மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்! - தத்தெடுப்பதில் தம்பதிகள் சந்திக்கும் சவால்கள், தீர்வுகள் - 26

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

சட்டப்படி தத்தெடுப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து விளக்குகிறார், வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

திருமணமாகிப் பல வருடங்கள் குழந்தைக் காகக் காத்திருந்து, அது ஈடேறாதபட்சத்தில் செயற்கை கருத்தரிப்புக்கு முயன்று, அதுவும் தோல்வியடையும்போதுதான், ஓர் ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கின்றனர்.அதற்கு மனத்தளவில் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, அந்த முடிவைத் தங்கள் சுற்றத்துக்குப் புரியவைத்து, இறுதியாக அந்தத் தம்பதி சட்டப்படி தத்தெடுக்கும் வழிமுறைகளுக்குள் நுழையும்போது, அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் பலரையும் சோர்வடைய வைப்பதாகச் சொல்கின்றனர்.

தத்தெடுக்கும் முடிவோடு தம்பதிகள் செல்லும் குழந்தைகள் இல்லங்களில், ‘தத்தெடுக்கும் முறை இப்போது ஆன்லைனில் நடக்கிறது. ஆன்லைனில் பதிவுசெய்யுங்கள்’ என்று சொல்லப்படும் வார்த்தைகள், அவர்களுக்குக் கசப்பாக இருக்கின்றன. குறிப்பாக, படிப்பறிவு இல்லாதவர்கள் இதைக் குறையாக கூறுகின்றனர். அரசின் திட்டங்கள் `யூஸர் ஃப்ரெண்ட்லி'யாக இருக்க வேண்டியது அவசியம் என்றாலும், தத்தெடுப்பில் முறைகேடுகளோ, குற்றங்களோ நடக்காமல் கண்காணிக்கும் வெளிப்படைத்தன்மைக்காக, இந்த ஆன்லைன் பதிவு அவசியமாகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வளர்ப்புப் பராமரிப்பு பெற்றோர்கள் மட்டுமல்லாது தங்களுடைய சொந்தக் குழந்தையைப் பராமரிக்க இயலாத சூழ்நிலையில் வறுமையில் உள்ளோருக்கும் மாதந்தோறும் பராமரிப்புத் தொகை, குழந்தைகள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

தத்தெடுப்பவர்கள் தங்கள் மதத்துக்கான தத்தெடுப்பு சட்ட விதிமுறைகளைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டியதன் அவசியம், ஆன்லைன் விண்ணப்பத்தைப் பிழையின்றி பூர்த்திசெய்வது போன்றவை, எளிய மக்களுக்கு சிரமமாகத் தெரிவதால், படித்த மற்றும் பணவசதி படைத்தவர்களே சட்டப்படி குழந்தையைத் தத்தெடுக்க முடியும் என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால், இது உண்மையல்ல. இதில் வழிகாட்ட, சம்பந்தப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களை நாடலாம்.

வளர்ப்புப் பராமரிப்புப் பெற்றோர்

குழந்தையைத் தத்தெடுக்க விருப்பம் இருந்தும், தத்துக்குழந்தை கிடைக்காத சூழ்நிலையில், ஒரு குழந்தையை வளர்த்த நிறைவாவது கிடைக்கட்டும் என்று நினைப் பவர்கள், இளம்சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 பிரிவு 41-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட சிறுவர் இல்லங்களில் வளரும் குழந்தைகளை சட்டப்படி பெற்றுச் செல்லலாம். பெற்றோரால் வளர்க்க இயலாத குழந்தைகள், தொலைக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், தத்து செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டு தத்து நடைமுறைகள் முடிவடைந்து சட்டபூர்வமாகத் தத்து செல்ல அனுமதி கிடைக்கும் வரையில் இல்லங்களில் வளரும் குழந்தைகளை, குழந்தை வளர்க்க ஆசைப்படும் வளர்ப்புப் பராமரிப்புப் பெற்றோரிடம் மேற்சொன்ன திட்டத்தின் கீழ் ஒப்படைக்கலாம். இதற்கு குழந்தைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்கான வழிகாட்டுதல் சட்டம் 2015-ம் உள்ளது. இந்த முறை தத்தெடுப்பு இல்லை. தத்தெடுப்புக்கும் வளர்ப்புப் பராமரிப்புப் பெற்றோருக்கும் விதிமுறைகள் வேறுபடுகின்றன. மேற்சொன்ன அரசால் அங்கீகரிக்கப்பட்ட இல்லங்களில் இருந்து வளர்ப்பதற்காகக் குழந்தையை எடுத்துச்சென்ற பிறகு, அந்தக் குழந்தைக்கு 18 வயதாகும்போது தன்னிச்சையாக முடிவெடுத்து தன்னை வளர்த்தவர்களை விட்டுச்செல்லும் சுதந்திரமும் தனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வளர்ப்புப் பராமரிப்புப் பெற்றோர் ஆகும் வாய்ப்பைப் பெற, அவரவர் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள மாவட்டக் குழந்தைகள் நலக்குழு பாதுகாப்பு அலகு அமைப்பை அணுகி, விண்ணப்பித்து, விருப்பப்படும் குழந்தையைத் தேர்ந்தெடுத்து வளர்க்கலாம். அந்தக் குழந்தையின் பராமரிப்புக்கென மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும். தங்களுக்கு சொந்தக் குழந்தைகள் இருக்கும்போதும் இன்னொரு குழந்தையை வளர்க்க ஆசைப்படும் யாரும் இந்தத் திட்டத்தின் கீழ் குழந்தையை வளர்க்கப் பெற்றுச் செல்லலாம். அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

குழந்தைகள் நிதி ஆதரவு திட்டம்

இளம்சிறார் நீதி (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015-ம் பிரிவு 106-ன் வழிகாட்டுதலின்படி, மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கங்கள் அமைக்கப்பட்டிருக் கின்றன. இதன் கீழ் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு என்ற பிரிவு செயல்படு கிறது. இங்குள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களும் அவரின் கீழ் பணிபுரிபவர்களும் சட்ட விதிமுறைகளின்படி செயல்பட்டு, அரசு கொண்டுவரும் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவர்.

சட்டம் பெண் கையில்! - தத்தெடுப்பதில் தம்பதிகள் சந்திக்கும் சவால்கள், தீர்வுகள் - 26

வளர்ப்புப் பராமரிப்பு பெற்றோர்கள் மட்டுமல்லாது தங்களுடைய சொந்தக் குழந்தையைப் பராமரிக்க இயலாத சூழ்நிலையில் வறுமையில் உள்ளோருக்கும் மாதந்தோறும் பராமரிப்புத் தொகை, குழந்தைகள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும். கிராமப்புறங்களில் வாழும் பெற்றோரது ஆண்டு வருமானம் 24,000 ரூபாயாகவும், நகர்ப்புறங்களில் வசிக்கும் பெற்றோரது வருமானம் 30,000 ரூபாயாகவும், பெருநகரங்களில் வசிக்கும் பெற்றோரது ஆண்டு வருமானம் 36,000 ரூபாயாகவும் இருந்தால், அவர்கள் அந்தக் குழந்தையின் பராமரிப்புச் செலவுக்காக மாதம்தோறும் 2,000 ரூபாயைப் பெறலாம். மேலும் விரிவான விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு அமைப்பைத் தொடர்புகொண்டு இத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான அனைத்து விதிமுறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு குழந்தையின் பெற்றோர் அல்லது வளர்ப்புப் பெற்றோரின் அடையாள அட்டை, வருமானச் சான்றிதழ், குழந்தையின் வங்கிக் கணக்கு புத்தக நகல், பெற்றோர் அல்லது பாதுகாவலர் இறந்திருந்தால், அவரின் இறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும். யாருக்கெல்லாம் நிதி உதவி கிடைக்கும், இந்தத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பதும், விதிவிலக்கு பற்றியும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவகத்தைத் தொடர்புகொண்டு விவரங் களைத் தெரிந்துகொண்டு பயன்பெறலாம்.

கரினா ஜேன் க்ரீடு வழக்கு

த்துச் சட்டத்துக்கு முன் அன்பு, கருணையைவிட சட்ட நடைமுறைகள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதால். அதில் எந்த அளவுக்குக் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்திய, 2019 ஜூனில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றிப் பார்க்கலாம்.

கரினா, ஆஸ்திரேலியாவில் வசிப்பவர். இந்தியாவில் இரண்டு குழந்தைகளைத் தத்தெடுக்க முடிவு செய்து, ‘காரா’ (CARA - Central Adoption Resource Authority) மூலம் ஆன்லைனில் கடந்த 2016-ல் விண்ணப்பித்தார். அதிலிருந்து இப்போதுவரை சுமார் நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் வசித்துவருகிறார். ‘காரா’வில் விண்ணப்பித்த பிறகு, தான் தத்தெடுக்கத் தேர்ந்தெடுத்த ஐந்து மற்றும் ஆறு வயதுடைய இரண்டு குழந்தைகளைத் தன் குழந்தைகளாகப் பாவித்து, சீரான இடைவேளையில் அவர்களைச் சந்தித்துவந்தார். படிப்புக்காக ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பிள்ளைகளைப் பார்க்கச் செல்லும் அம்மாபோல, கரினாவுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் நெருக்கமான உறவு உண்டானது.

இன்டர் கன்ட்ரி தத்தெடுப்பில், நாம் ஏற்கெனவே பார்த்த சட்ட நடைமுறைகளுடன், இந்தியக் குழந்தைகளைத் தத்தெடுக்க விருப்பம் தெரிவிக்கும் நபர், தான் வசிக்கும் நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஃபாரின் அடாப்ஷன் ஏஜென்சி அல்லது தூதரகம் மூலம் மறுப்பில்லா சான்றிதழ் (No objection certificate) பெற்று வர வேண்டியதும் அவசியம். அப்போதுதான் அவருக்கு தத்தெடுக்க அனுமதி அளிக்கப்படும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மறுப்பில்லா சான்றிதழை கரினா வாங்கவில்லை. எனவே, ‘காரா’ அவர் தத்தெடுக்க அனுமதி அளிக்க மறுத்தது. இது தொடர்பாக கரினா தொடுத்த வழக்கில், கரினாவின் தத்துக் கோரிக்கையை நிராகரித்துத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘கரினா அன்பும் அக்கறையுமாக அந்த இரண்டு குழந்தைகளை வளர்த்திருப்பார். அந்தக் குழந்தைகளும் இவரைப் போன்றவர் தத்துத் தாயாகக் கிடைக்க அதிர்ஷ்டம் செய்தவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால், சட்டத்தின் அடிப்படையை எங்களால் மாற்ற இயலாது என்ற எங்களின் இயலாமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றது. தத்தெடுப்பதில் உள்ள சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த தீர்ப்பு இது.