சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

மாதவமாலா... மரச்சிற்பங்களின் பூமி!

சிற்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிற்பம்

கலை

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது மாதவமாலா எனும் சிறிய கிராமம். மாமல்லபுரத்தில் எப்போதும் கேட்கும் உளியின் ஓசை இந்த கிராமத்திலும் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இரண்டுக்கும் சின்ன வித்தியாசம்தான். மாமல்லபுரத்தில் கற்சிற்பங்களைச் செதுக்கும் ஓசை; மாதவமாலாவில் மரச்சிற்பங்களைச் செதுக்கும் ஓசை.

மாதவமாலாவின் பிரதான தொழில், மரச்சிற்பங்கள் செய்வதுதான். மரச்சிற்பங்கள் செய்வதைத் தொழிலாக மட்டுமல்லாமல், கலையாகவும் அடுத்த தளத்துக்குக் கொண்டுசேர்க்கிறார்கள். இவர்களில் பலர் தங்கள் படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்கள்.

கிராம எல்லையில் பேருந்துக்காகக் காத்திருந்த வரிடம், `‘இங்கே விருதுபெற்ற கலைஞர்களின் வீடு எங்கேயிருக்கிறது?’’ என்று விசாரித்தோம். ‘`பெத்தாச்சாரி (பெரிய ஆச்சாரி) வீடு எது?’ன்னு கேளுங்க. சொல்லுவாங்க’’ என்று வழி காட்டினார். தெருவுக்குள் நுழைந்து வீட்டைக் கண்டுபிடித்தோம். 80 வயது மதிக்கத்தக்க கிருஷ்ணமாச்சாரி, வீட்டு வாசலில் அமர்ந்து சிறு விநாயகர் சிலையைச் செதுக்கிக் கொண்டிருந்தார்.

சிற்பம்
சிற்பம்

அவரிடம் பேசினோம். “இருபது வயதிலிருந்து இந்தத் தொழிலைச் செய்துவருகிறேன். 1986-ம் ஆண்டு நான் செய்த, `ராதா கல்யாணம்’ மரச் சிற்பத்துக்கு ஆந்திர அரசின் விருது கிடைத்தது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக்கொண்டனர். இளம் தலைமுறையினர் ஒவ்வொரு சிற்பத்தின் தலை, கை, கால் என ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு அளவை நிர்ணயித்து, மரத்தில் முதலில் பென்சிலால் படத்தை வரைந்துவிட்டு, பிறகு செதுக்குவார்கள். ஆனால் இப்பொழுதும் நான் மனக்கணக்கின்படி சிற்பத்தின் நீளம், அகலம், உயரத்தை வடிவமைக்கிறேன்'' என்றபடியே மற்றொரு வீட்டைக் காட்டினார் கிருஷ்ணமாச்சாரி.

“எங்கள் பூர்வீகம் சென்னையை அடுத்த பெரியபாளையம். என் தாத்தாவுக்குத் தாத்தா மரச்சிற்பங்களைச் செய்துகொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அங்கிருந்து குடிபெயர்ந்து இங்கே வந்தார். அவர்தான் முதன்முதலில் இந்த கிராமத்துக்கு மரச்சிற்பம் செய்யும் தொழிலை அறிமுகப்படுத்தி யவர். பிறகு அவரிடமிருந்து ஒவ்வொருவராகக் கற்றுக்கொள்ளத் தொடங்கி, இன்று 25 குடும்பங்கள், அதையே பிரதான தொழிலாகக் கொண்டிருக்கின்றன. பலர் இங்கிருந்து வெளியேறி, இதே தொழிலைச் செய்துகொண்டிருக் கிறார்கள்” என்று தமிழையும் தெலுங்கையும் கலந்து பேசுகிறார் பாஸ்கரா ஆச்சாரி.

கிருஷ்ணமாச்சாரி, பாஸ்கர ஆச்சாரி
கிருஷ்ணமாச்சாரி, பாஸ்கர ஆச்சாரி

தேக்கு மரம், கொடுக்காப்புளி, வேங்கை மரம், வேப்பமரம், ரோஸ்வுட், அத்தி மரம், தூங்குமூஞ்சி மரம் எனப் பலவகையான மரங்களில் சிற்பங்கள் தயாராகின்றன. பெரும்பாலும் சாமி சிலைகள்தான் செய்யப்படுகின்றன. அதிலும் திருப்பதி வேங்கடாசலபதி சிலைகளுக்குத்தான் அதிக வரவேற்பு. புத்தர், இயேசு சிலைகள்கூட வடிமைக்கப்படுகின்றன. சாமி சிலைகள் தவிர, இயற்கைக்காட்சிகளையும் பறவைகளின் சிற்பங்களையும் வடிவமைக்கிறார்கள். ஒருவரின் புகைப்படத்தைக் கொடுத்தால், அதையும் சிற்பமாக வடித்துத் தருகிறார்கள். சிற்பங்களை ‘பொம்மைகள்’ என்றே குறிப்பிடுகிறார்கள். ஓரடி முதல் ஆறடிக்கும் அதிகமான உயரங்களில் இவை தயாராகின்றன. தனிச் சிற்பங்கள், பல கதாபாத்திரங்கள் இணைந்த காட்சி, நான்கைந்து கடவுள்கள் இணைந்திருப்பது போன்ற சிற்பங்களும் தயாராகின்றன.

இங்கு தயாராகும் மரச்சிற்பங்கள் சென்னை விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்டிலும், பூம்புகார் விற்பனைக்கூடத்திலும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. மத்திய அரசு சார்பில் இந்தியா முழுக்க நடைபெறும் கண்காட்சிகளிலும் விற்பனை செய்து வருகிறார்கள்.

“மரச்சிற்பங்களைப் பெரும்பாலும் அழகுப் பொருளாகத்தான் பயன்படுத்துவார்கள். வசதி படைத்தவர்கள் வீட்டு வரவேற்பறையில், படுக்கையறையில் இவற்றை வைத்திருப்பார்கள். திருமண மண்டபங்கள், அலுவலகங்கள், மருத்துவமனை முகப்பு எனப் பல இடங்களில் அழகுப்பொருள்களாகப் பயன்படுத்துவார்கள். ஒரே பாணியில் செய்யப்படும் சிற்பங்களுக்கு ஒருகட்டத்தில் வரவேற் பில்லாமல் போய்விடும். ஒரு கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு மரக்கட்டில் சட்டத்தின் வடிவமைப்பைப் பார்த்தேன். ‘ஏன் இதை மரச்சிற்பத்திலும் பயன்படுத்திப் பார்க்கக் கூடாது?’ என்று தோன்றியது. அதை மாடலாக வைத்துக்கொண்டு மரச்சிற்பங்களை ஆர்ச் போன்ற பேனல்வைத்துத் தயாரிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு இன்றுவரை மரச்சிற்பங்களுக்கு நல்ல வரவேற் பிருக்கிறது.

சிற்பம்
சிற்பம்

இவர், பிருந்தாவனத்தில் கண்ணனும் ராதையும் இருக்கும் சிற்பத்தை வடிவமைத்ததற்காக 2004-ம் ஆண்டு ஆந்திர மாநில விருதைப் பெற்றிருக்கிறார். இந்த கிராமத்திலேயே மேலும் ஐந்து பேர் மாநில விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள்.

மரங்களை வாங்கி வந்து 25 நாள்கள் தண்ணீரில் ஊறவைக்கிறார்கள். பிறகு மூன்று நாள்கள் வெயிலில் உலரவைக்கிறார்கள். பிறகுதான் சிற்பம் வடிக்கத் தொடங்குகிறார்கள்.

“மரத்தைத் தண்ணீரில் ஊறவைப்பதால் பூச்சிகள் உருவாகிவிடும். அவற்றை அகற்றிய பிறகுதான் சிற்பம் செய்யத் தொடங்குவோம். அத்திவரதர் சிலை பல ஆண்டுகளாகத் தண்ணீரில் எழுந்தருளியிருந்தது. பொதுவாக அத்திமரத்தில் செய்யப்படும் சிலைகளுக்கு ஆயுள் குறைவு. ஆனால், அந்தச் சிலை இத்தனை ஆண்டுகள் நீடித்திருப்பதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க வேண்டும். ஒன்று, சிலை செய்வதற்கான மரத்தை பல்வேறு மூலிகைகள், தாவர ரசாயனங்கள்கொண்ட நீரில் ஊற வைத்து, அதன் பிறகு வடித்திருக்க வேண்டும். இரண்டாவது, முழுக்க முழுக்க கடவுளின் அருளாக இருக்க வேண்டும்” என்கிறார் பாஸ்கர ஆச்சாரி.

சிற்பம்
சிற்பம்

‘கற்சிலைகளில் வடிக்கும் உணர்வுகளை மரச்சிற்பங்களிலும் வடிக்க முடியும்’ என்கிறார்கள் சிற்பிகள். சிரிப்பு, மெளனம், சாந்தம், ரௌத்திரம், சோகம், இயல்பான முகம் என அனைத்துவிதமான உணர்வுகளையும் மரச்சிற்பத்தில் பார்க்க முடிந்தது. ஒரு சிற்பத்தின் முகத்தில் கண், புருவம், முகவாய் ஆகிய இடங்களில் செய்யப்படும் சின்னச் சின்ன மாற்றங்கள்தான் ஒவ்வோர் உணர்வையும் வெளிப்படுத்துகின்றன.

“குழப்பமான மனநிலையிலோ, கோபத்திலோ சிற்பங்களைச் செய்ய மாட்டோம். அந்தத் தாக்கம் சிற்பத்தில் பிரதிபலித்துவிடும். அது போன்ற நேரங்களில் சிறிது ஓய்வெடுத்துவிட்டு, மனம் இயல்புநிலைக்குத் திரும்பிய பிறகே உளியைக் கையிலெடுப்போம். நாங்கள் வடிக்கும் மரச்சிற்பங்களுக்கு 300, 400 ஆண்டுகள்வரை ஆயுள் இருக்கும். அவ்வப்போது வார்னிஷ் மட்டும் அடித்துப் பராமரித்தால் போதும்.

தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு கலைகளைத் தன் வாயை அகலத் திறந்து விழுங்கிக்கொண்டிருக் கிறது. பல கலைகள் வழக்கொழிந்துவிட்டன. காரணம், அடுத்த தலைமுறை அவற்றைத் தங்கள் கையிலெடுக்காததே. மரச்சிற்பங்கள் செய்யும் கலையிலும் இந்த நிலை எதிரொலிக்கிறது. இளம் தலைமுறையினர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. ‘படிப்பை முடித்து, கண்ணாடிக் கதவுகள்கொண்ட குளிரூட்டப்பட்ட அறையில், கம்ப்யூட்டர் முன்னர் உட்கார்ந்து வேலை பார்ப்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது’ என்பது இங்கிருக்கும் பல மூத்த கலைஞர்களின் அங்கலாய்ப்பாக இருக்கிறது.

“மரச்சிற்பம் செய்யும் கலையை முழுமையாகக் கற்றுக்கொள்ள நான்கு ஆண்டுகள் ஆகும். ஆனால், அத்தனை ஆண்டுகளைச் செலவழித்து இதைக் கற்றுக்கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு பட்டப் படிப்பைப் படிக்க நான்கு ஆண்டுகளைச் செலவிடத் தயாராக இருப்பவர்கள், கலையைக் கற்றுக்கொள்ளச் செலவிடத் தயாராக இல்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகிறேன். சுமார் 65 பேருக்கு இந்தக் கலையைக் கற்றுக்கொடுத்திருக்கிறேன்” என்கிற பாஸ்கர ஆச்சாரி, தன் மகன் கிஷோர்குமாருக்குக் கல்லூரிப் படிப்போடு சிற்பக் கலையையும் பயிற்றுவி த்திருக்கிறார். தன் மகன் இந்தக் கலையின் மேல் ஆர்வம் காட்டியதால் மட்டுமே கற்றுக்கொடுத்த தாகவும் சொல்கிறார்.

கால ஓட்டத்தில் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த பலர் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டாலும், வறுமையிலும் சிலர் இந்தத் தொழிலைக் கைவிடாமல் பற்றியிருப்பதற்குக் காரணம் அதன்மீதிருக்கும் தீராக்காதல் தவிர வேறேதுமில்லை.

நகர்ப்புற வாசனையே இல்லாத, ரம்மியமான அந்தக் கிராமத்தின் அழகை ரசித்தவாறே புறப்பட்டோம். நெடுந்தூரத்துக்கு உளியின் ஓசை துணைக்கு வந்துகொண்டிருந்தது.