மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 30 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

கிருஷ்ணகிரி
பிரீமியம் ஸ்டோரி
News
கிருஷ்ணகிரி

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 30 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

கிருஷ்ணகிரிக்கான சுற்றுலா வாய்ப்புகளைப் பற்றி, கடந்த இதழிலிருந்து பார்க்கத் தொடங்கினோம். அதைத் தொடர்வோம்…

தளி: தளி, கிருஷ்ணகிரியின் ஊட்டி. 25ஂC முதல் 30ஂC-தான் வெப்பநிலை. மேலும் அழகிய நன்னீர் ஏரிகளும், கிலோமீட்டர் கணக்கில் நீளும் புல்வெளிகளும் உண்டு. மலைகளும் காணக்கிடைக்கும். இங்கே இதுவரை பெரிதாக எந்தச் சுற்றுலா நடவடிக்கையும் தோன்றவில்லை. ‘Little England’ என்று பெயருக்குச் சொல்கிறார்கள். ஆனால், அதற்குரிய அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. ஆனால், தளி என்றால் ஒரு Brand இருக்கிறது. அந்த Brand-ஐ மூலதனமாக வைத்துச் சிறிய சிறிய சுற்றுலா நடவடிக்கைகளைத் தொடங்கினால், நாளடைவில் தமிழ்நாடு அளவில் முக்கியச் சுற்றுலாத்தலமாகத் தளி மாறும்.

ஏரிக்குள் மர வீடுகள்... பலூன் சவாரி... படப்பிடிப்புத் தளம்!

Lake Villas: தளியின் ஏரிகள் பெரும்பாலும் சுத்தமானவை. குளிரில் உடலை இறுகவைப்பவை. இங்கே Lake villas போன்ற சிறிய, அழகான மர வீடுகளை அமைக்கலாம். பெங்களூர் மற்றும் ஓசூர் அருகில் இருப்பதால், வார இறுதி நாள்களில் அதிக சுற்றுலாப்பயணிகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. இவர்களுக்குத் தேவையான Food Courts, Spa, Open Bar ஆகியவையும் மற்ற வருமான வாய்ப்புகள்.

Barf Ball: இது இன்னும் நம்மூருக்கு வராத ஒரு புதிய Concept. ஒன்றுமில்லை, ஒரு பெரிய திருவிழா பலூன்தான் Barf Ball. அந்த Barf Ball-ஐ ஒரு கயிற்றால் கட்டி தண்ணீரில் மிதக்கவிட்டிருப்பார்கள். அதற்குள் நம்மை 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை அனுமதிப்பார்கள். செம அனுபவமாக இருக்கும். இதற்கான கட்டணமாக 300 - 500 ரூபாய் வசூலிக்கலாம். தளியின் அத்தனை ஏரிகளிலுமே Barf Ball சேவையை அறிமுகப்படுத்தலாம்.

கனவு - 30 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

Hobbit House: பச்சைப் புல்வெளிகள் அதிகம்கொண்ட பகுதி தளி. கிட்டத்தட்ட Hatsun விளம்பரத்தை நேரில் பார்த்ததைப்போலவே இருக்கும். இப்படிப்பட்ட இடத்தில் Hobbit House என்ற குட்டி வீடுகளை அமைக்கலாம். இதுபோல ஊட்டியில் Aventura Fern Hill என்ற நிறுவனம் குட்டி வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டுவருகிறது. இங்கே ஒரு வீட்டில் ஒரு நாள் தங்க வேண்டுமானால், 2,000 ரூபாய் கட்டணம். தளியிலும் இதே அளவு கட்டணத்துடன் தாராளமாக Hobbit House கொண்டுவரலாம்.

அஞ்செட்டி: அஞ்செட்டி ஒரு மினி பொள்ளாச்சி. மலைகள், வயல்கள், குளங்கள், ஓடைகள், தென்னை மரங்கள், சீரான வீடுகள் என மனதை ஆட்கொள்ளும் அழகிய ஊர். கூடவே, அன்பான மக்களும் உண்டு. ஆனால், இன்றுவரை அஞ்செட்டி மக்கள் அடிப்படை வசதிகளைக்கூட அடைய முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள். மருத்துவத்துக்குக் கூட அவர்கள் தேன்கனிக்கோட்டைக்கோ, ஓசூருக்கோதான் செல்ல வேண்டும். எனவே அஞ்செட்டியை, பொள்ளாச்சிபோல Village Cinema Shooting Destination-ஆக மாற்ற முடியும் என்பது என் பரிந்துரை. அதுவும் அந்த மக்கள் அனுமதித்தால் மட்டுமே.

என் பங்குக்கு நான் பொருளாதாரப் பலன்களைப் பட்டியலிட்டுவிடுகிறேன். பொள்ளாச்சியில் ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்னால் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இன்று நாளொன்றுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருமானம் பெறும் அளவுக்கு அந்தப் பகுதி மக்கள் வளர்ந்திருக்கிறார்கள். சிறிய புரிதல்தான். திரைப்படப் படப்பிடிப்பு என்றால், நூற்றுக்கணக்கில் படக்குழுவினர் வருவார்கள். அவர்களை வேடிக்கை பார்ப்பதற்கென்று ஒரு கூட்டம் கூடும். இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளுக்கு என்று உணவகங்களும், தங்கும் விடுதிகளும், பொழுதுபோக்கு நடவடிக்கைகளும் உள்ளூர் மக்களால் ஆரம்பிக்கப்படும். நாளடைவில் ஆயிரத்திலிருந்து லட்சமாக, லட்சத்திலிருந்து கோடியாக உள்ளூர் மக்களின் ஒன்றுபட்ட ஆண்டு வருமானம் பெருகும்.

அஞ்செட்டி 8,600 ஏக்கர் பரப்பளவுகொண்ட ஊர். பொள்ளாச்சியோடு ஒப்பிடும்போது பல மடங்கு சிறியது. எனவே, பெரிய பட்ஜெட் படங்களுக்கு அல்லாமல், சிறிய பட்ஜெட் படங்களுக்கென்று அஞ்செட்டியை நிர்மாணிக்கலாம். சமீபத்தில் டிசைனிங் ஸ்டூடியோக்கள்கூட பொள்ளாச்சியில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அது சார்ந்து White Collar Jobs-ம் அங்கே பெருகிவருகின்றன. அஞ்செட்டியிலும் அதற்கான வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக, பொள்ளாச்சியில் திரைப்படப் படப்பிடிப்பு நடத்த இடம் கிடைக்காமல் ஆண்டுக்குப் பல நூறு படக்குழுவினர் திரும்பிச் செல்கிறார்கள். அவர்களுக்கு அஞ்செட்டி அபாரமான இரண்டாவது வாய்ப்பாக அமையும்!

கனவு - 30 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

11 மலைக் கோயில்கள்... அனைத்தையும் இணைக்கும்
சுற்றுலா சிறப்புப் பேருந்துகள்!


‘கிருஷ்ணகிரியில் திரும்பினால் ஒரு மலை கண்ணுக்குத் தெரியும்; அந்த மலையில் ஒரு கோயில் விளக்கு எரியும்’ என்பார்கள். அந்த அளவுக்கு மலைக் கோயில்களைக்கொண்ட ஊர் கிருஷ்ணகிரி. காவேரிப்பட்டணத்திலிருந்து ஆரம்பித்தால் தேன்கனிக்கோட்டை வரை மலைக் கோயில்கள் உண்டு. ஒவ்வொரு மலையுமே அருமையான Trekking அனுபவத்தை அளிப்பவை. இயற்கை சூழவும் அமைந்திருப்பவை. ஆனால், பெரிய பிரச்னை என்னவென்றால் இந்த மலைக் கோயில்கள் அனைத்துக்கும் மிகக் குறைந்த பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகளே இருக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே நிறைய பேருக்குச் சில மலைக் கோயில்கள் அறிமுகம் இல்லாமல் இருக்கின்றன. எனவே, கிருஷ்ணகிரியின் பெரும்பாலான மலைக் கோயில்களை ஒரே சுற்றுலாச் சங்கிலியில் இணைக்கும் வகையில் ஒரு ‘மலைக் கோயில் சுற்றுலாப் பேருந்துத் திட்டத்தை’ நான் முன்வைக்கிறேன். திருப்பதியின் ‘தர்மரதம்’தான் இதற்கு முன்மாதிரி!

கிருஷ்ணகிரியில் மலைக் கோயில்கள், மாவட்டம் முழுவதும் சிதறிச் சிதறி அமைந்திருக்கின்றன. ஒன்று காவேரிப்பட்டணத்தில் இருந்தால், இன்னொன்று தேன்கனிக்கோட்டையில் இருக்கிறது. எனவே, இரண்டு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறேன். முதல் பிரிவு கிருஷ்ணகிரி. இரண்டாவது பிரிவு ஓசூர்.

கனவு - 30 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

கிருஷ்ணகிரி பிரிவு: கிருஷ்ணகிரி பிரிவில் மொத்தம் ஐந்து மலைக்கோயில்களைச் சேர்த்திருக்கிறேன். இதில் முதன்மையான மலை வழிபாட்டிடம் சையது பாஷா மலை. இங்கே பழைமையான தர்கா ஒன்று அமைந்திருக்கிறது. இது கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இதற்கு அடுத்தது வெள்ளிமலை முருகன் கோயில். இது கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அடுத்தது, கணவாபட்டி மலைக் கோயில். இது கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவு. நான்காவதாக, பெரியமலைக் கோயில். இது கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவு. ஐந்தாவதாக, பாலகொண்டராய துர்கம் மலைக் கோயில். இது கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவு. இவை அத்தனையையும் இணைக்கும் வகையில் ஒரு காலை - மாலை சிறப்புப் பேருந்து ஒன்றை, தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்க வேண்டும். இதன் பணி, மலைக் கோயில்களுக்கு மேலே சென்று சுற்றிக் காண்பிப்பதல்ல. அதற்கு நேரமும் போதாது. எனவே, அந்தந்த மலைக் கோயில் அடிவாரங்களுக்குச் சுற்றுலாப்பயணிகளைக் கொண்டு சேர்ப்பது மட்டுமே சிறப்புப் பேருந்தின் வேலை.

ஓசூர் பிரிவு: ஓசூர் பிரிவில் மொத்தம் 6 மலைக் கோயில்களைச் சேர்த்திருக்கிறேன். இதில் முதன்மையானது, பிரமாண்ட ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக் கோயில். இது ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருக்கிறது. இதற்கு அடுத்த லட்சுமி வெங்கடேஸ்வரர் மலைக்கோயிலும், ஓசூர் மலைக் கோயிலுக்கு அருகிலேயேதான் உள்ளது. இதுவும் 2 கிலோமீட்டருக்குள்தான். அடுத்து, பிரம்மா மலைக் கோயிலும் ஓசூருக்கு அருகில்தான் உள்ளது. இதுவும்கூட 3 கிலோமீட்டருக்குள்தான் வரும். இப்போது மூன்று மலைக் கோயில்களின் பெயர்களையும் கவனியுங்கள். இந்து மத நம்பிக்கையின்படி மும்மூர்த்திகளின் மலைக் கோயில்கள். இந்தியாவில் காசிக்கு அடுத்து ஓசூரில்தான் இப்படிப்பட்ட மும்மூர்த்தி மலைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. இந்த மூன்று மலைகளையும் இணைக்கும் வகையில் ஒரு வேன் சர்வீஸை, தமிழ்நாடு சுற்றுலாத்துறை தொடங்க வேண்டும். இந்த வேனின் வேலையும் Pickup and Drop மட்டும்தான்.

கனவு - 30 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

இனி ஓசூரிலிருந்து கொஞ்சம் எட்டச் செல்வோம். முதன்மையாக தட்சண திருப்பதி மலைக் கோயில் இருக்கிறது. இது ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவு. இதற்கு அடுத்து கடைசியாக நஞ்சுண்டேஸ்வரர் மலைக் கோயில். இது ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவு. இந்த இரண்டு மலைக் கோயில்களையும் இணைக்கும் வகையில் இரண்டு சிறப்புப் பேருந்துகள் வேண்டும். ஏனென்றால், தட்சண திருப்பதி கோயில் கிருஷ்ணகிரி சாலையில் இருக்கிறது. நஞ்சுண்டேஸ்வரர் கோயில் தேன்கனிக்கோட்டை சாலையில் இருக்கிறது. இரண்டு சிறப்புப் பேருந்துகளின் பணியும் Just Pickup and Drop மட்டும்தான். சுற்றுலா வாய்ப்புகள் இன்னும் கொஞ்சம் இருக்கின்றன. அதை அடுத்த இதழில் பார்ப்போம்!

(இன்னும் காண்போம்)