மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்... ஆன்லைன் ஷாப்பிங் செய்பவருக்கும் நுகர்வோர் சட்டம் உதவுமா? - 39

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

வணிகம் உலகை இணைக்கும் ஒற்றை நூலாகச் செயல்படுகிறது. தேவைகளை உருவாக்கிப் பொருள்களை விற்பதற்கான சந்தைகளாக வளரும் நாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. வாங்கும் சக்தியும் அதிக அளவு மக்கள்தொகையும் கொண்ட இந்தியா அப்படியான ஒரு சந்தையாகவே பார்க்கப்படுகிறது.

சட்டம் பெண் கையில்... ஆன்லைன் ஷாப்பிங் செய்பவருக்கும் நுகர்வோர் சட்டம் உதவுமா? - 39

பெரும்பாலான இந்தியர்களின் மாநிறம் பலவிதமான அழகுசாதனப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான காரணமானது. இந்த வகையில் ஓர் அழகு க்ரீம் விளம்பரத்தில் நான்கே வாரங்களில் சிகப்பழகு என்று விளம்பரம் செய்யப்பட்டது. குறிப்பிட்ட க்ரீமைப் பயன்படுத்தி சிவப்பழகு கிடைக்காவிட்டால்... காசு கொடுத்து வாங்கிய நுகர்வோர் ஏமாற்றப்பட்டால் என்ன செய்வது? இப்படிப் பல கேள்விகளுக்கான விடையைத்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம். நுகர்வோரின் உரிமையைப் பாதுகாப்பதற்கு உள்ள சட்டங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

பொருள்களை வாங்கி அதனுடைய சேவையால் பாதிப்படைந்த நுகர்வோரைப் பாதுகாக்கவே `நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986' அண்மைக்காலம் வரையிலும் நடைமுறையில் இருந்து வந்தது. இப்போது நுகர்வோரின் தேவை களுக்கேற்ப புதிய சட்டம் வடிவமைக்கப்பட்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 நீக்கப் பட்டுள்ளது.

நுகர்வோர் சட்டம் 2019 என்ன சொல்கிறது?

பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் மக்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து ஆடைகள் வாங்கினர். இப்போது மொபைலிலேயே பிடித்த உடையைத் தேர்ந்தெடுத்து ஷாப்பிங் டென்ஷனை மிச்சப்படுத்துகின்றனர். ஆன்லைனில் பலவிதமான பிராண்டுகளின் விலையை ஒப்பிட்டு அதிகபட்ச தள்ளுபடியில் உடைகள் வாங்க முடியும். கேஷ் ஆன் டெலிவரி, பொருள் தரமாக இல்லாவிட்டால் ரிட்டன் அனுப்பலாம் என ஆன்லைன் ஷாப்பிங் மக்களுக்கு வெகு இலகுவாக மாறியுள்ளது. அது மட்டுமல்ல... கிரெடிட் / டெபிட் கார்டைப் பயன்படுத்திக் கூடுதல் சலுகை பெறலாம் என நுகர்வோருக்குப் பலவிதமான ஈர்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

ஆன்லைன் ஷாப்பிங்
ஆன்லைன் ஷாப்பிங்

உலகளவில் வர்த்தகம் அதிகரிக்க ஆன்லைன் ஷாப்பிங் உதவியாக உள்ளது. இந்தச் சூழலில் வணிகத்துக்கு ஆதாரமாக உள்ள நுகர்வோரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஷாப்பிங் சவால்கள், பிரச்னைகளிலிருந்து பாதுகாக்க புதிய சட்டங்கள் உதவியாக இருக்கும்.வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூடியூப் சேனல் ஆகியவையும் விளம்பர மையங்களாக மாறி என்ன வாங்கலாம், எப்படி வாங்கலாம் என்பதைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சமையல் குறிப்புகளைத் தேடினால்கூட, நம் தேடுதல் அடிப்படையில் தொடர்புடைய தகவல்கள் நம் ஸ்மார்ட் திரையில் கேட்காமலேயே கொட்டப்படுகின்றன.

டைம் பாஸுக்கான ஸ்மார்ட் திரையில் உலவுகின்றவர்கள் நுகர்வோராக மாற்றப்படு கின்றனர். இதனால் நுகர்வோர் எண்ணிக்கையும் அவர்களது தேவைகளும் பெருகி வருகின்றன.

நுகர்வோரைப் பாதுகாப்பதும் அவர்களது குறைகளைக் கேட்டு தீர்வு அளிப்பதும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். இதன் தொடர்ச்சியாக `நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019' இயற்றப்பட்டு, 2019 ஆகஸ்ட் மாதம் மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் முன்வைக்கும் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்தால் நுகர்வோருக்குப் பெரிய அளவிலான மகிழ்ச்சி காத்திருக்கிறது.

நுகர்வோர் என்பவர்...

நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான தனிச்சட்டமும் அந்த வழக்குகளை விசாரிப்ப தற்கான நீதிமன்றங்களும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 அமலுக்கு வருவதற்கு முன்பிருந்தே நடைமுறையில் உள்ளன.

ஒரு பொருள் அல்லது சேவையை பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் அத்தனை பேரும் நுகர்வோர்தாம். பொருளுக்கு உரிய தொகையை முழுமையாகவோ, பகுதியாகவோ செலுத்திவிட்டு அல்லது பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு பொருள்களை வாங்கிச் செல்வோரும் நுகர்வோரே. வாங்கிய பொருள்களை மீண்டும் விற்பனை செய்யும் (வியாபாரம்) நபர்கள் நுகர்வோர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. இன்றைய சூழலுக்கு ஏற்ப ஆன்லைன், ஆஃப்லைன், டெலி ஷாப்பிங் செய்பவர்களும் நுகர்வோரே. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ல் இவர்களுக்கான விதிகள் வகுக்கப்படவில்லை.

நாம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கி வருகிறோம். வாங்கியபோதே அது பழுதோடு காணப்பட்டால்தான் புதிய தொலைக்காட்சிப் பெட்டியை விற்பனையாளரிடமிருந்து மாற்றாகப் பெற முடியும் என நாம் நினைப்போம். ஆனால், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இதையும் தாண்டி நுகர்வோருக்குப் பல வகைகளிலும் பாதுகாப்பு அம்சங்களை அளிக்கிறது.

மார்க்கெட்டிங் செய்ததற்கு (விளம்பரத்தில் சொல்லப்படும் வாக்குறுதிகளுக்கு எதிராக இருத்தல்) எதிர்மாறாகப் பொருளோ, சேவையோ இருந்தாலோ... அது உயிருக்கு அல்லது சொத்துக்கு அபாயம் ஏற்படுத்தும் நிலையில் இருந்தாலோ... நுகர்வோர் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். பொருள்களின் விவரம், தெரிவிக்கப்பட்ட அளவு, தரம், சுத்தம், விலை போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டாலும் நுகர்வோர் புகார் அளிக்கலாம்.

குறிப்பிட்ட பொருள்களைப் போலவே வேறெங்கு கிடைத்தாலும் அதைப்பற்றி விசாரிக்கவும் அல்லது சேவையை உபயோகிக்கவும் நுகர்வோருக்கு உரிமை உண்டு. நுகர்வோருக்கு எதிரான விஷயங்களுக்குப் புகார் அளிக்கும் உரிமையும், நுகர்வோர் விழிப்புணர்வைப் பெறும் உரிமையும் மக்களுக்கு உண்டு.

புதிய சட்டத்தின்படி கூட்ஸ் (GOODS) என்பது எடுத்துச் செல்லக்கூடிய அனைத்துவிதமான பொருள்களையும் குறிக்கும்... உணவுப்பண்டங்கள் உட்பட. நுகர்வோர் உரிமையானது வாங்கி வரும் பொருள்களுக்கு ஏற்படும் பாதிப்பை மட்டும் குறிப்பதில்லை. பொருள்களை உபயோகித்ததால் ஏற்படும் உடல்நல பாதிப்பு, காயம், மரணம் போன்ற அபாயகரமான விளைவுகள் மற்றும் அதனால் உண்டாகும் மன அழுத்தம், எமோஷனல் ஸ்ட்ரெஸ் ஆகியவற்றுக்கும் புகார் அளிக்க அனுமதி அளிக்கிறது.

யாரிடம் புகார் அளிக்கலாம்?

இந்தச் சட்டத்தின் மூலம் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. பொருள்களைத் தயாரிப்பவர்கள், சந்தைப் படுத்துபவர்கள் ஆகியோரை இந்த ஆணையம் கட்டுப் படுத்தும்.

மாவட்ட, மாநில, தேசிய என மூன்று நிலைகளில் நுகர்வோர் பாதுகாப்பு குறைதீர் மன்றங்கள் அமைக்கப்படும். பொருள்களைப் பணம் செலுத்தி வாங்கி அதன்  சேவையைப் பெற்றிருக்கும் நுகர்வோர் பாதிக்கப்பட்டால் அவர்கள் அருகில் உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் அளிக்கலாம்.

புகார் அளிக்கும் விதிமுறைகள்

பொருள்களை விற்பனை செய்தவர்கள் அல்லது தயாரித்த நிறுவனத்தின் அலுவலகம் அமைந்திருக்கும் எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில்தான் புகார் அளிக்க முடியும் என்கிற குறைபாடு இந்தச் சட்டத்தில் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு மையங்களில் புகார் அளிக்கலாம். `விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமே... நேரம் விரயமாகுமே' என்ற கவலையும் இனி இல்லை. ஆன்லைன் புகார் பதிவு மற்றும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணை வசதி போன்றவை இந்தப் புதிய சட்டத்தின் மூலம் நுகர்வோருக்கு அளிக்கப்படுகிறது.

பொருள்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் வரை இருந்தால் மாவட்ட மன்றத்திலும், ஒரு கோடியில் இருந்து பத்து கோடி ரூபாய் வரை மாநில மன்றத்திலும், பத்து கோடி ரூபாய்க்கும் மேலானவை எனில் தேசிய மன்றத்திலும் புகார் அளிக்கலாம்.

விற்பனையாளர் / தயாரிப்பாளர் தரப்பும் புகார்தாரரும் சமாதானமாகச் செல்ல விரும்பினால், மத்தியஸ்தம் செய்துகொள்ளவும் இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.

விளம்பரங்களில் பிரச்னையா?

போலியான விளம்பரங்கள் வாயிலாகப் பொருள்களின் சேவையை அங்கீகரித்து ஆதரிக்கும் விளம்பரங்களில் நடிப்பவர்களில் தொடங்கி போலியான விளம்பரங்களை வெளியிட்டவர்கள் வரை தண்டனைக்கு உட்படுத்தப்படு வார்கள். ரூபாய் பத்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படு வதுடன் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும் அளிக்கப்படும்.

நிவாரணம்

முதன்முறை தண்டனைக்குப் பிறகும் தொடர்ந்து அதே செயலில் ஈடுபடுவது நிரூபணமானால் ஐம்பது லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

பழுதடைந்த பொருள் காரணமாக நுகர்வோர் காயம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தால், அதற்கான இழப்பீட்டுத் தொகையையும் நீதிமன்றம் பெற்றுத்தரும்.

தள்ளுபடியில் பொருள் வாங்கியவர்கள் செலுத்திய தொகையைத்தான் நிவாரணமாகக் கோர முடியும்.

தகவல் முக்கியம்

இ-காமர்ஸ் நிறுவனங்கள் பிற நிறுவனங்களின் தயாரிப்புப் பொருள்களை தங்கள் கம்பெனியின் தளத்தில் வெளியிட்டு விற்பனை செய்யும். உதாரணமாக அமேசான் போன்ற நிறுவனங்கள்... இனி தாங்கள் விற்பனை செய்யும் பொருளுக்குரியவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண் போன்ற அடிப்படை விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படட்டும்... சட்டம் துணை நிற்கும்!

போலியான விளம்பரத்துக்கு அபராதம்!

`ஓர் அழகுசாதன க்ரீம் விளம்பரத்தில் நான்கு வாரங்களுக்குள் சிவப்பழகு கிடைப்பதாகச் சொல்லப் படுகிறது. அந்த க்ரீமை வாங்கி உபயோகித்து நான்கு வாரங்களுக்குப் பிறகும் சிவப்பழகு கிடைக்கவில்லை' என்று டெல்லியைச் சேர்ந்த நிகில் ஜெயின் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மன உளைச்சல் உண்டானதால் தனக்கு நஷ்டஈட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக இருந்தது.

நிகில் ஜெயினுக்கு ரூபாய் 10,000 வழக்கு செலவுக்காக அளிக்க வேண்டும் என்பதோடு, தவறான தகவல்கொண்ட விளம்பரத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூபாய் 15 லட்சம் அபராதமும் விதித்தது நீதிமன்றம். அபராதத் தொகையானது டெல்லி நுகர்வோர் மாவட்ட அமைப்பின் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. அதோடு, அந்த விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது.