
எங்களிடம்தான் மெஷின் வாங்க வேண்டும். விலை நான்கு லட்சத்து எழுபத்து இரண்டாயிரம் ரூபாய்’ என்றார்கள்
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகராட்சி பொறியாளருக்கு கமிஷன் கொடுக்காததால் தனது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக, ஒப்பந்ததாரர் சுமன் என்பவர் முதல்வர் அலுவலகத்துக்குப் புகார் அனுப்பி, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.
இது குறித்து ஒப்பந்ததாரர் சுமன் நம்மிடம் பேசும்போது, “கடந்த நான்கு ஆண்டுகளாக ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங் களில் ஒப்பந்தப் பணிகளைச் செய்து வருகிறேன். குழித்துறை நகராட்சியில், மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் பணிக்காக, அவற்றைக் கூழாக்கும் அரவை இயந்திரம் அமைப்பதற்கான ரூபாய் ஐந்தரை லட்சம் மதிப் புள்ள டெண்டரை, கடந்த ஆண்டு இறுதியில் எடுத்தேன். இதற்காக, கோவையைச் சேர்ந்த ஒரு கம்பெனியிடமிருந்துதான் இயந்திரங்களை வாங்க வேண்டும் என நகராட்சி இன்ஜினீயர் பேரின்பம் சாமுவேல் அப்போது சொன்னார்.

டெண்டர் முடிந்து வெளியே வந்த பத்தாவது நிமிடம் அந்த நிறுவனத்திலிருந்து போன் செய்து, ‘எங்களிடம்தான் மெஷின் வாங்க வேண்டும். விலை நான்கு லட்சத்து எழுபத்து இரண்டாயிரம் ரூபாய்’ என்றார்கள். `மெஷின் வாங்கியதுபோக மீதமிருக்கும் தொகையில், இன்ஸ்டாலேஷன் பண்ணுவது சாத்தியமில்லை’ என்றேன் அவர்களிடம். ‘எங்களிடம் மெஷின் வாங்கவில்லையென்றால் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்றார்கள். இதனால், நான் வேறு நிறுவனத்திடமிருந்து தரமான மெஷின் வாங்கினேன். அதைத் தொடர்ந்து, இன்ஜினீயர் பேரின்பம் சாமுவேல் தனக்கு 20% கமிஷன் வேண்டும் எனக் கேட்டார். நான் கொடுக்கவில்லை. எனவே, மெஷினைப் பொருத்தும் முன்பே அது தரமற்றது என்று பிரச்னை செய்தார்.

‘இரண்டு ஆண்டுகளுக்குள் மெஷினில் என்ன பிரச்னை வந்தாலும் சரிசெய்து தருகிறோம்’ என்று நான் எழுதிக்கொடுத்த பிறகு, `இனியும் பிரச்னை செய்தால் விஜிலென்ஸுக்குப் போவேன்’ என்றதும்தான் மெஷினைப் பொருத்த அனுமதித்தார். ஆனால், தற்போது மெஷின் சரியாக வேலை செய்யவில்லை, அரைத்த கூழ் தூரமாகப் போய் விழுகிறது போன்ற காரணங்களைச் சொல்லி டெண்டரை ரத்துசெய்திருக்கிறார். அவர் குறிப்பிட்ட கம்பெனியில் மெஷின் வாங்கவில்லை, கேட்ட கமிஷனைக் கொடுக்கவில்லை என்பதால், ஏறத்தாழ ரூபாய் ஆறு லட்சம் வரை செலவு செய்த பிறகு டெண்டரை ரத்துசெய்து என்னைப் பழிவாங்குகிறார். இது குறித்து முதல்வருக்குப் புகார் அளித்திருக்கிறேன்” என்றார்.

இது பற்றி குழித்துறை நகராட்சி பொறியாளர் பேரின்பம் சாமுவேலிடம் பேசினோம். “அந்த மெஷின் சரியில்லை என வேறு வாங்கிப் பொருத்திவிட்டோம். இப்போதைய மெஷின் நன்றாக ஓடுகிறது. கமிஷன் கேட்டோம் எனக் கூறுவதெல்லாம் பொய்யான தகவல்” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
மக்கள் வரிப்பணத்தை வாரிச்சுருட்ட நினைப்பது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசின் கடமை!