
- ‘சிப்காட்’-க்கு நிலம் கையகப்படுத்த கிருஷ்ணகிரி விவசாயிகள் எதிர்ப்பு!
தமிழ்நாட்டின் தொழில்துறை ‘ஹப்’-பாக விளங்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், சிப்காட் வளாகங்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சமீபத்தில் அமைக்கப்பட்ட ஓசூர் சிப்காட்-3 மற்றும் 4-வது வளாகங்களில், சுமார் 2,500 ஏக்கர் நிலம் இன்னமும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படாத நிலையில், மேலும் 3,034 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் அரசின் முடிவுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட உத்தனப்பள்ளி கிராமத்தில், 5-வது சிப்காட் வளாகம் அமைக்க, கடந்த 2022, ஏப்ரல் மாதம் மத்திய, மாநில அரசுகள் முடிவுசெய்தன. இதற்காக, உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய மூன்று ஊராட்சிகளில், 3,034 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தத் திட்டமிட்டதுடன், வருவாய்த்துறை இதற்கான ஆய்வுப் பணிகளையும் தொடங்கியிருக்கிறது.

இந்த மூன்று ஊராட்சிகளில், மூன்று போக நெல் சாகுபடி, கேரட், தக்காளி, தென்னை, வாழை என விவசாயம் நடைபெற்றுவருகிறது. மேலும் இந்தப் பகுதிகளில், 30-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள், 50-க்கும் அதிகமான பசுமைக்குடில்கள், 15-க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் நீர்வழித்தடங்கள் என வேளாண்மை மண்டலமாக விளங்கிவருகிறது. இதனால், ‘எங்கள் நிலத்தைப் பறித்து, வாழ்வாதாரத்தைக் கெடுப்பதை அரசு கைவிட வேண்டும்’ எனக் கூறி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். “ஆடு, மாடுகளுடன் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது, சாலைமறியல் எனப் பல்வேறு வகையிலான போராட்டங்களை நடத்தியும், எங்களின் குரலுக்குச் செவிமடுக்காமல் நில அபகரிப்புக்கான பணிகளில் அரசு தீவிரம் காட்டிவருகிறது” என்கிறார்கள் இங்குள்ள விவசாயிகள்.
‘ஒரு பிடி மண்கூட எடுக்க முடியாது’!
தற்போது ‘சிப்காட் நிலம் எடுப்பால் பாதிக்கப்படும் விவசாயிகள் குழு’ என்ற பெயரில் மூன்று ஊராட்சி விவசாயிகளும் ஒன்றிணைந்து, தொடர் போராட்டத்தைத் தொடங்கியிருக் கிறார்கள். உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே அரசுக்கெதிராக, கடந்த 6-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி சத்திய நாராயணன் நம்மிடம் பேசும்போது, ‘‘அரசு சிப்காட் அமைத்து, தொழில் வளத்தை, வேலைவாய்ப்பைப் பெருக்க நினைப்பது நல்லதுதான். ஆனால், அதற்காக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறித்து, வேளாண் நிலத்தில் சிப்காட் அமைப்பது நியாயமா... கடந்த 2007–2010-ம் ஆண்டுகளில், எங்கள் கிராமங்களில் தரிசாகக் கிடந்த நிலத்தில் ஏறத்தாழ 2,000 ஏக்கர் வரை ஒரு தனியார் நிறுவனம் வாங்கிக்கொண்டது. அதில் கிடைத்த பணத்தைவைத்து, மீதமிருக்கும் நிலங்களில் விவசாயம் செய்துவருகிறோம். அந்த நிலத்தைத்தான் தற்போது அரசு கையகப்படுத்த நினைக்கிறது. எங்கள் வாழ்வாதாரத்தைப் பறிப்பதைக் கைவிட்டுவிட்டு, வேறு பகுதியில் சிப்காட் அமைக்க அரசு முன்வர வேண்டும். அரசு முடிவை மாற்றாவிட்டால், மாபெரும் போராட்டம் நடத்துவோம். எங்கள் நிலத்திலிருந்து ஒரு பிடி மண்ணைக்கூட எடுக்க முடியாது” என்றார் கொதிப்புடன்.

“கொடுத்த வாக்குறுதியை மீறுகின்றனர்!”
இது தொடர்பாக, வேப்பனப்பள்ளி தொகுதியின் எம்.எல்.ஏ-வும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமியிடம் பேசினோம், ‘‘சிப்காட் அமைப்பதற்கு விவசாயிகள் நிலத்தைப் பறிப்பதைக் கண்டித்து, ஏப்ரல் மாதம் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு முன்பு, தனி ஆளாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தேன். இதுவரை, இரண்டு முறை சட்டசபையில் இந்தப் பிரச்னை குறித்துக் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறேன். சட்டசபையில் தொழில்துறை அமைச்சர், ‘விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம்’ என உறுதியளித்தார். ஆனாலும், அவர்கள் கொடுத்த வாக்குறுதியை மீறி, விளைநிலங்களைக் கையகப்படுத்தும் பணியைத் தீவிரமாக மேற்கொள்கின்றனர். கிருஷ்ணகிரியில் ஏற்கெனவே அதிக அளவு தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால், அருகிலுள்ள தருமபுரியில் தொழில் வளம் குறைவாகவே இருக்கிறது. மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில் புதிய சிப்காட் வளாகத்தை அமைத்தால், அங்கு தொழில் வளமும் மேம்படும், வேலைவாய்ப்பும் பெருகும். கிருஷ்ணகிரி விவசாயிகளின் நிலத்தைப் பறிப்பதை அரசு கைவிட வேண்டும்’’ என்றார்.

‘தீர்வு காண்பது அரசின் முடிவு!’
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் பவனந்தி மற்றும் ஓசூர் சப்–கலெக்டர் சரண்யாவிடம் பேசினோம். ‘‘சிப்காட் அமைப்பது அரசின் முடிவு. சிப்காட் நிறுவனத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்தித் தருவதோடு வருவாய்த்துறையின் பணி முடிந்து விடும். தற்போது, விவசாயிகள் போராட்டம் நடத்துவதால், இது சட்டம் - ஒழுங்கு பிரச்னை யாகியிருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசுக்குத் தெரிவித்திருக்கிறோம். இந்தப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண்பது அரசின் முடிவில்தான் இருக்கிறது’’ என்றனர்.
ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட 2,500 ஏக்கர் நிலம் இதுவரை தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படாத நிலையில், பயிர்செய்துவரும் நிலத்தைக் கையகப்படுத்த அரசு தீவிரம் காட்டுவது விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
சிந்தித்து முடிவெடுக்குமா அரசு!