
வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
“இந்தியாவில் குழந்தைகளைத் தத்தெடுக்கும் போது, அந்தந்த மதத்தினருக்கு என்று சிறப்புச் சட்டங்கள் வழிநடத்துகின்றன என்பதைக் கடந்த கட்டுரைகளில் விரிவாகப் பார்த்தோம். தத்தெடுப்புக்கான சட்டங்களில், தத்தெடுப்பவர்கள் சந்திக்கும் சிரமங்கள் மற்றும் தத்து நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தொடரப்பட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில், இச்சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன; தத்தெடுப்பு ரெகுலேஷன் பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தத்தெடுப்புக்கான சட்ட நடைமுறைகள் 2017-ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளே இப்போது நடைமுறையில் பின்பற்றப்படுகின்றன” என்று சொல்லும் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி, சாதி மதங்கள் கடந்து அனைவருக்குமான பொதுத் தத்தெடுப்பு முறை குறித்து விளக்குகிறார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தத்து வள ஆதார மையம் - ‘காரா’ (Central Adoption Resource Authority - CARA ). சிறப்புத் தத்தெடுப்பு நிறுவனம், மாநில தத்துவள ஆதார மையம், குழந்தைகள் பாதுகாப்பு யூனிட், வெளிநாட்டு ஏஜென்சிகள் இவை அனைத்தும் மத்திய தத்துவள ஆதார மையத்துடன் இணைந்து செயல்படுகின்றன. இந்த ‘காரா’வின் கீழ் மதங்களைக் கடந்த தத்துக்கொடுத்தல் மற்றும் தத்தெடுத்தல் நடைமுறைகள் விரிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் உறவுகளுக்குள் தத்துக்கொடுப்பதையும் ‘காரா’ மூலம் செய்யலாம். ஆதரவற்ற நிலையில் உள்ள மற்றும் ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகள், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாமல் இருக்கலாம். அத்தகைய குழந்தைகளை ‘காரா’ மூலம் தத்தெடுக்கலாம். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர் அல்லது இந்தியர் அல்லாத வெளிநாட்டவர் தத்தெடுக்க விரும்பினால், இவர்களுக்கும் காரா உதவுகிறது. தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, ‘காரா’வின் சட்ட நடைமுறைகள் கடுமையாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
தத்தெடுப்பு ரெகுலேஷன் 2017-ல் கூறப்பட்டுள்ள தத்து விதிமுறைகள்!
திருமணமானவர், திருமணமாகாதவர், பேச்சிலர், தனித்து வாழும் பெண், என்ஆர்ஐ, வெளிநாட்டவர் இவர்கள் அனைவருமே தத்தெடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
திருமணமானவராக இருந்தால், கணவன் அல்லது மனைவியின் சம்மதம் தேவை.
உடலளவிலும் மனத்தளவிலும், பொருளாதார ரீதியாகவும் தகுதிபெற்றவராக இருக்க வேண்டும்.
திருமணமாகாத அல்லது விவாகரத்து பெற்று தனித்து வாழும் பெண் தத்தெடுக்க விரும்பினால், ஆண் அல்லது பெண் குழந்தைகளைத் தத்தெடுக்க அனுமதிக்கப்படுகிறார்.
தனித்து வாழும் அல்லது திருமணமாகாத ஆணால் பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது. அவர், ஆண் குழந்தையை மட்டுமே தத்தெடுத்துக்கொள்ள முடியும்.
தம்பதி தத்தெடுக்க முன்வந்தால், அவர்களுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்.
நான்கு வயதுக்குட்பட்ட குழந்தையைத் தத்தெடுக்க, தத்தெடுப்பவரின் வயது 45-க்குள் இருக்க வேண்டும். கணவன் மனைவியாகச் சேர்ந்து தத்தெடுத்தால், இருவர் வயதின் கூட்டுத்தொகை 90-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நான்கு வயதிலிருந்து எட்டு வயதுக்குட் பட்ட குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் தனி நபரின் வயது 50 மற்றும் தம்பதி வயதின் கூட்டுத்தொகை 100-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எட்டு வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்ட குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் தனி நபரின் வயது 55 மற்றும் தம்பதி வயதின் கூட்டுத்தொகை 110-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உறவினர்களுக்குள் அல்லது மாற்றாந்தாய், மாற்றாந்தந்தை (step parent) தத்தெடுக்கும் போதோ, இந்த வயது வரை முறைகளைப் பின்பற்றத் தேவையில்லை.
தத்துக் குழந்தைக்கும் தத்தெடுப்பவருக்கும் குறைந்தது 25 வயது இடைவெளி இருக்க வேண்டும்.
இல்லங்களுக்கான விதிமுறைகள்
ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒரு குழந்தை வந்து சேரும்போது, அக்குழந்தையை அந்த இல்லத்தில் அனுமதிப்பதற்கான விதிமுறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி பார்ப்போம்.
குழந்தைகள் காப்பகத்துக்கு, ஆதரவற்ற நிலையிலோ பெற்றோரால் கைவிடப்பட்டோ வந்தடைந்தால், குழந்தை கிடைத்த 24 மணி நேரத்துக்குள் குழந்தைகள் நல வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
கைவிடப்பட்ட குழந்தை வந்துசேர்ந்த மூன்று வேலை நாள்களுக்குள் குழந்தையைப் பற்றிய விவரங்கள் புகைப்படத்துடன், விதிமுறைகளின்படி ‘காரா’ வலைதளத்தில் பதிவேற்றப்படும்.
குழந்தைகள் நல வாரியத்திடம் வந்தடைந்த குழந்தையின் பெற்றோர் குழந்தையைத் தொலைத்திருந்தாலோ யாராவது கடத்திவந்து கைவிட்டிருந்தாலோ, அந்தக் குழந்தையின் பெற்றோர் வந்து கேட்கும்போது அவர்களிடம் குழந்தையை ஒப்படைக்க வேண்டும். அதனால், குழந்தை கிடைத்த மூன்று நாள்களுக்குள் தேசிய நாளிதழ்களில் குழந்தையைப் பற்றிய விவரங்களைப் புகைப்படத்துடன் விளம்பரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு யூனிட்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் நலக் காப்பகங்கள் அல்லது குழந்தைக்கு அடைக்கலம்கொடுத்திருக்கும் குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள், மேற்சொன்ன நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரும், அவர்களிடம் வந்து சேர்ந்த குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டரீதியான பாதுகாவலர்கள் யாரென்பது அறியப்படாமல் இருந்தால், அதற்கான அறிக்கையை குழந்தைகள் நல வாரியத்திடம் 30 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் குழந்தையைப் பற்றி யாராவது விசாரித்து வந்திருந்தால், அந்த விவரத்தையும் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும்.
குழந்தைகள் நலக் காப்பகங்கள்/குழந்தைக்கு அடைக்கலம்கொடுத்திருக்கும் குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள், குழந்தையின் பெற்றோர் கிடைக்கவில்லை என்ற அறிக்கையை, குழந்தைகள் நல வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு சம்பந்தப்பட்ட குழந்தைகள் நலக் காப்பகத்தின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலிருந்து, குழந்தையின் பெற்றோர்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்ற அறிக்கையையும் வாங்க வேண்டும். அதன் பின்னரே, அந்தக் குழந்தை சட்டப்படியான தத்தெடுப்புக்கான குழந்தை எனக் குழந்தைகள் நல வாரியத்தால் அறிவிக்கப்படும். இந்த நடைமுறைகளைச் செய்து முடிப்பதற்கான காலவரையறைகள் இந்தச் சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளன.
சட்டப்படி தத்தெடுப்புக்கான குழந்தை என அறிவிக்கப்பட்ட பிறகு அந்தக் குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, விதிமுறைகளில் கூறியுள்ளதன்படி மருத்துவ அறிக்கையை சிறப்புத் தத்தெடுப்பு ஏஜென்சி (specialised adoption agency) தயாரித்து ‘காரா’வில் சமர்ப்பிக்க வேண்டும்.
இயலாமையின் பிடியில் குழந்தையைத் தத்துக்கொடுக்க முடிவெடுக்கும் பெற்றோர்கள் அல்லது அக்குழந்தையின் பாதுகாவலர்கள் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகளும் என்னென்ன?
அடுத்த இதழில் காண்போம்...