
- ‘வட்டம்’ பாலா, ஓவியங்கள்: சுதிர்
‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்!’
‘புரம்’ மாவட்டத்திலுள்ள நகராட்சி கடைகளுக்கு, அண்மையில் வெளிப்படை ஏலம் நடக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. நகராட்சிக்குச் சொந்தமான 25 கடைகளை ஏலம் கோருவதற்காக, வங்கியில் பணம் செலுத்தி டி.டி எடுத்த ரசீதுடன் பலரும் நகராட்சியில் குவிந்தனர். ஆனால், கடைசிவரை ஏலமே நடக்கவில்லையாம். பொறுமையிழந்தவர்கள், ‘எப்பதான் ஏலம் விடுவீங்க...’ என நகராட்சி அலுவலகத்தின் கீழ்த்தளத்தில் அமர்ந்திருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அதிகாரிகளோ, ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ என்ற தொனியில், பதில் சொல்லியிருக்கிறார்கள். காரணம், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் சேர்மனின் தந்தையான ‘சீனி’யான நபர், நகராட்சி அலுவலகத்தின் மேல் தளத்தில் இருந்தவாறே, தன் கட்சி ஆட்களுக்குக் குறைந்த தொகையில் கடைகளை ஒதுக்கிவிட்டாராம். பாதிக்கப்பட்டவர்கள், ஆர்.டி.ஐ மூலமாக ஏலத் தொகை விவரத்தைக் கேட்டிருப்பதோடு, அடுத்தகட்டமாக வழக்கு தொடுக்கும் முடிவிலும் இருக்கிறார்கள்.

‘பருத்தி மூட்டை, குடோன்லயே இருந்திருக்கலாம்!’
அண்மையில், ‘ஜில்’ மாவட்ட இலைக் கட்சி உறுப்பினர்கள் இருவர், ஆளுங்கட்சியின் மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளர் தலைமையில் ஆளுங்கட்சியில் சேர்ந்தனர். ‘சூரியனோடு இணைந்த அன்புத் தம்பிகள்’ என இருவருக்கும் கட்சித்துண்டை அணிவித்து வரவேற்ற போட்டோக்களை கெத்தாக ஊர் முழுக்கப் பரப்பியது ஆளுங்கட்சித் தரப்பு.
இடையில் என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை... கட்சியில் இணைந்த இருவரும் மறுநாளே இலைக் கட்சியிலேயே இணைந்துவிட்டனர். இதையடுத்து, ‘வழிதவறிப்போனவர்கள் வீடு வந்து சேர்ந்துவிட்டனர்’ என மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இலைத் தரப்பின் புகைப்படங்கள் வைரலாக... ‘‘இதுக்கு பருத்தி மூட்டை, குடோன்லயே இருந்திருக்கலாம். நமக்கு இந்த அவமானம் தேவையா அண்ணே...” என ஆளுங்கட்சி அமைப்பாளர் காதுபடவே கலாய்த்துவருகிறார்களாம் அண்ணனின் ஆதரவாளர்கள்!
‘இவருக்கு ஏன் பதவி கிடைக்கலைனு இப்பதான் புரியுது!’
மேற்கே உள்ள இரண்டு எழுத்து மாவட்டத்தில், ‘மீண்டும் பவர்ஃபுல் கரைவேட்டியாக மாறுவேன்’ என்று சூளுரைத்தவாறே இலைக் கட்சியிலிருந்து சூரியன் கட்சிக்கு மாறினார் அந்த முன்னாள் டெல்லி பிரமுகர். ஆனால், இங்கோ அண்ணனுக்கு எந்தப் பதவியும் கிடைக்கவில்லையாம். பதவிக்காக அமைச்சருக்குப் பின்னால் நடையாக நடந்தும் எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக அமைச்சரின் நிழலாகவே வலம்வருகிறார் அவர். ‘என்னங்க தலைவரே இப்படி ஆகிடுச்சே?’ என உருகுபவர்களிடம் ‘அட நீங்க வேற. இவங்க எல்லாருமே டம்மி. முதல்வரே மாவட்டத்தோட அப்டேட்டை என்கிட்டதான் கேட்டுத் தெரிஞ்சுக்குறார்’ என அளந்துவிடுகிறாராம். ‘இவருக்கு ஏன் பதவி கிடைக்கலைனு இப்பதான் புரியுது’ என்று அண்ணனின் விழுதுகளே கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள்!

‘ஒண்ணுக்கொண்ணு சளைச்சதில்லை!’
‘உப்பு’ மாவட்டம், பட்டி தாலுகாவில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையையடுத்து இந்தியன் வங்கியின் கிளை தொடங்க கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. ‘‘டெல்லிக்குச் சென்றபோது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து நான் மனு கொடுத்ததால்தான் இந்தியன் வங்கி கிளை அமைக்கப் பணிகள் நடந்துவருகின்றன” என எக்ஸ் அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ-வுமான மீசைக்காரர் மீடியாக்களிடம் கெத்து காட்டியிருந்தார். ஆனால், “மாநிலங்களவை எம்.பி-யான என் தந்தை, கடந்த ஆண்டே ஒன்றிய நிதியமைச்சரைச் சந்தித்து, இங்கு வங்கிக் கிளை அமைக்க வேண்டும் என்று மனு கொடுத்திருந்தார். தற்போது வங்கி தொடங்கப் பணிகள் நடந்துவருவது மகிழ்ச்சி அளிக்கிறது” எனப் பாய்ந்து வந்து பதிலடி கொடுத்தார் மறுமலர்ச்சிக் கட்சித் தலைவரின் மகன். அடுத்தநாளே கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் மீசைக்காரர். உடனே மறுமலர்ச்சியின் இளைய தலைவரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். ‘ஒண்ணுக்கொண்ணு சளைச்சதில்லை...’ பாணியில் இருவரும் மல்லுக்கட்ட... “இப்படியே போனா வங்கிக் கிளையை ரெண்டு பேரும் தனித்தனியாத்தான் ரிப்பன் வெட்டி திறந்துவைக்கணும்” என முணுமுணுக்கின்றனர் கட்சிக்காரர்கள்.
“மறுபடியும் முதல்ல இருந்தா..?!”
‘கொசுவலை’ மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தலைவரின் பெயர்கொண்ட அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அவர். கடந்த தேர்தலில், அவருக்கு சீட் கொடுக்கவிடாமல், அன்றைய போக்குவரத்தார் முட்டுக்கட்டை போடவே... கடுப்பானவர் தேர்தல் நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு, தி.மு.க-வுக்குத் தாவி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், அங்கும் அவருக்குப் பெரிதாக எந்த முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அ.தி.மு.க இரட்டைத் தலைமை வழக்கில் பணிவானவருக்குச் சாதகமாக தீர்ப்பு வந்த சமயத்தில், தன் ஆதரவாளர்களோடு போய் பணிவானவரைச் சந்தித்தார். ஆனால், அடுத்த சில தினங்களிலேயே துணிவானவருக்குச் சாதகமாக தீர்ப்பு வர... ‘இதென்னடா வம்பாபோச்சு...?’ என்று நொந்துபோனார். இப்போது மறுபடியும் ‘ஸ்டாலின், தளபதி, திராவிட மாடல் ஆட்சி’ என்று ‘யூ டர்ன்’ எடுத்து அணிலாரிடம் ‘ஒட்ட’ முயல்கிறாராம். “மறுபடியும் முதல்ல இருந்தா..?!” என்று அவரது அடிப்பொடிகள் இப்போதே டயர்டாகிவிட்டார்கள்!