மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 29 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

கிருஷ்ணகிரி
பிரீமியம் ஸ்டோரி
News
கிருஷ்ணகிரி

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 29 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

பர்கூர் எனும் குட்டி ‘சூரத்’!

கிருஷ்ணகிரி மக்கள் ஒவ்வொருவரோடும் பின்னிப்பிணைந்த ஊர் பர்கூர். ஏனென்றால், அந்த மாவட்ட மக்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் பர்கூரில் குறைவான விலைக்கு வாங்கிய துணியை அணிந்திருப்பார்கள். கிருஷ்ணகிரி மக்கள் மட்டுமல்ல, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூர், சென்னை செல்லும் மக்களும் பர்கூருக்கு வந்து துணி வாங்கிச் செல்வார்கள். சுருக்கமாக, பர்கூரை ‘குட்டி சூரத்’ என்று அடைமொழிவைத்து அழைப்பார்கள். இந்தக் கதையை அறிந்து நான் சில ஜவுளித் தொழில் வல்லுநர்களிடம் பேசினேன். “பர்கூரை, `குட்டி சூரத்’ என்கிறார்கள். ஈரோடு Texvalley-யைப்போல ஏதாவது அங்கே கொண்டுவர முடியுமா... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள், “பர்கூரில் Production கிடையாது. Sales மட்டும்தான்” என்று சொன்னார்கள். ஆனால், ஈரோடு Texvalley-யிலும் வெறும் Sales மட்டும்தானே என்று எனக்குத் தோன்றியது. சூரத்தும்கூட பெரிதும் Sales -ஐ அடிப்படையாகக் கொண்டதுதான்!

கனவு - 29 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

பர்கூரில் ஏற்கெனவே மிகப்பெரிய ஜவுளிச் சந்தை இருக்கிறது. அங்கே மொத்தம் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கடையிலும் ஒரு நாள் வருமானமாகப் பல்லாயிரம் ரூபாய் கிடைக்கிறது. இதைவைத்துக் கணக்கிட்டால், பர்கூர் சந்தையின் ஆண்டு மதிப்பு கிட்டத்தட்ட பலநூறு கோடி ரூபாய்க்கு எகிறுகிறது. எனவே, பர்கூர் Potential கொண்டிருக்கிறது. யோசித்துப் பாருங்கள்... சரவணா ஸ்டோர்ஸும், தி சென்னை சில்க்ஸும், போத்தீஸும் நினைத்தால் சென்னையின் எந்த இடத்தில் வேண்டுமானால் கடைகளைத் திறக்கலாம். நிலமும் பணியாளர்களும் எளிதாகக் கிடைப்பார்கள். ஆனால், ஏன் அவர்கள் தி.நகரிலேயே மீண்டும் மீண்டும் கடைகளைத் திறக்கிறார்கள்? அந்த 30 மீட்டர் அகலச் சந்தில் மூச்சுக்கூட ஒழுங்காக விட முடியாது. ஆனாலும் தி.நகரே அவர்களுக்கு First Choice-ஆக இருக்கிறது. ஏனென்றால், That place has a massive potential! அதேபோலத்தான் பர்கூரும் எனக்குத் தெரிகிறது. என்ன, இது கொஞ்சம் பெரிய தி.நகர். அவ்வளவுதான்!

கனவு - 29 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

பர்கூருக்கு Texvalley-யைக் கொண்டுவருவோம். அதாவது, தமிழ்நாட்டின் இரண்டாவது Texvalley. ஈரோடு Texvalley 18 ஏக்கர் பரப்பளவுகொண்டது. இதில் 600 ஜவுளி நிறுவன முதலாளிகள் அங்கம் வகிக்கிறார்கள். மொத்தமாக 1,600 கடைகள் இருக்கின்றன. பொதுவாக Texvalley-யின் சிறப்பம்சமே பெரிய Brand-கள் மட்டுமில்லாமல், சிறிய Brand-களுக்கும் உரிய இடமும் வசதிகளும் அளிக்கப்படும். அதாவது, ஏற்றுக்கொள்ளும் படியான வாடகையில். இதுவோர் அட்டகாசமான Eco System. இதேபோன்ற Eco System-ஐ நாம் பர்கூர் Texvalley-க்கும் கொண்டுவர வேண்டும். வேண்டுமானால், ஈரோடு ஜவுளித் தொழில் வல்லுநர்கள் சிலரையும்கூட ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை, பர்கூர் Texvalley குழுவில் இடம்பெறச் செய்யலாம். அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள் பர்கூர் ஜவுளித் தொழில் துறையினருக்கு உறுதுணையாக அமையும்.

பர்கூர் ஜவுளிச் சந்தையின் ஆண்டு வருமானம் பலநூறு கோடி ரூபாய் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். இப்போது அது உருவாக்கும் வேலைவாய்ப்புகளைச் சொல்கிறேன். மொத்தம் 5,000லிருந்து 10,000 வேலைகள். இதில், பெண்கள் மட்டுமே பாதிக்கும் மேல். இங்கே ஒன்று தோன்றுகிறது. பர்கூர் Texvalley-ஐ பெண்களுக்கான உடைகளை மட்டுமே விற்பனை செய்யும் Women’s Special Texvalley-யாகவும் நாம் அமைக்கலாம். அம்மா உணவகத்தைப்போல பணியாளர்கள், நிர்வாகிகள் என எல்லோரும் பெண்களே. ஒரு புது முயற்சி. கூடவே, Jewellery மற்றும் Decor Items-ம் கொண்டுவரலாம். Night Shopping-ம் இன்னொரு ஆப்ஷன். சென்னை, பெங்களூர் என முக்கியமான இரண்டு நகரங் களுக்கான சந்திப்பு மாவட்டம் என்பதால், கிருஷ்ணகிரி பெண்களைக் கடந்து மற்ற மாவட்ட, மாநிலப் பெண்களும் வந்து குவிவார்கள். இது நடந்தால், உலக அளவிலேயே பெண்களுக்கான First & Best Women’s Texvalley-ஆக பர்கூர் இருக்கும். ஆண்டு வருமானமும் சிரமமே இல்லாமல் பல்லாயிரம் கோடி ரூபாயைத் தொடும்.

கனவு - 29 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

சுற்றுலா வளங்களும் சுவாரஸ்யமான திட்டங்களும்!

இனி வருவன அனைத்துமே கிருஷ்ணகிரியின் சுற்றுலா சார்ந்த வளங்களும் வாய்ப்புகளும். கிருஷ்ணகிரி உண்மையிலேயே சுற்றுலாவுக்கென அளவெடுத்துத் தைத்த மாவட்டம். இங்கே முதன்மையாக மூன்று சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. ஒன்று அய்யூர். இது காடும் காடு சார்ந்த பகுதியும். இரண்டு தளி. இது நீரும் நீர் சார்ந்த பகுதியும். மூன்று, அஞ்செட்டி. இது வயலும் வயல் சார்ந்த பகுதியும். இந்த மூன்று பகுதிகளுமே தனிப்பட்ட அளவில் தமிழ்நாடு அளவிலான சுற்றுலாத்தலமாக மாறுவதற்குரிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றன.

அய்யூர்: மூங்கில் மரங்களும் சேற்று ஏரிகளும் கொண்ட அழகிய காடு. இது ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது. இங்கே யானைகளை அதிகம் பார்க்கலாம். சேற்று ஏரிக்குச் சேனைகளுடன் அடிக்கடி நீர் அருந்த வரும். யானைகளுடன் குரங்குகள், மான்கள் என மற்ற விலங்குகளும் அய்யூரில் உள்ளன. மொத்தத்தில், உரிய நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் Ethical-ஆக Ecotourism செய்ய ஏற்ற பகுதி.

மொத்தம் ஐந்து திட்டங்கள்…

Tree house: இந்த Tree House திட்டம் ஏற்கெனவே சேலம் ஏற்காட்டில் நடைமுறையில் இருக்கிறது. Glen Rock Estates என்ற தனியார் நிறுவனம் நடத்திவருகிறது. மரத்துக்கு மேலே பெரிய கூடுபோல குட்டி வீடுகளை அமைத்திருப்பார்கள். இதமான குளிர் ஒவ்வொரு மரக்கணுவிலும் ஒளிந்திருந்து சிரிக்கும். ஒரு நபருக்கு 1,000 ரூபாய் கட்டணம். ஆண்டுக்கு 20-30 லட்சம் ரூபாய் வருமானம். இதேபோல அய்யூரிலும் மர வீடுகளை அமைக்கலாம்.

கனவு - 29 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

Top of the Tree Adventure: இதுவும் மரம் சம்பந்தப்பட்டதே. மரத்துக்கு மேலே அமைத்த Takeshi Castle விளையாட்டுபோல இருக்கும். சின்னச் சின்னத் தடைகளைத் தாண்டி ஓடி இலக்கை அடைய வேண்டும். US, Sydney, California (Tahoe), China (Canton) போன்ற நாடுகளில் இது மிகப் பிரசித்தம். இந்தியாவில் ஏற்காடு, கூர்க் போன்ற இடத்தில் அமைத்திருக்கிறார்கள். ஒரு நபருக்கான கட்டணம் 500 ரூபாய். ஒரு முறை மட்டும் விளையாட அனுமதிப்பார்கள். அய்யூரில் தாராளமாக முயன்று பார்க்கலாம். அதற்குரிய உயரமான மரங்கள் அங்கே இருக்கின்றன.

Long Zipline Route: அய்யூரில் ஏற்கெனவே ஒரு Zipline சேவை இருக்கிறது. 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால், அந்தக் கட்டணத்துக்குப் போதுமான திருப்தியளிப்பதாக அந்த Zipline இல்லை. எனவே, இன்னும் கொஞ்சம் உயரத்தை அதிகரித்து, மிதந்து செல்லும் தொலைவையும் கூட்டி Long Zipline சேவை ஒன்று வழங்கலாம். இப்படிச் செய்தால், தற்போதைய கட்டணத்தையும் உயர்த்த முடியும். ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வருமானமும் உறுதியாகக் கிடைக்கும்.

Campfire: பிரியாணியில் மசாலாபோல Ecotourism-க்கு மதிப்பைக்கூட்டும் அம்சம் Campfire. இதைப் பெரிதாக விளக்க வேண்டாம் என நினைக்கிறேன். படங்களிலும் நேரிலும் பெரும்பாலும் அனைவரும் கண்டதுதான். இப்போது அய்யூரில் Campfire செய்வதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. முடிந்தவரை அனுமதிக்கப்பட்ட பார்வையாளர் தொலைவுக்குள் உரிய விதிமுறைகளுடன் Campfire செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கலாம். சரியான கட்டணம் நிர்ணயித்து Campfire-க்குத் தேவையான உபயோகப் பொருள்களையும் விற்கலாம்.

Green Food Court: இயற்கை சார்ந்த இடங்களுக்கு இயற்கைதான் முதல் பொழுதுபோக்கு என்பார்கள். வெறுமனே மரங்களையும், பறவைகளையும், அருவிகளையும் பார்த்து அமர்ந்திருப்பதும்கூட பெரிய Relaxationதான். ஆனால், அப்படியே அங்கே மக்களுக்குத் தேவையான உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகளையும் திறந்தால், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைக்கும். அந்தக் கோணத்திலிருந்து பார்க்கும்போது, அய்யூரில் Green Food Courts திறக்கலாம். முழுக்கவும் இயற்கை சார்ந்த உணவு. ஆவியில் வேகவைத்தவை. அனலில் சுட்டு எடுத்தவை. அவ்வளவே. கண்டிப்பாக Explorers விரும்பி வந்து உண்பார்கள்.

இன்னும் சில சுற்றுலா வாய்ப்புகளைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்!

(இன்னும் காண்போம்)