதும் அவர் வார்த்தை களில் துயரத்தின் அடர்த்தி குறையவில்லை.