
லாக் டௌன் சிந்தனைகள்
சியாமளா ரமேஷ்பாபு
இதென்ன நூதனமா இருக்கு? வீட்டு ஆட்களுக்குள்ளேயேவா இப்படி கத்திக் கத்திச் சிரிச்சுப்பாங்க? அப்படி என்னதான் சிரிக்க விஷயமிருக்குமோ அவங்களுக்கு மட்டும்?
சிறு வயதில் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு நேரத்தில் நாங்கள் குடியிருந்த தெருவின் 15 வீடுகளில் 14 வீடுகள் அமைதியாக இருக்க, அந்த ஒரு வீட்டிலிருந்து மட்டும் வெடித்துச் சிதறும் சிரிப்பு சத்தம். அது எங்கள் அத்தனை பேருக்கும் ஆச்சர்யம் ஏற்படுத்தும். அம்மா அப்பா, இரண்டு பிள்ளைகள் (அக்கா தம்பி) உள்ள அந்த வீட்டில் பெற்றோர் இருவரும் வேலைக்குப்போவதால் ஞாயிற்றுக் கிழமை - குறிப்பாக மதிய சாப்பாட்டு நேரம்தான் அவர்களுக்கான நேரம். அக்காவும் தம்பியும் செல்லமாகச் சீண்டிக்கொள்வதும், அம்மாவும் அப்பாவும் அவர்களோடு சேர்ந்து கலகலவென சிரிப்பதும், சாப்பிட்ட தட்டுகளைக் கழுவும்போது பிள்ளைகள் ஒருவர் மேல் ஒருவர் தண்ணீரை வாரி இறைப்பதும் வாடிக்கை.

எங்கள் தெருவுக்கு வரும் காய் வண்டிக்காரர், பேப்பர் போடுபவர், பூக்காரம்மா என எல்லோருக்குமே அந்த `சத்தமா சிரிக்கற வீட்டுக்காரங்க' என்று சொன்னால்தான் தெரியும். அந்த அளவுக்கு அவர்களின் கலகல சிரிப்பு சத்தம் பிரபலம்!
அந்தச் சிரிப்பைத்தான் நம்மில் பலர் பரீட்சைல பசங்க செய்யற மாதிரி, சாய்ஸ்ல விட்டுட்டோம். ஏதாவது அதீதமாக ஆச்சர்யம் நடக்கும்போதும், பிறந்த நாளன்று நம்மை நட்பும் உறவும் கொண்டாடும்போதும், பிடித்த பொருள் நமக்குப் பரிசாகக் கிடைக்கும்போதும், நம்மை யாராவது பாராட்டும்போதும், பதவி உயர்வோ, ஊதிய உயர்வோ கிடைக்கும்போதும், சுற்றுலா செல்லும்போதும், புகைப்படம் எடுத்துக்கொள்ளும்போதும் மட்டுமே செய்ய வேண்டிய சம்பிரதாயமாக ஆகிப்போனது சிரிப்பு. அப்போ இது எதுவுமே நடக்கலேன்னா நாம சிரிக்கவே மாட்டோமோ?
அட... சிரிக்கறதுன்னு ஒரு விஷயம் இருக்கறதையே நாம மறந்து எவ்வளவு நாளாச்சு இல்லே? (இப்படி நம்மில் பலர் இந்நேரம் சொல்லியிருப்போம்) ஒட்டுமொத்த உலகமும் வைரஸ் பிடியில இருக்கு... சிரிப்பையே நெனச்சுக்கூட பார்க்க முடியல... இதுல உலக சிரிப்பு நாள் ஒண்ணுதான் குறைச்சல்... இப்படி கொஞ்சம்பேர் இந்நேரம் பொரிந்திருப்பார்கள்!
யார் இல்லேன்னு சொன்னாங்க? இக்கட்டான சூழல்தான் நம்ம எல்லாருக்கும். அதுக்காக 24 மணி நேரமும் புருவத்த வில்லு மாதிரி வளைச்சு முகத்தை உம்முன்னு வெச்சுக்கிட்டே இருக்க முடியுமா? (அடுத்தவர் சிரிப்பதைப் பார்த்தாலே காரணம் இல்லாமல் கோபப் படுபவர்கள் பலர் உள்ளனர் என்பது வேறு விஷயம்!)

கொதிக்கக் கொதிக்க சாம்பார், ரசம், காரக்குழம்பு, வொயிட் ரைஸ் என வாளிகளைத் தூக்கிக்கொண்டு சிரித்தபடியே கல்யாண வீடுகளில் பரிமாறுபவர்கள், கொட்டும் பனியிலும் கொசுக்கடியிலும் சாலையோரத்தில் சிரித்தபடியே பூ விற்பவர்கள், டோலில் கட்டணம் செலுத்தி மெதுவாக நகரும் வண்டிகளிடம் வெள்ளரிப்பிஞ்சு விற்கும் சிரித்த முகங்கள், ஹைவே ஹோட்டல்களில் வாயிற்கதவுகளை வாய் நிறைய சிரிப்போடு மூடித்திறக்கும் சீருடை அணிந்த பணியாட்கள், `பெட்ரோலா டீசலா சார்... ஸீரோ லெவல் பாத்துக்கோங்க சார்' என வருகிற வாகனம் ஒவ்வொன்றையும் சிரித்த முகத்தோடு அணுகும் பங்க் ஊழியர்கள்...எப்படிப்பட்ட சவாலான சூழ்நிலையிலும் இவர்களால் எப்படி சிரிக்க முடிகிறது? பிரமிக்கவைக்கும் அற்புத மனிதர்கள் இவர்கள்!
சிரிப்பதற்காகக் காரணம் தேடுவதன் அடிப்படை நம் ரசனை ரசம்போன கண்ணாடியாக ஆனதுதான். ரசனை தேய்ந்ததன் காரணம், எதிலும் நிறையை மட்டும் பார்த்து பாராட்டும் பக்குவம் குறைந்து, குறையை மட்டுமே காணும் பண்பு பெருகிப்போனதுதான். அடுத்தவரின் குறையை பூதாகாரமாக்கி கேலி கிண்டல் நையாண்டி செய்து சிரிக்க வைப்பதும் சிரிப்பதும் பெருகிவிட்ட சூழலில்... இந்த மாதிரி நாள்களில்கூட நம்ம வீட்டு வாசலுக்கே பாலும் பேப்பரும் காய்கறியும் வருதே என்று சூழலைப் பாராட்டி, `இந்தக் கஷ்டத்திலும் ராகத்தோடு காய்கறியை எப்படிக் கூவிக் கூவி விக்கறாங்க பாரேன்' என்று ரசிக்க ஆரம்பித்தால் முகத்தில் தானாகவே சிரிப்பு வரும். ஏன்... பழைய புகைப்படங்களை எடுத்து புரட்டிப் பார்த்து அந்த நிகழ்ச்சிகளைக் குடும்பத்தோடு அசைபோடும்போது சிரிப்பு வராதா என்ன?
சவால்களை அடுக்கடுக்காக அள்ளி வீசிக்கொண்டே தான் இருக்கும் வாழ்க்கை. பரிணாம வளர்ச்சி மரத்தின் உச்சியிலேயே மனித இனம் எப்போதும் இருப்பதற்கு அளப்பரிய ஆற்றலும் அசாத்திய கண்டுபிடிப்புகளும் மட்டுமா காரணம்... உதட்டுக்குள் ஒளித்துவைத்திருக்கும் ஒப்பற்ற சிரிப்புமல்லவா காரணம்!
நாளை முதல் வீட்டைச் சுத்தம் செய்யும் போதும் குளிக்கும்போதும் நடைப்பயிற்சி செய்யும்போதும் பிள்ளைகளிடம் பேசும்போதும் சிரித்துக்கொண்டேதான் செய்து பாருங்களேன். அடுத்தவரை எவ்வளவு வேகமாக அது தொற்றிக்கொள்ளும் என்பது அப்போது புரியும். அவ்வளவு ஏன்... பொதுவாகவே நமக்கு யாரைப் பிடிக்கும்? நம்மை மிகவும் கவர்பவர்கள் யார்? நம்மை நாமே கேட்டுப் பார்த்தால், அவர்கள் பெரும்பாலும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களாகவே இருப்பார்கள். இது தானே சிரிப்பின் மகத்துவம்!
#மீண்டும்_சிரிக்கத்_தொடங்குவோம்!
சியாமளா ரமேஷ்பாபு பதிவுகளை அவள் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் படிக்கலாம். facebook.com/avalvikatan