மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பெற்ற குழந்தையைத் தத்துக்கொடுக்க... - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி - 25

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

சட்டம் பெண் கையில்!

சாதி மதங்கள் கடந்து அனைவருக்குமான பொது தத்தெடுப்பு முறை குறித்து சென்ற இதழில் விளக்கிய வழக்கறிஞர் வைதேகி பாலாஜி, இயலாமையின் பிடியில் குழந்தையைத் தத்துக்கொடுக்க முடிவெடுக்கும் பெற்றோர் அல்லது அக்குழந்தையின் பாதுகாவலர் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகளைப் பற்றி இந்த இதழில் விளக்குகிறார்.

குழந்தையை வளர்க்க இயலாத பெற்றோர் அல்லது குழந்தையின் பாதுகாவலர், குழந்தையைத் தத்துக்கொடுக்க சம்மதித்து குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்க விரும்பினால், இளம்சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

திருமணமாகாத பெண், அவரின் குழந்தையைத் தத்துக்கொடுக்க முன்வந்து, குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கும் போது, அந்த அமைப்பைச் சேர்ந்த பெண் நபர் உடனிருக்க வேண்டும்.

திருமணமானவர்கள் குழந்தையை ஒப்படைக்கும்போது, இருவரின் ஒப்புதலும் அவசியம். ஒருவேளை கணவன் மனைவி இருவரில் ஒருவர் காலமாகியிருந்தால் அவரின் இறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

குழந்தையை ‘காரா’ மூலம் தத்தெடுப்பவர்கள் செய்ய வேண்டியவை...

இந்தியாவில் வசிக்கும் இந்தியர், அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர் (NRI), அயல்நாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர் (POI), வெளிநாட்டவர் என யாராக இருப்பினும், இந்தியாவில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க http://cara.nic.in என்ற இணையதளத்தில் லாகின் செய்து தத்தெடுப்பதற்கான பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.

தத்தெடுப்பவர்களின் சுயவிவரம், வருமானம், ஏற்கெனவே சொந்தக் குழந்தை உள்ளதா, இதற்கு முன் தத்தெடுத்திருந்தால் அந்தக் குழந்தை பற்றிய தகவல்கள் உட்பட, அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

தத்தெடுக்க விரும்புவது ஆண் குழந்தையா பெண் குழந்தையா, தத்தெடுப்பதற்கான காரணங்கள், எந்த மாநிலத்துக் குழந்தை வேண்டும் என்பவை உட்பட, அதில் கேட்கப் பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

பெற்ற குழந்தையைத் தத்துக்கொடுக்க... - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி - 25

பிறகு, அரசு சார்ந்த இல்லங்களில் இருந்து விண்ணப்பதாரரைத் தொடர்பு கொள்வார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விண்ணப் பதாரரின் இல்லத்துக்கு வந்து விசாரணை செய்து, அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

விண்ணப்பதாரரிடம் சில குழந்தைகளின் புகைப்படங்கள் காண்பிக்கப்படும். அவற்றி லிருந்து ஒரு குழந்தையை அவர் தேர்வு செய்யலாம். தொடர்ந்து, நீதிமன்றம் சென்று, நீதிமன்றம் வழங்கும் உத்தரவைப் பெற்ற பின்னர்தான் முறைப்படியான தத்து செல்லும். இந்த நடைமுறைகளில் காவல்துறை நடைமுறைகளும் உண்டு.

குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழைப் பெற, தத்தெடுப்பு ரெகுலேஷன் 2017-ன் கீழ் 36-ல் விளக்கப்பட்டுள்ளதைப்போல, பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969-ன்படி அந்தந்தப் பகுதிக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில், தத்தெடுத்த பெற்றோரோ, குழந்தைகள் நல அமைப்பினரோ விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த ஐந்து வேலை நாள்களுக்குள் சார்பதிவாளர் பிறப்புச் சான்றிதழை வழங்குவார். அதில் ‘பெற்றோர்’ என்ற இடத்தில் தத்துப் பெற்றோரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். அதேபோல, நீதிமன்றம் வழங்கிய தத்தெடுப்பு உத்தரவில் பதிவாகி இருக்கும் தேதி, குழந்தையின் பிறந்த தேதியாக எடுத்துக்கொள்ளப்படும்.

‘காரா’ அமைப்பின் சட்ட நடைமுறையின்படி தத்து முழுமையடைய வேண்டும் என்றால், இந்தியரோ, வெளிநாட்டினரோ தத்தெடுக்கும் குழந்தையின் விவரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நீதிமன்ற ஆணையைப் பெற வேண்டும்.

வெளிநாட்டினர் தத்தெடுக்கும்போது...

வெளிநாட்டினர் ஓர் இந்தியக் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும்போது, அவர்களுக்கும் மேற்சொன்ன நடைமுறைகளே பின்பற்றப்படும். தவிர, குழந்தையின் பாஸ்போர்ட், விசா மற்றும் நோடல் ஏஜென்சியிடமிருந்து மறுப்பில்லா சான்றிதழ், நீதிமன்ற உத்தரவு என மேலதிக தத்து நடைமுறைகளும் இவர்களுக்கு இருக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்தியக் குழந்தைகளைத் தத்தெடுக்க முன்வரும்போது, சட்ட நடைமுறைகளை அவர்கள் நேரடியாக நிறைவேற்ற முடியாது என்றால், அவர்கள் சார்பில் செயல்பட பவர் ஏஜென்ட்டை நியமித்துக்கொள்ளலாம். இதுபற்றி தத்தெடுப்பு ரெகுலேஷன் 2017-ல் சட்ட நடைமுறைகள் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. ஃபாரின் இமிகிரேஷன் அத்தாரிட்டியிடம் அது பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

அடாப்ஷன் ஆர்டர் வந்த பின்னர் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தத்தெடுத்த குழந்தையைப் பெற்றுச் செல்ல இந்தியாவுக்கு வர வேண்டும். அடாப்ஷன் ஆர்டரில் குறித்திருக்கும் தேதி குழந்தையின் பிறந்த தேதியாகவும், தத்து எடுத்தவர்கள் வளர்ப்புப் பெற்றோராகவும் குறிப்பிடப்பட்டு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். பாஸ்போர்ட் மற்றும் இதர நடைமுறைகளும் உண்டு.

POI, NRI, வெளிநாட்டினர் என யாராக இருந்தாலும் இந்தியக் குழந்தையைத் தத் தெடுக்கும்போது, இளம்சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் பிரிவு 59(12)-ன்படி தூதரகத்தில் தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு அடாப்ஷன் ஏஜென்சியினர், தத்தெடுக்கப்பட்ட குழந்தை பற்றிய நிலையைத் தத்தெடுத்தவர்களின் இல்லங்களுக்குச் சென்று கவனித்துவிட்டு வந்து, அதற்கான ரிப்போர்ட்டை சமர்ப்பிப்பார்கள்.

‘காரா’ அமைப்பின் சட்ட நடைமுறையின்படி தத்து முழுமையடைய வேண்டும் என்றால், இந்தியரோ, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரோ, வெளிநாட்டினரோ தத்தெடுக்கும் குழந்தையின் விவரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நீதிமன்ற ஆணையைப் பெற வேண்டும். தத்துக் குழந்தையாகச் செல்லும் எல்லாக் குழந்தைகளுக்கும் பிறந்த தேதி தெரிய வாய்ப்பில்லை. அப்படியான சூழலில், நீதிமன்றம் வழங்கிய தத்து உத்தரவில் எழுதப்பட்டிருக்கும் தேதி குழந்தையின் பிறந்த தேதியாக எடுத்துக்கொள்ளப்பட்டு, தத்துப் பிள்ளையாகச் செல்லும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்படும்.

தத்தெடுக்க இத்தனை நடைமுறைகளா என்ற எண்ண வேண்டாம். தத்தெடுக்கப்படும் குழந்தைகள் உடல் உறுப்பு திருட்டுக்கு உள்ளாக்கப்படுவது, வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு அனுப்பிவைக்கப்படுவது போன்ற செய்திகளைக் கேட்டு அதிர்கிறோம். எனவே, இது ஓர் உயிரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்தச் சட்ட நடைமுறைகள் கட்டாயம் என்பதைப் புரிந்துகொண்டு நடைமுறையில் பின்பற்ற வேண்டும்.

மாறாக, ஒரு குழந்தையைத் தத்தெடுக்கக் காத்திருக்கவேண்டிய காலம் மற்றும் அதிலிருக்கும் சட்ட நடைமுறைகளைத் தவிர்க்க வேண்டி, புரோக்கர்கள் மூலம் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு குழந்தையைத் தத்தெடுக்க நினைத்தால், அது தண்டனைக்குரிய குற்றம் என்பதுடன் அந்த தத்தும் செல்லாது. எனவே, தத்தெடுப்பதற்கான சட்டங்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வோம், அதைப் பரவலாக்குவோம்!