நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்துவருகிறது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் இடைவிடாத மழை நீடித்து வருகிறது. மழை காரணமாக பல இடங்களில் அந்நிய மரங்கள் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சில இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள எமரால்டு லாரன்ஸ் பகுதியில் நேற்று பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்த தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறி பயிர்கள் 200 மீட்டர் தூரம் வரை அடித்துச் செல்லப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி பெரிய பள்ளம் போல காட்சியளிக்கிறது. இந்த இடத்தில் குடியிருப்புகள் எதுவும் இல்லை என்பதால் பெரிய அளவிலான உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இதேபோல், எடுக்காடு பகுதியில் சாலையில் ஏற்பட்ட மண்சரிவால் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி நகரில் வண்டிச்சோலை, புதுமந்து, மான் பூங்கா சாலை என பல இடங்களில் ராட்சத மரங்கள் சாலைகளின் குறுக்கே விழுந்தன. சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மீட்புக்குழுவினர், போக்குவரத்தைச் சரிசெய்தனர்.
ஊட்டி, குந்தா சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகள் ஏற்கெனவே முழுக் கொள்ளளவை எட்டியிருந்த நிலையில், அணைகளின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனால் பைக்காரா, கிளன்மார்கன், குந்தா ஆகிய அணைகள் திறக்கப்பட்டு உபரிநீரை வெளியேற்றி வருகின்றனர். கரையோரப் பகுதிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் தரப்பில், ``பாதுகாப்பு கருதி அணைகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்பு முகாமகளில் தங்கவைத்து வருகிறோம். ஆற்றங்கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலில் ஈடுபடுத்த வேண்டாம். மேலும், வெள்ளப்பெருக்கை அருகில் நின்று வேடிக்கைப் பார்க்கவேண்டாம். மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.