தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்தாண்டு ஜூன் மாதம் அருவி சீசன் தொடங்கியது முதலே குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் நன்றாகக் கொட்டி வருகிறது. சீசன் நாள்களில் கொட்டிய அதிகப்படியான வெள்ளத்தால் பல நாள்கள் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் சீசன் முடிந்த பின்னரும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையினால் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது.

மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமில்லாமல், அரையாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்காக குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர். அவ்வப்போது ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் பழைய குற்றால அருவிக்கே குளிக்கச் சென்று விடுகின்றனர். இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி, கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் பழைய குற்றாலத்துக்குக் குளிப்பதற்காக வந்துள்ளார்.
கிருஷ்ணன் தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்தார். அவர்களின் 4 வயது மகள் ஹரிணி, தண்ணீரைப் பார்த்ததும் ஆர்வத்தில் அருவியின் முன்புறமுள்ள சிறிய தடாகத்தில் இறங்கியுள்ளார். அப்போது தண்ணீரின் இழுவை வேகம் அதிகமாக இருந்ததால் சிறுமி ஹரிணி தடாகத்திலிருந்து ஆற்றினுள் தண்ணீர் விழுவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழாய் வழியாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்து தடாகத்தின் அருகில் சிறுமியை பிடித்து தூக்க முயன்றனர். ஆனால், அதற்குள் 50 அடி ஆழமுடைய பள்ளத்தில் தூக்கி விசப்பட்டு ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட்டனர். அப்போது குற்றாலத்திற்கு சவாரி ஏற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார், துணிச்சலுடன் ஆற்றில் இறங்கி சிறுமி ஹரிணியை பத்திரமாக மீட்டர். தண்ணீரின் இழுவையால் 50 அடி ஆழத்தில் தூக்கி வீசப்பட்டிருந்தாலும் லேசான காயத்துடன் சிறுமி உயிர் தப்பினார். சிறுமியைக் காப்பாற்றிய கார் டிரைவர் விஜயகுமாருக்கு சிறுமியின் பெற்றோர் மட்டுமில்லாமல் கூடி நின்ற அனைவரும் நன்றி கூறினர்.
தண்ணீரீல் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி ஹரிணியை காப்பாற்றிய விஜயகுமாரை தொடர்பு கொண்டு பேசினோம், “எனக்கு சொந்த ஊரே விளாத்திகுளம்தான். 28-ம் தேதி எங்க ஊர்ல இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை காரில் ஏற்றிக் கொண்டு குற்றாலத்துக்கு வந்தேன். அருவியில் வெள்ளப் பெருக்கு அதிகமாக இருந்ததுனால போலீஸ்காரங்க குளிக்க அனுமதிக்கல. இவ்வளவு தூரம் வந்துட்டோம், வெள்ளப் பெருக்கு குறையட்டும். ஒருநாள் காத்திருந்து குளிச்சுட்டு போவோம்னு அந்த பேமிலி சொன்னதுனால அன்னைக்கு குற்றாலத்துலயே தங்கினோம்.

மறுநாள் (29-ம் தேதி) மெயின் அருவில வெள்ளப் பெருக்கு குறையாததுனால பாதுகாப்பு பணியில இருந்த போலீஸார், பழைய குற்றாலத்துல குளிக்கச் சொல்லிச சொன்னாங்க. உடனே கார்ல அந்த பேமிலியை அழைச்சுக்கிட்டு பழைய குற்றாலத்துக்குப் போனோம். காலையில 9.10 மணிக்கு அந்த பேமிலி குளிக்கப் போனாங்க. நான் கார் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன். 10.15 மணி இருக்கும், 'அய்யோ... அம்மா... பச்சைப் புள்ளய தண்ணி அடிச்சுக்கிட்டுப் போகுதே… யாராச்சும் காப்பாத்துங்க'ன்னு சொல்லி ஒரே கூச்சல் சத்தம். பதறிப்போய் ஓடிப்போனேன்.
தண்ணியில ஒரு குழந்தை அடிச்சுக்கிட்டு வந்துச்சு. பதட்டத்துல கை, காலை அசைச்சுக்கிட்டே தவழ்ந்து வந்துச்சு. ஒரு பாறையில வந்து முட்டினதும், 'பாப்பா… அழுகாதம்மா... பாறைய நல்லாப் புடுச்சுக்கோ...'ன்னு சொல்லிக்கிட்டே தண்ணியில குதிச்சு நடந்து அந்தப் பாறை பக்கத்துல போயி புள்ளைய தூக்கிட்டேன். தண்ணி அதிகமா குடிச்சதுனால அந்தப் பாப்பா மயங்கிடுச்சு. தண்ணியோட இழுவை அதிகமா இருந்ததுனால என்னாலயே கரை ஏறி வர முடியல. கரையில நின்னுக்கிட்டிருந்த நாலஞ்சு பேருதான் என்னைத் தூக்கிவிட்டாங்க. கரைக்கு வந்ததுமே அந்தப் புள்ளையோட அம்மா என்னைக் கையெடுத்து கும்புட்டு குழந்தைய வாங்கினாங்க. என்னோட தோள்ல ரத்தம் கசிஞ்சு இருந்துச்சு.

பாறை, கல்லு பட்டு அந்தப் பாப்பாக்கு கை, முதுகுப் பகுதியில லேசான காயம் இருந்துச்சு. அதனால ஆஸ்பத்திருக்குத் தூக்கிட்டுப் போய்ட்டாங்க. அதுக்குள்ள சவாரிக்காரங்க, 'தம்பி... நேரம் ஆச்சு. ஊருக்குக் கிளம்பலாமா'ன்னு கேட்டாங்க. 'கொஞ்சம் பொறுங்கண்ணே அந்தப் பாப்பா கண் முழிக்கட்டும் பார்த்துட்டு போயிடலாம்'ன்னு சொன்னேன். 'நேரம் ஆச்சு தம்பி'ன்னு இன்னொரு தடவை அழுத்திச் சொன்னதுனால உடனே அவங்க பேமிலிய கார்ல ஏத்திக்கிட்டு கிளம்பிட்டேன். அந்தப் பாப்பாவைப் பார்க்க முடியலேங்கிற ஏக்கம் எனக்கு இருந்துச்சு.
விளாத்திகுளம் போகுற வரைக்கும் எனக்கு மனசே சரியில்ல. 30-ம் தேதி காலையில 11 மணி இருக்கும். அந்த ஹரிணி பாப்பாவோட அப்பா கிருஷ்ணன் எனக்கு போன் பண்ணி நன்றி சொன்னார். அவங்க மனைவியும் நன்றி சொன்னாங்க. பாப்பாவைப் பார்க்கணும்னு சொன்னேன். வீடியோ கால் பண்ணிணாங்க. ஆனா, பாப்பா அசந்து தூங்கிட்டிருந்துச்சு. அவங்ககிட்ட வீட்டு அட்ரஸ் வாங்கிட்டேன். ரெண்டு நாள்ல அந்தப் பாப்பாவை நேர்ல போய் பார்க்கப் போறேன். நேர்ல பார்த்தாதான் எனக்கு மனசுக்கு நிம்மதியா இருக்கும்” என்றார்.

”பொதுப்பணித்துறையோட கட்டுப்பாட்டுலதான் பழைய குற்றால அருவி இருக்கு. அந்த அருவிக்கு முன்னால உள்ள சிறிய தொட்டி மாதிரி அமைக்கப்பட்டிருக்கு. ஒன்றரை அடி ஆழமுள்ள இந்தத் தடாகத்துல விழுற தண்ணீர், ஆற்றில் விழுவதற்காக 4 மடைகள் அமைக்கப்பட்டிருக்கு. வெள்ளம் அதிகம் கொட்டும் நாள்கள்ல தடாகம் நிரம்பி நேராகவே ஆற்றில் கலக்கும். இந்த மடைகளுக்கு முன்னால கம்பி வலைகள் அமைக்கப்பட்டிருக்கு. தொடர் வெள்ளத்தால் இந்த கம்பி வலை சேதமடைந்ததால்தான் சிறுமி மடை வழியாக நேராக 50 அடி ஆழத்திலுள்ள ஆற்றுக்குள்ள விழுந்தார். இதை அவ்வப்போது கண்காணித்து வலையை சீரமைக்க வேண்டும். சீசன் காலங்கள்ல மட்டுமில்லாம சுற்றிலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கிற எல்லா நாள்கள்லயும் தீயணைப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்” என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனனர்.