கட்டுரைகள்
Published:Updated:

கனவுகளுடன் புதைந்த வாழ்க்கை!

மூணாறு
பிரீமியம் ஸ்டோரி
News
மூணாறு

நான்கு தலைமுறைக்கு முன்னால் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்றவர்கள். சிலர் அந்தப்பகுதியிலேயே பெண்ணெடுத்து, பெண் கொடுத்து உறவுகளைப் பெருக்கிக்கொண்டார்கள்.

நேற்றுவரை மகிழ்ச்சியும் உணர்ச்சியுமாக உயிர்ப்போடிருந்த அந்தக் குடியிருப்பு, இப்போது புதைகுழியாகிக் கிடக்கிறது. சகதியில் தோய்ந்த உடல்களைத் தோண்டியெடுக்கும்போதெல்லாம் உயிரை உருக்குகிற ஒப்பாரி நடுங்க வைக்கிறது.

மூணாறு பகுதியில் 23 எஸ்டேட்கள் இருக்கின்றன. அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் குடியிருக்க 110 டிவிசன்கள் இருக்கின்றன. சுமார் 11,000 தொழிலாளர்கள் இந்தக் குடியிருப்புகளில் வசிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் பெட்டிமுடி டிவிசன். மூணாற்றி லிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிறது. கரடுமுரடான பாதை... ஜீப் மூலமாகத்தான் செல்லமுடியும். இங்கு 13 வரிசைகளில் வீடுகள் உள்ளன. 4வது லைனில் இருந்த 25 வீடுகள்தான் இந்த திடீர் நிலச்சரிவில் சிக்கிப் புதைந்து போயிருக்கின்றன. தொடர்ந்து பெய்த மழையால் ஓடைகள் காட்டாறாக மாறி நிலச்சரிவை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார்கள். யாரும் பேசும் மனநிலையில் இல்லை. கண்ணீரில் வார்த்தைகள் கரைந்துவிடுகின்றன.

கனவுகளுடன் புதைந்த வாழ்க்கை!

இறந்தவர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். நான்கு தலைமுறைக்கு முன்னால் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்றவர்கள். சிலர் அந்தப்பகுதியிலேயே பெண்ணெடுத்து, பெண் கொடுத்து உறவுகளைப் பெருக்கிக்கொண்டார்கள். குலதெய்வக் கோயில் திருவிழா, சுப, அசுப காரியங்களுக்கு ஊருக்கு வந்து செல்வதோடு சரி... இப்போது, கொரோனா, ஊரடங்கு, இ-பாஸ் தடைகளை யெல்லாம் கடந்து தங்கள் உறவுகள் புதையுண்ட இடத்தில் குவிந்திருக் கிறார்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மக்கள்.

“என் ஊரு ஆலங்குளம். என் தங்கச்சிய இங்கிருக்கிற அருணுக்குக் கட்டிக் குடுத்திருந்தேன். என் தங்கச்சி முழுகாம இருந்ததால ஊருக்குக் கூட்டிட்டுப் போயிட்டேன். குழந்தை பிறந்து ஆறு மாசமாகுது. நாலுமாசம் முன்னாடி ஊருக்கு வந்து குழந்தையையும் பொண்டாட்டியையும் பாத்துட்டு, புள்ளைக்கு `வைசாலி’ன்னு பேரு வச்சுட்டு வந்தாப்ல. நிலச்சரிவுன்னு கேள்விப்பட்டு பதறிப்போயி ஓடியாந்தேன். பொணமாத்தான் பாக்கமுடிஞ்சுது. இன்னும் என் தங்கச்சிகிட்ட சொல்லலே... `தேடிக்கிட்டிருக்காங்க’ன்னு சொல்லியிருக்கேன். அவகிட்ட எப்படிச் சொல்லப்போறேனோ...’’ - கலங்குகிற வள்ளிநாயகத்துக்கு ஆறுதல் சொல்ல நம்மிடம் வார்த்தைகள் இல்லை.

கனவுகளுடன் புதைந்த வாழ்க்கை!

கணேசன் மூணாற்றில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். உடல் நடுக்கம் இன்னும் குறையவில்லை. புதைவின் விளிம்பில் இருந்த அப்பாவையும் அம்மாவையும் கடும் போராட்டத்துக்கிடையே மீட்டுள்ளார். நினைவுகளைக் கூட்டிக்கூட்டிப் பேசுகிறார்.

“நான் சமையல் ரூம்லயும் அம்மாவும் அப்பாவும் ஹால்லயும் படுத்திருந்தோம். திடீர்னு பெரிய சத்தம் கேட்டுச்சு. என் நெஞ்சிலவந்து ஏதோ அடிச்சுச்சு. அப்பாவும் அம்மாவும் சத்தம் போட்டாங்க. நான் மெல்ல எழுந்து வந்தேன். வெளியில பாத்தா ஒரு வீடுகூட இல்லை. அப்பா ஓட்டுக்குள்ள மாட்டிக்கிட்டிருந்தார். ஓடுகளை உடைச்சு அவரைத் தூக்கிட்டேன். அம்மாவைத் தூக்கமுடியலே... சகதிக்குள்ள காலு சிக்கியிருந்துச்சு. `நீ மேட்டுக்குப் போயிருடா’ன்னு அம்மா கத்துச்சு... அம்மாவை விட்டுட்டு எப்படி வரமுடியும்... எது நடந்தாலும் சரின்னு சேத்துக்குள்ள இறங்கி அம்மாவையும் தூக்கிக்கிட்டு மேலே வந்துட்டேன்... இப்போ நினைச்சாலும் பயமா இருக்கு...’’ என்கிறார் கணேசன்.

வள்ளிநாயகம்
வள்ளிநாயகம்

மீட்புப்பணி நடக்குமிடத்தில் ஒரு நாய் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கிறது. நிலச்சரிவில் பலியான பவுன்தாய் என்பவர் வளர்த்த நாயாம் அது. எல்லோரின் பார்வையும் அந்த நாய்மீது படிந்திருக்கிறது. பவுன்தாய் புதைந்திருந்த இடத்தை அதுதான் காலால் தோண்டி அடையாளம் காட்டியிருக்கிறது. இதுவரை 49 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் அந்த நாய், என்றோ சோறிட்ட யாரோ ஒருவரின் வாசனையைத் தேக்கிவைத்துக்கொண்டு அந்த இடத்திலேயே சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கிறது!