Published:Updated:

கேரளாவின் முதல் பெண் அமைச்சர்; முதுபெரும் அரசியல்வாதி கே.ஆர்.கெளரி அம்மா காலமானார்!

கே.ஆர்.கெளரி அம்மா
கே.ஆர்.கெளரி அம்மா

1964-ல் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்த சமயத்தில் கே.ஆர்.கெளரி அம்மா சி.பி.எம் கட்சிக்கும், அவரது கணவர். டி.வி.தாமஸ் சி.பி.ஐ-க்கும் சென்றனர். அதன் பிறகு கணவரையும் பிரிந்தார்.

கேரள மாநிலத்தின் பழம்பெரும் அரசியல்வாதி கே.ஆர்.கெளரி அம்மா. சேர்த்தலா பட்டணங்காடு பகுதியில் 1919, ஜூலை 14-ம் தேதி கெளரி அம்மா பிறந்தார். திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் பட்டம் பெற்றார். அதன் மூலம் ஈழவ சமூகத்தின் முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் தனது 28-வது வயதில் தீவிர கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைக் கடைப்பிடித்துவந்தார். சிறை வாசம், போலீஸின் கொடுமைகள் என ஆரம்பகாலத்திலேயே மிகக்கடுமையான துயரங்களைச் சந்தித்தார்.

13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஆறு முறை அமைச்சராகவும் இருந்தார். இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதல்வராக இருந்த சமயத்தில் அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். பின்னர் ஜனாதிபத்ய சம்ரக்‌ஷண சமிதி என்ற கட்சியைத் தொடங்கி நடத்திவந்தார். முதலில் அந்தக் கட்சியின் தலைவராக இருந்தவர், மற்றவர்களுக்கு வழிவிட்டு பொதுச்செயலாளர் ஆனார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து 2001 முதல் 2006 வரையிலான உம்மன்சாண்டி அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தார்.

கெளரி அம்மா உடலுக்கு அஞ்சலி செலுத்திய கேரள முதல்வர் பினராயி விஜயன்
கெளரி அம்மா உடலுக்கு அஞ்சலி செலுத்திய கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளத்தில் முதல் பெண் அமைச்சர் கெளரி அம்மா என்பது குறிப்பிடத்தக்கது. நிலச் சீர்திருத்தச் சட்டத்தை கேரளத்தில் கொண்டுவந்ததில் முக்கியப் பங்காற்றியவர் கெளரி அம்மா. திருவிதாங்கூர் திவானாக இருந்த சி.பி.ராமசுவாமி அய்யரின் ஆட்சிக்கு எதிராகப் போராடினார். புன்னப்புரா - வயலார் போராட்டம்தான் கெளரி அம்மாவைத் தீவிர அரசியலுக்கு இட்டுச்சென்றது.

1948 திருவிதாங்கூர் - கொச்சி சட்டசபைத் தேர்தலில் சேர்த்தலா தாலுகாவில், துறவூர் தொகுதியில் முதன்முதலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். 1952 மற்றும் 1954 தேர்தல்களில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சட்டசபைக்குள் நுழைந்தார். ஒன்றிணைந்த கேரள மாநிலத்தில் 1957-ம் ஆண்டு நடந்த முதல் சட்டசபைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அந்த அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகவும் ஆனார்.

கே.ஆர்.கெளரி அம்மா
கே.ஆர்.கெளரி அம்மா

டி.வி.தாமஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் கெளரி அம்மா. 1964-ல் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்த சமயத்தில் கே.ஆர்.கெளரி அம்மா சி.பி.எம் கட்சிக்கும், அவரது கணவர். டி.வி.தாமஸ் சி.பி.ஐ-க்கும் சென்றனர். அதன் பிறகு கணவரையும் பிரிந்தார். கேரள அரசியலில் மிக நீண்ட வரலாற்றைக்கொண்ட கே.ஆர்.கெளரி அம்மா தொற்றுநோயால் அவதிப்பட்டு, திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு 102 வயது ஆகிறது. அவரது நல்லடக்கம் இன்று மாலை நடைபெறவிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு