மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 31 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

கிருஷ்ணகிரி
பிரீமியம் ஸ்டோரி
News
கிருஷ்ணகிரி

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 31 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருவிகள் உங்களை அழைக்கின்றன!

மலைகளுக்கு மட்டுமல்ல, அருவிகளுக்கும் புகழ்பெற்ற மாவட்டம் கிருஷ்ணகிரி. மாவட்டம் முழுவதும் கண்ணுக்குக் குளிர்ச்சியான, காதுக்கு இனிய அருவிகள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவுக்கு Potential கொண்டவை. முக்கியமாக, பெங்களூர், ஓசூர் போன்ற நகரங்களிலிருந்து வரும் Trekkers, Bikers போன்றவர்களுக்கு ஏதுவானவை. ஆகவே, இத்தகைய அருவிகளையெல்லாம் ஒருங்கிணைத்து அரசோ அல்லது தனியாரோ குறிப்பிட்ட சில நடவடிக்கைகளைச் செய்தால், மாவட்டத்துக்கான வருவாய் பல மடங்கு பெருகும்!

உதாரணத்துக்காக மூன்று அருவிகளை மட்டும் சொல்கிறேன்…

பெட்டமுகிலாலம் அருவி: இது அய்யூருக்கு அருகே இருக்கிறது. ஓசூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவு. பெங்களூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவு. உண்மையிலேயே அற்புதமான இடம். சாலைகளே சோலைகள்போல இருக்கும். கொஞ்சம் உள்ளே சென்றால் வனச்சூழலுடன்கூடிய அருவி நம்மை வரவேற்கும். தற்போது பெங்களூரிலிருந்து நிறைய Explorer Groups இங்கே வரத் தொடங்கியிருக்கிறார்கள். இங்கே சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு Resorts, Restaurants, Cafe, Camping போன்ற நடவடிக்கைகளைத் தொடங்கலாம்.

கனவு - 31 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

எண்ணேகோல்புதூர் அருவி: கிருஷ்ணகிரியின் குருபரப்பள்ளியில் இருக்கிறது இந்த அருவி. இதை, `கொஞ்சம் பெரிய நீரோடை’ எனலாம். ஓர் அலங்காரத்துக்காகவே அருவி என்று சொல்கிறேன். இந்த அருவியை Wedding Photography-க்கான சிறப்பு இடமாக மாற்றலாம். ஒரு போட்டோ ஷூட்டுக்குக் குறைந்தபட்சம் 25,000 முதல் 3 லட்சம் ரூபாய் வரை நம்மால் கட்டணம் வசூலிக்க முடியும். ஆனால், சில இடங்களில் நிறைய ஆழமும் வழுக்குப்பாறைகளும் இருக்கும். எனவே, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு Local Guides Service நிறுவனம் ஒன்றை நியமிக்க வேண்டும். இது உள்ளூர் மக்களின் வருமானத்துக்கு உதவும்.

பேரண்டப்பள்ளி அருவி: ஓசூருக்கு அருகில் உள்ளது. கோவிட் சமயத்தில் நிறைய பேர் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்குச் செல்ல முடியாத சூழலில், இங்கே வந்து குவிந்தார்கள். முக்கியமாக, Bikers கூட்டம் அதிகம். எனவே, பேரண்டப்பள்ளி அருவியை இனி Bikers Rest Stop-ஆக Promote செய்யத் தொடங்கலாம். அவர்களுக்குத் தேவையான ‘Ready to grab and go’ வகை உணவகங்களை உடனடியாகத் திறக்கலாம்.

மாம்பழத் திருவிழா: போட்டிகள், பட்டங்கள், கொண்டாட்டம்!

கிருஷ்ணகிரிதான் இந்தியாவின் மாம்பழத் தலைநகரம். இங்கே வருடம்தோறும் ஜூன் மாதத்தில் மாம்பழக் கண்காட்சி பெரிய அளவில் நடைபெறும். மொத்தம் 23 நாள் திருவிழா. ஏறக்குறைய 6 லட்சம் மக்கள் வருகை தருவார்கள். இங்கே ஒவ்வொரு நாளும் வகை வகையான மாம்பழங்களைக் காட்சிக்குவைத்து விவசாயிகள் அசரடிப்பார்கள். இனி இந்த மாம்பழக் கண்காட்சியை அமெரிக்காவின் கில்ராய் பூண்டுத் திருவிழா (Gilroy Garlic Festival) போல சர்வதேச லெவலுக்கு நாம் கொண்டுசெல்ல வேண்டும். அப்படிச் செய்தால், தமிழ்நாட்டைக் கடந்து இந்திய மற்றும் உலகமெங்குமிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள்.

கனவு - 31 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

மொத்தம் 4 திட்டங்கள்…

Mango Fruit Carving: இது மாம்பழத்தை வைத்து, சிற்பம் உருவாக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டில் பார்வையாளர்களுக்குச் சிறிய கத்தி ஒன்றை அளிப்பார்கள். அதைக்கொண்டு மாம்பழத்தில் அவர்களுக்கு விருப்பப்பட்ட வடிவத்தை உருவாக்கி நடுவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். நடுவர் சிறந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்துப் பரிசளிப்பார். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த மாம்பழச் சிற்பச் செதுக்கு விளையாட்டில் பங்கேற்கலாம்.

Mango Cooking Competition: தற்போது எங்கெங்கு காணினும் சமையல் போட்டிகளும் உணவுப்பொருள்கள் தொடர்பான வீடியோக்களும்தான். அந்த வகையில், மாம்பழம் தொடர்பான அத்தனை உணவு வகைகளையும் செய்ய வழிவகுக்கும் ஏற்பாடுதான், Mango Cooking Competition. இந்தப் போட்டியில் மேங்கோ ஐஸ்க்ரீம், மேங்கோ கேக், மேங்கோ புடிங், மேங்கோ மில்க் ஷேக் போன்ற வெளிநாட்டு வகைகள், மாங்காய் பச்சடி, மாங்காய் ஊறுகாய் என உள்நாட்டு வகைகள் உள்ளிட்ட அத்தனையையும் பார்வையாளர்களை உருவாக்கவைக்கலாம்.

Mango Themed Fashion Fest: சிம்பிள், இது மாம்பழம் சார்ந்த Fashion போட்டி. இதன் மூலம், பதின்பருவத்தினரையும் இளைஞர்களையும் வெகுவாகக் கண்காட்சி அரங்குக்குள் கொண்டுவர முடியும். ஒவ்வோர் ஆண்டும் ஒரு பெண் வெற்றியாளர் மற்றும் ஆண் வெற்றியாளரைத் தேர்ந்தெடுத்து, ‘Mango Queen, Mango King’ பட்டத்தையும்கூட கொடுக்கலாம். இது, மாம்பழக் கண்காட்சி Fashion Fest-ஐ நாளடைவில் ஒரு Brand Event-ஆக அனைவர் மத்தியிலும் கொண்டுசெல்லும்.

கனவு - 31 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

Taste and Find: இதுவும் பார்வையாளர்களை Engage செய்ய உதவும் ஒரு பொழுதுபோக்குப் போட்டிதான். இந்தப் போட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் அல்போன்சா, மூக்குநீளம், செந்தூரா, பங்கனப்பள்ளி போன்ற மாம்பழ வகைகளைப் பிரபலப்படுத்த ஏதுவானது. போட்டியின்போது, பார்வையாளர்களின் கண்ணைக் கட்டிவிட்டு ஒவ்வொரு மாம்பழத்தையும் சுவைத்துப் பார்த்து அதன் வகையைக் கண்டுபிடிக்கச் சொல்ல வேண்டும். அல்போன்சா இனிக்கும், அதே மூக்குநீளம் சற்றே துவர்க்கும். இதையெல்லாம் சரியாகக் கண்டிபிடித்துச் சொல்வோருக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கலாம்.

கனவு - 31 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

கிருஷ்ணகிரியின் பாரம்பர்யம்... எல்லோருக்குமான மாட்டுப் பந்தயம்!

ஜல்லிக்கட்டுக்கு எப்படி மதுரை அலங்காநல்லூரோ, அப்படி மாட்டுப் பந்தயத்துக்குக் கிருஷ்ணகிரி. மாட்டுப் பந்தயம் என்றால் மாட்டுப் பந்தயமேதான். அதிகபட்சம் 100-லிருந்து 200 மீட்டர் தூரம். டைமர் வைத்துவிடுவார்கள். எந்த மாடு குறைவான நேரத்தில் எல்லையைக் கடந்து முடிக்கிறதோ அந்த மாடு பரிசைத் தட்டிச்செல்லும். இதில், ஜல்லிக்கட்டைப்போல மனிதர்கள் மாடுகளின்மீது பாய்வது இருக்காது. எருதாட்டம்போல மாட்டின் கழுத்தில் வடத்தைப் போடுவதும் இருக்காது. ரேக்ளா ரேஸ் போல மாடுகளைச் சாட்டையால் அடிப்பதும் இருக்காது. ஆனால், சில ஆர்வக்கோளாறு இளைஞர்கள் தடுப்புகளைத் தாண்டி எகிறிக் குதிப்பார்கள். அதை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். போலவே, மாட்டுப் பந்தயத்தில் பிற மாட்டு விளையாட்டுகளைப்போல ‘சாதியம்’ கிடையாது. எவரும் வரலாம். வெல்லலாம். செல்லலாம்.

ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாளான காணும் பொங்கலில் தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு மாட்டுப் பந்தயம் விண்ணை முட்டும் சத்தத்துடன் களைகட்டும். ஜல்லிக்கட்டைப்போலவே மாட்டுப் பந்தயத்துக்கும் மிகுந்த சிரத்தை எடுத்து உரிமையாளர்கள் மாடுகளைத் தயார் செய்வார்கள். ஒவ்வொரு மாட்டுக்கும் வித்தியாசமான பெயர்கள்கூட இருக்கும். சில வருடங்களுக்கு முந்தைய மாட்டுப் பந்தயத் திருவிழாவில், உசைன் போல்ட், ஆர்.டி.எக்ஸ், சாம்பல்பள்ளம் எக்ஸ்பிரஸ் என அசத்தலான சில பெயர்களை நான் கேள்விப்பட்டேன். இனி வரும் காலங்களில், கிருஷ்ணகிரி மாட்டுப் பந்தயத்தை மெக்சிகோவின் Bull Run போல சர்வதேசத் தரத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். அப்படிக் கொண்டுசென்றால், உள்நாடு, வெளிநாடு என அத்தனை தளங்களிலிருந்தும் பார்வையாளர்கள் வந்து கிருஷ்ணகிரியின் பொருளாதாரத்தை உயர்த்துவார்கள். நமது பாரம்பர்யமும் காக்கப்படும்.

கனவு - 31 - கிருஷ்ணகிரி - வளமும் வாய்ப்பும்

‘கனவு கிருஷ்ணகிரி’ அட்டகாசமாக முடிந்தது நண்பர்களே. ஆறு அத்தியாயங்களாக என் கரங்களைக் கதை கேட்கும் சிறு குழந்தையைப்போலப் பிடித்து வந்ததற்கு நன்றி. நான் சொல்லியிருக்கும் அத்தனை திட்டங்களில் குறிப்பிட்ட சிலவற்றை நிறைவேற்றினால்கூட, கிருஷ்ணகிரி ஓசூருக்கு நிகரான வருமானத்தையும் வேலைவாய்ப்புகளையும் பெறும். கூடவே, கிருஷ்ணகிரி இளைஞர்கள் அடுத்த பல நூறு ஆண்டுகளுக்கு வேறு மாநிலங்களுக்குக் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்குச் செல்லவேண்டிய நிலையும் ஏற்படாது. உங்களுடன் நானும் கிருஷ்ணகிரியின் வளர்ச்சியைக் காண ஆவலாகக் காத்திருக்கிறேன்!

(இன்னும் காண்போம்)

நம் அடுத்த கனவு திருவாரூர்