Election bannerElection banner
Published:Updated:

`நேற்று எதிர்ப்பு, இன்று ஆதரவு’ அதிமுக தலைமை தந்த ட்ரீட்மென்ட்டால் மனம் மாறிய கே.வி.குப்பம் எம்எல்ஏ

எம்.எல்.ஏ லோகநாதன்
எம்.எல்.ஏ லோகநாதன்

கே.வி.குப்பம் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திவந்த அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ லோகநாதன் திடீரென அந்தர் பல்டி அடித்து கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்துவருகிறார்.

வேலூர் மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் நான்கில் அ.தி.மு.க நேரடியாகப் போட்டியிடுகிறது. இந்த நான்கு தொகுதிகளின் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களும் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். அவர்களில், குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த காத்தவராயன் கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் 28-ம்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அ.தி.மு.க வசம் இருக்கிற ஒரே தொகுதி கே.வி.குப்பம் மட்டும்தான். 2011-ல் உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களிலும் அ.தி.மு.க-வே வெற்றிபெற்று தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. சிட்டிங் எம்.எல்.ஏ லோகநாதன் மீண்டும் சீட் கேட்டிருந்த நிலையில் கூட்டணியிலிருக்கும் புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி.குப்பம் ஒதுக்கப்பட்டது.

கூட்டணி வேட்பாளருக்கு எதிராக நடந்த போராட்டம்
கூட்டணி வேட்பாளருக்கு எதிராக நடந்த போராட்டம்

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி இரட்டை இலைச் சின்னத்திலேயே களமிறங்கியிருக்கிறார். இதற்கிடையே, தனக்கு மீண்டும் சீட் கிடைக்காத கடுப்பிலிருந்த சிட்டிங் எம்.எல்.ஏ லோகநாதன் போராட்டத்தில் குதித்தார். ``அமைச்சர் வீரமணி எனக்கு சீட் கிடைக்காமல் செய்துவிட்டார். மற்ற தொகுதிகளில் சீட் கிடைத்த வேட்பாளர்களிடம் பணம் வாங்கினார்’’ என்று பகிரங்கமாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார் லோகநாதன். இவரின் ஆதரவாளர்கள் ஒருபடி மேலே போய், ``கூட்டணி வேட்பாளருக்கு வேலை செய்ய மாட்டோம். அதிலும் அவர் வெளியூர் வேட்பாளர். அந்த ஒரே காரணத்துக்காகவே தேர்தல் பணிகளைப் புறக்கணிக்கிறோம்’’ என்றெல்லாம் இரண்டு நாள்களுக்கும் மேல் சாலையை மறித்து ரகளை செய்தனர்.

இந்தநிலையில், அவர்களின் எதிர்ப்புகள் திடீரென தலைகீழாக மாறியிருக்கின்றன. கூட்டணி வேட்பாளரை வசைபாடியவர்கள் இப்போது அவருக்கு வாக்கு சேகரித்துவருகின்றனர். சிட்டிங் எம்.எல்.ஏ லோகநாதனோ, ``கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதே எனது லட்சியம்’’ என்று கூறி அனல்பறக்கப் பிரசாரம் செய்துவருகிறார். ஓரிரு நாளில் லோகநாதன் இப்படி மாறியதற்கான பின்னணி பற்றி விசாரித்தோம். நம்மிடம் பேசிய உள்விவரம் அறிந்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``சிட்டிங் எம்.எல்.ஏ லோகநாதன் ஓய்வுபெற்ற ராணுவ வீரர். அவர் இந்தக் கட்சியில் இணைந்த பின்னர் கே.வி.குப்பம் ஒன்றியக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி வேட்பாளரை ஆதரித்தபோது...
கூட்டணி வேட்பாளரை ஆதரித்தபோது...

தற்சமயம், எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார். கட்சியிலும் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பு வகிக்கிறார். எங்கேயோ இருந்த லோகநாதனை உச்சத்துக்குக் கொண்டு வந்தது அதிமுக. லோகநாதன் தொடர்ந்து அதிகாரத்திலேயே இருக்க விரும்புவது தவறு. தலைமை அவரை அழைத்து கண்டித்துப் பேசியிருக்கிறது. கட்சிப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டுவிடும் என்று எச்சரித்து அனுப்பியிருப்பதால், தற்போது வேறு வழியின்றி கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகப் பணியாற்றிவருகிறார்’’ என்றனர்.

தனது ஆதரவாளர்களிடமும், கூட்டணி வேட்பாளருக்காக தீவிரப் பிரசாரம் செய்ய கட்டளையிட்டிருக்கிறார் லோகநாதன். ‘என்னங்க தலைவரே... நீங்க சொல்லித்தானே போராட்டம் பண்ணினோம்... இப்ப ஆதரிச்சு கோஷம் போட சொல்றீங்களே’ என்று கேள்வி கேட்க, `அது போன வாரம். இது இந்த வாரம்’ என்ற ரீதியில் வேலையைப் பார்க்கச் சொல்லியிருக்கிறாராம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு