கட்டுரைகள்
Published:Updated:

சட்டக் கல்லூரி மாணவன் லாக்கப் சித்ரவதை... குளறுபடி குற்றப்பத்திரிகை... பிளேட்டை மாற்றிய போலீஸ்!

அப்துல் ரஹீம்
பிரீமியம் ஸ்டோரி
News
அப்துல் ரஹீம்

விசாரணையின் இறுதி அறிக்கை அடிப்படையில்தான் இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து போலீஸார் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்

`மாஸ்க் அணியவில்லை’ என்று விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சட்டக் கல்லூரி மாணவன் அப்துல் ரஹீமை, கொடுங்கையூர் போலீஸார் ‘லாக்கப்’ சித்ரவதை செய்த வீடியோவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அந்தச் சம்பவத்தில் மாணவன் அப்துல் ரஹீம் புத்திசாலித்தனமாக எடுத்த வீடியோவால், போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீமா உட்பட ஒன்பது பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கில் இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சூழலில், “இன்ஸ்பெக்டர் நசீமா உட்பட ஐந்து பேர் வழக்கிலிருந்து நீக்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!” என்கிறார் பாதிக்கப்பட்ட மாணவனின் வழக்கறிஞர் வேல்முருகன்.

சட்டக் கல்லூரி  மாணவன்
லாக்கப் சித்ரவதை... குளறுபடி குற்றப்பத்திரிகை... பிளேட்டை மாற்றிய போலீஸ்!

இது குறித்து வழக்கறிஞர் வேல்முருகனிடம் பேசினோம். ``சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவன் அப்துல் ரஹீம், சட்டப் படிப்பை படித்துக்கொண்டே பகுதி நேரமாக மெடிக்கல் ஷாப் ஒன்றில் வேலை பார்த்துவந்தார். கடந்த 13.1.2022 அன்று இரவு, வேலை முடிந்து அவர் சைக்கிளில் மாஸ்க் அணிந்தபடி வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இரவுப் பணியிலிருந்த போலீஸார், அப்துல் ரஹீமை வழிமறித்து, ‘ஏன் மாஸ்க் அணியவில்லை?’ எனக் கேட்டு 500 ரூபாய் அபராதம் செலுத்தும்படி கூறியிருக்கின்றனர். அதற்கு அப்துல் ரஹீம், ‘நான்தான் மாஸ்க் அணிந்திருக்கிறேனே... பிறகு ஏன் அபராதம் செலுத்த வேண்டும்?’ என்று கேட்க, காவலர் உத்திரகுமார், மாணவனைத் தாக்கியிருக்கிறார். பிறகு காவல் நிலையத்துக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ஹேமநாதன் என்கிற காவலர், ‘உன்மீது பெட்டி கேஸ் போட்டிருக்கிறேன். கைரேகை வை’ என மிரட்டி, கைரேகையைப் பதிவுசெய்திருக்கிறார். அப்போது, அப்துல் ரஹீம், தான் ஓட்டிவந்த சைக்கிளையும் தன்மீது போடப்பட்ட வழக்கு குறித்த விவரங்களையும் கேட்டிருக்கிறார். ஆத்திரமடைந்த காவலர் உத்திரகுமார், அசிங்கமாகப் பேசியதோடு ‘போலீஸ்கிட்டயே திமிரா பேசுறியா?’ என்று அப்துல் ரஹீமைத் தாக்கியிருக்கிறார். அப்போது அருகிலிருந்த இன்ஸ்பெக்டர் நசீமாவும் அப்துல் ரஹீம் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார். இதையடுத்து சத்தியராஜ் என்ற காவலரும் அடித்திருக்கிறார். அப்போது ‘இதுதான் போலீஸ் ட்ரீட்மென்ட்’ என்று கூறியபடி அப்துல் ரஹீமின் முட்டிகளின் மீது ஏறி சத்தியராஜ் நிற்க, காவலர் உத்திரகுமார் ரஹீமின் பாதங்களில் ‘பைப்’பால் குரூரமாகத் தாக்கியிருக்கிறார்.

சட்டக் கல்லூரி  மாணவன்
லாக்கப் சித்ரவதை... குளறுபடி குற்றப்பத்திரிகை... பிளேட்டை மாற்றிய போலீஸ்!

காவல் நிலையத்திலிருந்த சிலரும் ‘ஸ்டார்ட்’ என்று கூறிக்கொண்டே அப்துல் ரஹீமைச் சுற்றிவளைத்து முரட்டுத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். பின்னர் அப்துல் ரஹீம் சாப்பிட இட்லி கொடுக்கப் பட்டிருக்கிறது. அதைச் சாப்பிட்டபோது, பூமிநாதன் என்கிற காவலர், தன்னுடைய பூட்ஸ் காலால் முகத்தில் ஓங்கி உதைத்திருக்கிறார். மதரீதியாகவும் திட்டியிருக்கிறார்கள். பூமிநாதன் என்கிற காவலர், அப்துல் ரஹீமின் சட்டையைக் கழற்றி, அவரைக் கழிவறைக்கு அழைத்துச் சென்று ரத்தத்தைத் துடைக்கச் சொல்லியிருக்கிறார். அதற்கு அப்துல் ரஹீம் மறுத்ததால் பூமிநாதன், தன்னுடைய பேன்ட் ஜிப்பைக் கழற்றி அவர்மீது சிறுநீர் கழிக்க முயன்றிருக்கிறார். பின்பு அருகிலிருந்த கழிவுநீரை எடுத்து மேலே ஊற்றியிருக்கிறார். இதையடுத்து காவலர் அந்தோணி, மச்சம் காட்டச் சொல்லி அப்துல் ரஹீமை நிர்வாணப்படுத்தியிருக்கிறார். இந்தச் சமயத்தில் ராமலிங்கம் என்ற காவலர், அப்துல் ரஹீமின் செல்போனிலிருந்த அவரின் சகோதரிகளின் புகைப்படங்களை ஆபாசமான முறையில் ஜூம் செய்து பார்த்திருக்கிறார். காவல் நிலையத்தில் அப்துல் ரஹீமுக்கு நடந்த கொடுமைகளை போலீஸாருக்குத் தெரியாமல் ரகசியமாக அவர் வீடியோ எடுத்ததுதான் சம்பந்தப்பட்ட காவலர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்படக் காரணமாக இருந்தது.

இந்த வழக்கை கொடுங்கையூர் காவல் நிலையத்திலிருந்து வேறு காவல் பிரிவுக்கு மாற்ற நீதிமன்றத்தில் முறையிட்டோம். நீதிமன்றம், அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது. தற்போது அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை நடந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதில் இன்ஸ்பெக்டர் நசீமா, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி, காவலர் ஹேமநாதன், சந்தான மகாலிங்கம், சத்தியராஜ் ஆகியோரின் பெயர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தபோதிலும் ஏன் இப்படியொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.

சட்டக் கல்லூரி  மாணவன்
லாக்கப் சித்ரவதை... குளறுபடி குற்றப்பத்திரிகை... பிளேட்டை மாற்றிய போலீஸ்!

அதேநேரத்தில் பிளேட்டை அப்படியே அப்துல் ரஹீமுக்கு எதிராகத் திருப்பியிருக்கிறார்கள் போலீஸார். காவலர் உத்திரகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாணவன் அப்துல் ரஹீம் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் அப்துல் ரஹீம் மீது கூடுதலாகச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே குற்றம் சுமத்தப்பட்ட காவலர்கள் தரப்பிலிருந்து சமரசப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தூது விடப்பட்டுவருகிறது. அதனால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறோம்” என்றார்.

இது குறித்து அண்ணாநகர் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``அப்துல் ரஹீம் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர்மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கில் 24 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். விசாரணையின் இறுதி அறிக்கை அடிப்படையில்தான் இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து போலீஸார் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை” என்றனர் சுருக்கமாக.

போலீஸார் மீதான வழக்கை, அதே போலீஸார் விசாரித்தால் எப்படி உண்மை வெளிவரும்?!