மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 32 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

திருவாரூர்
பிரீமியம் ஸ்டோரி
News
திருவாரூர்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 32 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு

‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி

சோம்பலில்லாமல் ஏர் நடத்தி

கம்மாக் கரையை உசத்திக் கட்டி

கரும்பு கொல்லையில் வாய்க்கா வெட்டி

சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டு

தகுந்த முறையில் தண்ணீர்விட்டு

நெல்லு விளைஞ்சிருக்கு...

வரப்பும் உள்ள மறைஞ்சிருக்கு..!

அட காடு விளைஞ்சென்ன மச்சான்

நமக்குக் கையும் காலுந்தானே மிச்சம்...

கையும் காலுந்தானே மிச்சம்!’

`நாடோடி மன்னன்’ படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருந்திப்போகிற மாவட்டம் திருவாரூர். பாடல் எழுதப்பெற்று, சுமார் 64 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் விவசாயமும், விவசாயிகளின் நிலைமையும் பெரிதாக மாறவில்லை. இதை உறுதிப்படுத்தும் வகையில் வேளாண் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி தியோடர் ஷூல்ட்ஸ் ‘வேளாண் சார்ந்த மக்கள் வறுமையில்தான் இருப்பார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக திருவாரூர் இருப்பதற்கு ஒரே காரணம்... இங்கே விவசாயம்... விவசாயம்... விவசாயம் தவிர வேறில்லை என்பதுதான்!

இந்தியாவில் மட்டும்தான் விவசாயமும் விவசாயியும் எமோஷனலாகப் பார்க்கப்படுகிறார்கள். விவசாயத்தை எமோஷனலாகப் பார்க்காமல், அதைக் கொஞ்சம் புரொமோஷனாக யோசித்தாலே பல கோடி வருமானம் பெறும் திட்டங்களைத் தீட்டி, விவசாயத்தின் மாறாத பிம்பத்தை மாற்றியமைக்கலாம்.

கனவு - 32 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

திருவாரூர் மண்ணிலிருந்து... ரைஸ் பிரான் ஆயில்!

வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து, மாத பட்ஜெட்டில் எகிறி, குடும்பத் தலைவர்களின் தலையைக் கிறுகிறுக்க வைத்துக்கொண்டிருக்கிற காலம் இது. காரணம், சந்தையில் பெரும்பாலும் சூரியகாந்தி சமையல் எண்ணெய் கோலோச்சிக்கொண்டிருப்பதுதான். பல கோடி மக்கள்தொகைகொண்ட இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் பெரிய அளவுக்கு சூரியகாந்திப் பயிர்கள் விளைவிக்கப்படுவதில்லை என்கிற விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. பின்னர் எப்படி இவ்வளவு சூரியகாந்தி எண்ணெய் நிறுவனங்கள் என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் வணிக உத்தி வேறு. இப்போது அதை ஆராய வேண்டியதில்லை. அது வேறொரு பிரச்னை. இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளவேண்டியது ஒன்றுதான். உணவுச் சந்தையில் சமையல் எண்ணெயின் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதே அது.

பெரும்பாலும் உண்ணும் அரிசியாக மட்டுமே பார்க்கப்பட்டுவரும் நெல்லுக்குள் மட்டுமில்லை, அதற்கு வெளியேயும் அதைவிட அதிக பொருளீட்ட முடியும். வெளியே என்று குறிப்பிடுவது அதன் தவிட்டைத்தான். அரிசியைப் பிரித்தெடுக்கும்போது எஞ்சும் உபரியான தவிட்டிலிருந்து ரைஸ் பிரான் ஆயிலைத் (Rice Bran Oil) தயாரிக்கலாம். உண்மையில், உடலுக்குக் கேடு விளைவிக்காத, உண்ணத் தகுந்த நம் கண்முன்னே விளையும் பயிர்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்களின் பட்டியலில் ரைஸ் பிரான் ஆயிலை இணைத்துக்கொள்ளலாம்.

திருவாரூர் மாவட்டத்தில் தோராயமாக 5,00,000 ஏக்கர் அளவுக்கு நெல்தான் பிரதான பயிர். ஏக்கர் ஒன்றுக்குச் சுமார் 2 டன் அளவுக்கு நெல் விளைச்சலாகிறது. இதிலிருந்து அரிசியைத் தனியாகப் பிரித்துவிட்டால், தோராயமாக ஒரு டன் அளவுக்குத் தவிடு கிடைக்கும். அந்த வகையில் இந்த ஒரு மாவட்டத்தில் விளையும் நெற்பயிரிலிருந்து மட்டும் ஏறக்குறைய 3,50,000 டன் அளவுக்குத் தவிடு கிடைக்கும். ஒரு டன் தவிட்டிலிருந்து சுமார் 145 லிட்டர் ரைஸ் பிரான் ஆயிலைத் தயாரிக்க முடியும். சந்தையில் ஒரு லிட்டர் ஆயிலை 175 ரூபாய்க்கு விற்றால், ஆண்டுக்கு ஏறக்குறைய 875 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டலாம்.

கனவு - 32 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்
SergeyNivens

தமிழ்நாட்டில் ஐரோப்பா அளவுக்குப் பொருளாதாரத்தில் வளர்ந்த மாவட்டமாக, கோயம்புத்தூரைச் சுட்டிக்காட்டுவேன். அங்கே விவசாயம் மட்டுமில்லை. கூடவே, நிறைய தொழிற்சாலைகளும் இருப்பதால் அது வளமாக இருக்கிறது. திருவாரூரையும் வளர்ச்சியை நோக்கி நகர்த்த இங்கே நிறைய தொழிற்சாலைகளை உருவாக்கவேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில், ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி அளவுக்கு வருமானம் ஈட்டித்தரும் ரைஸ் பிரான் ஆயில் தொழிற்சாலையை, திருவாரூரில் அமைக்க வேண்டும். திருவாரூரைப் போன்ற பிற டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறையில் உற்பத்தியாகும் நெற்பயிர்களிலிருந்து கிடைக்கப்பெறும் தவிட்டையும் இங்கே அமைக்கப்படும் தொழிற்சாலைக்குக் கொண்டுவரும்போது, பெரிய அளவில் எண்ணெய் உற்பத்திக்கு வழிவகுக்கும். இங்கே ரைஸ் பிரான் தொழிற்சாலையை அமைப்பதன் வழியாக நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் பல லட்சம் விவசாயிகள் பயனடைவதோடு, அவர்களது வாழ்க்கைத் தரமும் உயரும்.

வேண்டும் ஒரு விவசாயக் கல்லூரி!

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏராளமான பொறியியல், மருத்துவ, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கல்லூரிகள் இருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்பினால், பல மாவட்டங்களிலிருந்து “இல்லை...” என்கிற பதிலே வரும். அதில் திருவாரூரும் இடம்பெறும். 90 சதவிகித மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும், விவசாயமே பிரதானமாக இருக்கும், இந்த மாவட்டத்தில், ஒரெயொரு விவசாயக் கல்லூரிகூட இல்லை. “ஏன் வேளாண் கல்லூரி?” என்று கேட்கலாம்.

கனவு - 32 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

இந்தியாவில் 1942-ம் ஆண்டு, வங்கத்தில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. கொத்துக் கொத்தாக மக்கள் செத்து மடிந்தனர். அதேபோல, 1960-ம் ஆண்டு பீகாரில் பஞ்சம் தன் ஆட்டத்தைத் தொடங்கும் முன்பே விழித்துக்கொண்டார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அமெரிக்காவின் உதவியை நாடினார். ஒரு கோடி டன் கோதுமை இறக்குமதியானது. அதன் பின்னர், இந்தியா மீண்டும் பஞ்சத்தின் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லை. அதற்குக் காரணம், இந்திரா காந்தி மட்டுமல்ல. இன்னொருவரும் உண்டு. அவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

இந்தியாவில் பசுமைப் புரட்சியை நடத்திய தமிழ்நாட்டுக்காரர் எம்.எஸ்.எஸ். கோதுமையும் அரிசியும் இன்று அளவுக்கு அதிகமாக விளைச்சலைப் பெறுவதற்குப் பின்னால் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரே மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படுகிறது. அவர் நினைத்திருந்தால், அவரின் தந்தையைப்போல மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயின்றிருக்கலாம். மாறாக, வேளாண் கல்லூரியில் சேர்ந்து, கற்று பின்னர் வேளாண்துறையில் நுழைந்து, இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றி அமைத்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் மீது இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் கீழ்க்காணும் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

பசுமைப் புரட்சியால் பாரம்பர்ய நெல் ரகங்கள் அழிக்கப்பட்டு, ஐ.ஆர் வகை நெல் ரகங்கள் ஆக்கிரமித்தன. கலப்புப் பயிர்முறை நீக்கப்பட்டு, ஒற்றைப் பயிர்முறை நடைமுறைக்கு வந்தது. இயற்கை உரங்கள் நீங்கி, ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால், உரம், பூச்சி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தினால்தான் பயிர்கள் நன்கு வளரும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட வீரிய நெல் ரகங்கள் அதிக நீரை உறிஞ்சின. இதனால் மண்ணிலிருக்கும் நீரைச் சேமித்துவைக்கக்கூடிய நீர்க் காப்பான்கள் மலட்டுத்தன்மையாக மாறின. இவை மட்டுமல்ல, பாரம்பர்ய நெல் ரகங்களின் சிறப்புகளான நோய் எதிர்ப்பு சக்தி, மழை, வெள்ளத்தில் நீடித்திருக்கும் திறன், வறட்சியைத் தாங்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு பண்புகளை ஒழித்துக்கட்டியது என்ற குற்றச்சாட்டும் உண்டு. இந்தியா பெரும் பஞ்சத்தில் இருந்தபோது, அதிலிருந்து விடுபட அன்றைய சூழலில் எம்.எஸ்.சுவாமிநாதன் எடுத்துக்கொண்ட முயற்சி சரியானதாக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு அது விவசாயத்துக்கும் இயற்கைக்கும் எதிரான ஒன்று.

கனவு - 32 - திருவாரூர் - வளமும் வாய்ப்பும்

எம்.எஸ்.சுவாமிநாதன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை உள்வாங்கிக்கொண்டு அவற்றைச் சரிசெய்யும் நோக்கில் இயற்கையையும் விவசாயத்தையும் பாதிக்காத வகையில் நவீன பசுமைப் புரட்சிக்கு வித்திட வேண்டும். வேளாண் கல்லூரிக்குள் வரும் இளையோர், பாரம்பர்ய விவசாயப் பயிர்களுக்கும் மண்ணுக்கும் கேடு விளைவிக்காத வகையில் தங்களது ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். இதற்காக, வேளாண் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவது அவசியம்.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய வகுப்பறைகள், ஆய்வகங்களை உருவாக்க வேண்டும். அதேசமயத்தில் பாரம்பர்ய விவசாய முறைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அவற்றில் நவீனத்தைப் புகுத்தி ஆரோக்கியமான மாற்றங்களை நோக்கி நகர்த்த வேண்டும். அதாவது, இயற்கை உரங்களையே பயன்படுத்தி அதிக அளவு விளைச்சலைப் பெறுவதோடு, அது மனித ஆரோக்கியத்தையும் மண் வளத்தையும் காப்பதாக அமைய வேண்டும். இவ்வாறு கல்லூரியின் தரத்தை மேம்படுத்தும்போது விவசாயக் கல்வி மீதான பார்வை மாறி, பொறியியல், மருத்துவம் தருகிற அதே மதிப்பை வேளாண் கல்லூரிகளும் பெறும். மாணவர்களும் ஆர்வத்துடன் நவீன, மேம்படுத்தப்பட்ட வேளாண் மேலாண்மைக் கல்வியைக் கற்க பெருந்திரளாக முன்வருவார்கள்.

ஆகவே, விவசாயமே பிரதானமாக இருக்கும் டெல்டா மாவட்ட மக்கள் பயனுறும் வகையில், திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவ வேண்டும். விவசாயிகளுக்கு தொழில்நுட்ப அறிவைப் புகட்டவும், பாரம்பர்ய முறைகளைத் தாண்டி பயிர் விளைச்சலை மேம்படுத்தவும், பயிர் சுழற்சியை நடைமுறைப்படுத்தவும், புதிய புதிய பயிர் ரகங்களைப் பயன்படுத்தவும், அதற்குரிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும்... எனப் பல்வேறு வகையில் வேளாண் கல்லூரி உதவும். இதை அமைக்க சுமார் 60 ஏக்கர் நிலம் தேவைப்படும். தோராயமாக 25 கோடி ரூபாய் செலவாகும். இதை அரசுதான் உருவாக்க வேண்டும் என்பதில்லை. தனியார்கூட இந்தக் கல்லூரியை நிர்மாணிக்கலாம். அதற்கு அரசின் நிதி உதவி, மானியம், உரிமம் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். நேரடியாகச் சுமார் 200 பேருக்கும் மறைமுகமாக 1,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

(இன்னும் காண்போம்)