வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் (பி.டி.ஓ) கோபி, கடந்த 24-12-2022 அன்று மதியம் மதுபோதையில் தள்ளாடியபடி, அவரது அலுவலகத்துக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர், கணினி அறையில் அமர்ந்திருந்த பெண் ஆபரேட்டர்கள் இருவரின் தோல்மீது கை வைத்து தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான பெண் ஊழியர்கள் இருவரும் கணினி அறைக்குள் இருந்து வெளியே ஓடிவந்து, சக ஆண் ஊழியர்களிடம் நடந்ததைக் கூறியிருக்கிறார்கள்.

ஆத்திரமடைந்த ஆண் பணியாளர்கள், பி.டி.ஓ கோபியை வெளியே பிடித்து இழுத்துவந்து வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். இந்தப் பிரச்னையால் அலுவலகமே களேபரமாகியிருக்கிறது. இதுபற்றி தகவலறிந்ததும் ஒன்றியக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன் அங்கு விரைந்துசென்று, பி.டி.ஓ கோபியை மீட்டதுடன் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் கவனத்துக்கும் புகாராகக் கொண்டுசெல்லப்பட்டது.
ஆட்சியரின் உத்தரவின்பேரில், துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர், பி.டி.ஓ கோபி மீதான பெண் ஊழியர்களின் குற்றச்சாட்டு ‘உண்மை’ எனத் தெரியவந்ததால், கோபியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்தப் புகார் தொடர்பாக பி.டி.ஓ கோபியை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டதற்கு, ‘‘அது வந்து சார், அது வந்து சார்... லீவில் இருக்கிறேன்’’ என்றவரிடம், ‘‘சம்பவத்தன்று நீங்கள் குடிபோதையில் இருந்தது உண்மைதானா?’’ என்று கேட்டபோது, ‘‘அதை எப்படி சார் நான் சொல்ல முடியும்...’’ என்றபடியே விளக்கம் தர மறுத்துவிட்டார். கே.வி.குப்பம் ஒன்றியக்குழுத் தலைவர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ‘‘அன்றைய தினம் பி.டி.ஓ கோபி மதுபோதையில்தான் இருந்தார். பெண் ஊழியர்கள் என்னிடம் கொடுத்த மனுவில் ‘கோபி மதுபோதையில் எங்களிடம் தகாத வார்த்தைகளில் பேசினார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்’’ என்கிறார்.