மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்!: வாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா?

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில்

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

ஒரு பெண், தனது கருவறையை வாடகைக்குக் கொடுக்க முன்வருவது, ஓர் உணர்வுபூர்வமான செயல். அந்த வாடகைத்தாய் மற்றும் அவரை வாடகைக்கு எடுக்கும் தரப்பு என இவர்களில் பாதிக்கப்படுவது எந்தத் தரப்பாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யவும், வாடகைத்தாய் முறையில் நடக்க வாய்ப்புள்ள குற்றங்களைத் தடுக்கவும் வாடகைத் தாய் சட்டம் உருவாக்கப்பட்டு, அதன் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் குறித்து விரிவாக விளக்குகிறார், வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

மாறிவரும் வாழ்க்கைச்சூழல் காரணமாக, இன்று குழந்தையின்மை பிரச்னை பல குடும்பங்களிலும் அதிகரித்துவருகிறது. அதற்கான சிகிச்சைகளும் தோல்வியில் முடியும் நிலையில், சில தம்பதிகள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முன்வருகின்றனர். இன்னொருபக்கம், குடும்பத்தின் வறுமை, கணவனால் கைவிடப்பட்டு குழந்தைகளைப் பராமரிக்க வழியின்மை என இப்படி தங்களைத் துரத்தும் வறுமை காரணத்தால், சில பெண்கள் வாடகைத்தாயாக இருந்து, தேவையிருக்கும் தம்பதிகளுக்குக் குழந்தை பெற்றுக்கொடுக்க முன்வருகின்றனர்.

உலக அளவில், வாடகைத்தாய் முறை அதிகம் நடைபெறும் நாடு இந்தியா என்று சொல்லப்படுகிறது. இதன் விளைவு... வாடகைத்தாய் முறை அனுமதிக்கப்படாத வெளிநாட்டவர்கள், குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத தன்பாலின வெளிநாட்டுத் தம்பதிகள் ஆகியோர், இந்தியாவில் வறுமையின் பிடியில் இருக்கும் பெண்களைச் சொற்ப பணம் கொடுத்து வாடகைத் தாய்களாக அமர்த்தி, குழந்தைப் பேற்றுக்குப் பயன்படுத்திக்கொள்வது அதிகரித்துவருகிறது.

இது ஒருபுறம் இருக்க, வாடகைத்தாய்க்கு பேசப்பட்ட தொகையில், இடைத்தரகர்களால் சுரண்டப்பட்டு, குறைவான தொகையே வாடகைத்தாய்க்குக் கிடைக்கிறது. வாடகைத் தாய்மார்கள் அவ்வாறு ஏமாற்றப்படுவதைத் தடுக்க அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அமைப்போ, இதில் உண்டாகும் குற்றங்களைக் குறைப்பதற்கான கட்டுப்பாடுகளோ இல்லை. இவற்றையெல்லாம் நெறிப்படுத்த சட்ட வரைவுகள் எழுதப்பட்டாலும், பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் வலுத்த நிலையில், அவை அமலுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டிருந்தன.

சமீபத்தில் இந்தச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, வாடகைத்தாய் சட்ட (ஒழுங்குமுறை) மசோதா 2019, ஜூலை மாதம் மக்களவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. வணிகரீதியாக மாற்றப்பட்டுவிட்ட வாடகைத்தாய் முறையில் ஏற்படும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்த இந்தச் சட்டம் அவசியம் என்று பலர் இதை வரவேற்றுள்ளனர்.

சட்டம் பெண் கையில்!: வாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா?

இந்தச் சட்டத்துக்கான எதிர்ப்புகள், இன்னொரு பக்கம் கிளம்பியுள்ளன. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், வறுமையில் உள்ள பெண்கள் வாடகைத்தாயாகி சம்பாதித்து, தங்கள் குடும்ப வறுமையைக் குறைத்துக்கொள்ளும் வாய்ப்பு அடைபடும். இந்தச் சட்டத்தில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதும் குறையும். மொத்தத்தில், குழந்தையில்லாத தம்பதி வாடகைத்தாய், மருத்துவ உலகம் என இதில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைவரும் குற்றம் சாட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இந்தச் சட்டத்தில் என்ன வரையறைகள்தாம் உள்ளன?

வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்ட மசோதா 2019

  • வாடகைத்தாயை அமர்த்தி குழந்தை பெற்றுத்தரும் சிறப்பு மருத்துவமனைகள் நடத்துபவர்களுக்கு, பின் வரும் சட்ட வரையறைகளால் இந்த மசோதா பெரும் சவாலாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

  • வாடகைத்தாய் கருத்தரித்தல் முறையைச் செயல்படுத்தும் மருத்துவமனை (Surrogacy Clinic) நடத்துபவர்கள், இந்தச் சட்டத்தின்படி பதிவு பெற்ற பின்னரே அதை நடத்த முடியும்.

  • சரகசி க்ளினிக்கில் மகப்பேறு மருத்துவர், எம்ப்ரியாலஜிஸ்ட் ஆகியோர், வாடகைத்தாய் நடைமுறைக்காக வியாபார ரீதியாகச் செயல்படக் கூடாது. இது தொடர்பாக விளம்பரம், பிரசாரம், ஊக்கமளிப்பது - இப்படி எந்த வகையிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது.

  • வாடகைத்தாய் ஏற்பாடு செய்யும் நோக்கம் பொதுநல அக்கறையோடு இருக்க வேண்டும்.

  • வாடகைத்தாயை நியமிக்க முடிவெடுக்கும் தம்பதியில் இருவரில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை உறுதிப்படுத்தும் எழுத்துபூர்வமான சான்றை, மாவட்ட மருத்துவக் குழுமத்திலிருந்து பெற வேண்டும் (மருத்துவக் குழுமம் இந்தச் சட்டத்தின்படி உருவாக்கப்படவிருக்கிறது).

  • இந்த மருத்துவக் குழுமத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.

  • வாடகைத்தாயாக வருபவருக்குக் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர், பின்னர் என 16 மாத கால இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.

  • வாடகைத்தாயாக நியமனமாகும் பெண்ணின் வயது 25 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

  • சம்பந்தப்பட்ட தம்பதி, அவர்களின் நெருங்கிய உறவுகளை மட்டுமே வாடகைத் தாயாக அமர்த்திக்கொள்ள வேண்டும்.

  • சில சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட மனைவிக்கு கருமுட்டை வளர்ச்சி இல்லாதபோது, வாடகைத்தாயாக வருபவர், தன் கருமுட்டையையும் தானமாகக் கொடுப்பார். புதிய சட்ட மசோதாவின்படி, அந்தப் பெண் தனது கருமுட்டையைத் தானமாக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை. சம்பந்தப்பட்ட தம்பதியின் கருமுட்டை, விந்தணு இணைந்த கருவை தனது கருப்பையில் வைத்து வளர்த்துக்கொடுத்தாலே போதும்.

  • ஒரு பெண், தன் வாழ்நாளில் ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும்.

  • குழந்தை வேண்டுபவர்களுக்கும் வாடகைத் தாய்க்கும் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். அத்தகைய சான்றிதழை, மேலே குறிப்பிட்டபடி தகுதி வாய்ந்த அதிகாரிகள் வழங்குவார்கள்.

வாடகைத்தாயை நியமிக்கும் தம்பதிகளுக்கான விதிமுறைகள்

  • வாடகைத்தாயை ஏற்பாடுசெய்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி அல்லது இருவரில் ஒருவர் குழந்தைப்பேற்றுக்குத் தகுதியான உடல்நிலை இல்லாதவராக இருக்க வேண்டும்.

  • தம்பதியில், மனைவியின் வயது 23 வயதிலிருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும், கணவனின் வயது 26 வயதிலிருந்து 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • தம்பதி இந்தியராகவும் திருமணமாகி ஐந்து வருடங்கள் முடிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

  • தம்பதிக்கு ஏற்கெனவே குழந்தை இருக்கக் கூடாது. தத்துக் குழந்தையோ, வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்ட வேறு குழந்தையோ இருக்கக் கூடாது.

  • தம்பதிக்கு இயற்கையான முறையில் பிறந்த குழந்தை இருந்து, அந்தக் குழந்தை குணப்படுத்த முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ மனநலம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றில் குறைபாடு இருந்தாலோ, மாவட்ட மருத்துவக் குழுமத்திடம் அதற்கான சான்றிதழ் பெற்றுச் சமர்ப்பித்தால், அவர்களுக்கு சொந்தக் குழந்தை இருந்தாலும் வாடகைத் தாயை நியமித்துக்கொள்ள முடியும்.

  • வாடகைத்தாயாக வருபவருக்குப் பணம் கொடுக்கக் கூடாது.

  • இந்தியர் மட்டுமே வாடகைத்தாயை நியமித்துக்கொள்ள முடியும்.

  • தம்பதிக்கு மட்டுமே இந்த உரிமை உண்டு. திருமணமாகாத அல்லது தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அனுமதியில்லை.

வாடகைத்தாய்க்கான சட்ட உரிமைகள்... வாடகைத்தாய் முறையை நிர்வகிக்க இருப்பவர்கள்... வாடகைத்தாயை கமர்ஷியலாகப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கான தண்டனைகள் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.