மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்! - வாடகைத்தாய்க்கான சட்ட உரிமைகள் - 29

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

ஒரு பெண், தனது கருவறையை வாடகைக்குக் கொடுக்க முன்வருவது, ஓர் உணர்வுபூர்வமான செயல். அந்த வாடகைத்தாய் அல்லது அவரை வாடகைத்தாயாக நியமிக்கும் தரப்பு என இவர்களில் பாதிக்கப்படுவது எந்தத் தரப்பாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யவும், வாடகைத்தாய் முறையில் நடக்க வாய்ப்புள்ள குற்றங்களைத் தடுக்கவும் வாடகைத்தாய் சட்டம் உருவாக்கப்பட்டு, அதன் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம்குறித்து சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில் வாடகைத்தாய்க்கான சட்ட உரிமைகள் மற்றும் வாடகைத்தாய் முறையை நிர்வகிக்க இருப்பவர்கள், வாடகைத்தாயை கமர்ஷிய லாகப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கான தண்டனைகள் பற்றி விளக்குகிறார், வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

  • வாடகைத்தாயின் கணவரோ உறவினர்களோ, அவரை நாடும் தம்பதியோ, யாரும் அவரை வற்புத்தி வாடகைத் தாய் முறைக்கு சம்மதிக்கவைக்கக் கூடாது. அதோடு, அவருக்கு வாடகைத்தாயின் செயல்முறைகளை விளக்கி, அவர் புரிந்துகொள்ளும் மொழியில் எழுத்துபூர்வமாக அவர் சம்மதத்தை வாங்க வேண்டும்.

  • வாடகைத்தாயாக ஒப்புக்கொண்டவருக்குத் திருமணமாகி குழந்தை பிறந்திருக்க வேண்டும். அவரின் வயது 25 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • மருத்துவமனையில் வளர்ந்த கருவை வாடகைத்தாயின் கருப்பைக்குள் செலுத்துவதற்கு முன்னர், திடீரென இதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று தோன்றினால்கூட, அவர் அதை நிராகரிக்கும் உரிமை உண்டு.

  • வாடகைத்தாய்க்கு மரபணுக் குறைபாடு, பிறப்பிலேயே குறைபாடுள்ள குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையை சம்பந்தப்பட்ட தம்பதி நிராகரிக்க முடியாது.

  • இயற்கையாகப் பிறந்த குழந்தைக்கு இருக்கும் எல்லா விதமான உரிமையும், வாடகைத்தாய் மூலம் பெற்ற குழந்தைக்கும் உண்டு.

  • சில விதிவிலக்குகள் தவிர்த்து, வாடகைத்தாயின் கருவில் வளரும் குழந்தையைக் கருக்கலைப்பு செய்யக் கூடாது.

  • குழந்தையை விற்பதற்கோ, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கோ வாடகைத்தாய் முறையைப் பயன் படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்.

சட்டம் பெண் கையில்! - வாடகைத்தாய்க்கான சட்ட உரிமைகள் - 29

வாடகைத்தாய் முறையை நிர்வகிக்க இருப்பவர்கள் இவர்கள்தாம்...

வாடகைத்தாய் முறைக்கென சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் முதன்மைப் பொறுப்பேற்க, இதில் நாடாளுமன்றத்தின் மூன்று பெண் உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள். மேலும், இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பலரும் இதன் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள். மத்திய, மாநில அளவில், மாவட்ட அளவில் என இதனுடைய அமைப்புகள் செயல்படும். இந்த மசோதாவில் மருத்துவக் குழுமம் அமைப்பது, அதன் உறுப்பினர்கள் தேர்வு, நியமனம் போன்ற விவரங்கள் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

வாடகைத்தாயை கமர்ஷியலாகப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கான தண்டனைகள்...

இந்த மசோதாவில், பிரிவு 35 முதல் 37 வரை, வாடகைத்தாயை அமர்த்தும் தம்பதிகள், வாடகைத்தாய்க்கான பிரத்யேக மருத்துவமனைகள், இடைத்தரகர்கள் ஆகியோர் வியாபார ரீதியாகச் செயல்படக் கூடாது என்பதையும், எவை எல்லாம் செய்யக் கூடாதவை என்பதையும், அவற்றை மீறுபவர்களுக்கான தண்டனைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றம் முதல் தடவையாக இருந்தால், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் சிறைத்தண்டனையும் உண்டு. இது, ஐந்து வருடங்கள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. முதல் தடவை குற்றத்துக்கான தண்டனை பெற்ற பின்னரும் திருந்தாமல் வாடகைத்தாய் முறையை கமர்ஷியல் நோக்கத்தோடு பயன்படுத்துபவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதமும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

ஒரு வழக்கு... ஒரு விளக்கம்...

குஜராத் உயர் நீதிமன்றம், ஜெர்மனியைச் சேர்ந்த ஜன் பலாஸ் என்பவரின் வாடகைத்தாய் தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பு இது.

ஜெர்மனியைச் சேர்ந்த ஜன் பலாஸ் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள தன் மனைவியுடன் இந்தியாவுக்கு வந்தார். அவரின் மனைவிக்கு கருமுட்டை உருவாவதில் குறைபாடு இருந்ததால், அதற்கு ஒரு டோனரை ஏற்பாடு செய்துகொண்டு, மருத்துவமனையின் உதவியோடு உருவாக்கிய கருவை சுமக்க, தனியாக வாடகைத்தாயையும் ஏற்பாடு செய்திருந்தார். வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்தது. குழந்தைகளுக்கு பாஸ்போர்ட்டும் விநியோகிக்கப்பட்டது. அதில் அப்பா என்ற இடத்தில் ஜன் பலாஸ் பெயரும், அம்மா என்ற இடத்தில் வாடகைத்தாயின் பெயரும் இடம்பெற்றிருந்தன. பொதுவாக, பெற்றோரில் யாராவது ஒருவர் இந்தியராக இருந்தால் குழந்தைக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். அதனால், தன் குழந்தைகளுக்கு இந்தியக் குடியுரிமை பெறுவதற்காக, வாடகைத்தாயின் பெயரையே அவர் அம்மா என்ற இடத்தில் எழுதியிருக்கலாம்.

சட்டம் பெண் கையில்! - வாடகைத்தாய்க்கான சட்ட உரிமைகள் - 29

இந்த நிலையில், ஜன் பலாஸின் குழந்தைகள் இந்தியர் அல்லர் என்று சர்ச்சை கிளம்ப, அவர் குழந்தைகளின் பாஸ்போர்ட் சட்டரீதியாக முடக்கப்பட்டது. அதை விநியோகிக்க வேண்டி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், ஜன் பலாஸ். குஜராத் நீதிமன்றம், இதேபோன்ற சூழலில் வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள்காட்டி, இந்த வழக்கை முழுமையாக ஆராய்ந்து, இறுதித் தீர்ப்பை வழங்கியது.

அந்தத் தீர்ப்பில், ‘ஜன் பலாஸ் ஜெர்மனியைச் சேர்ந்தவர். அவர், வாடகைத்தாயைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், அவரின் குழந்தைகள் உருவாக கருமுட்டை தானம் செய்தவரும், வளர்ந்த கருவை சுமந்து பெற்றவரும் இந்தியப் பெண்களே. அதனால் அந்த இரட்டைக் குழந்தைகள் இந்தியத் தாய்க்குப் பிறந்தவர்கள் என்பதால், இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்’ என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜெர்மன் நாட்டில் வாடகைத்தாய் முறையை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் ஜன் பலாஸ் தம்பதி இந்தியாவுக்கு வந்து, இந்தியப் பெண்களின் வறுமையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். குழந்தைகளின் தந்தை என்று ஜன் பெயரையும், தாய் என்ற இடத்தில் ஒரு விவரமும் அறியாத படிப்பறிவில்லாத வாடகைத்தாயின் பெயரையும் எழுதி, குழந்தைகளுடன் பறந்துவிட்டனர்.

இதுபோன்ற செயல்பாடுகள், முறைகேடுகளைத் தடுக்கத்தான், வரவிருக்கும் புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், உடல் உறுப்புதானம் செய்வது அவரவர் உரிமை என்பதைப்போல, ஒரு பெண் தன் கர்ப்பப்பையை வாடகைக்கு விடுவது அவரின் தனிப்பட்ட உரிமை; இந்த மசோதா அதைக் கடுமையாக்குகிறது என்று சிலர் கருத்துகளை முன்வைக்கிறார்கள். இதை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. குழந்தையில்லாத தம்பதிகள், அவர்களுடைய குடும்பங்கள், வாடகைத்தாயாக வருபவர், அவருடைய குடும்பம், பிறந்த குழந்தையின் நிலை என இதில் பல்வேறுபட்ட தரப்புகள் இணைந்துள்ளதால், வாடகைத்தாய் முறையில் வருங்காலத்தில் உருவாக விருக்கும் பேராபத்தைத் தவிர்க்க இதை முறைப்படுத்தும் சட்டம் அவசியம். ஆயினும், இதன் விதிமுறைகள் சிலவற்றைத் தளர்த்தினால்தான், நவீனத்தின் வளர்ச்சியாக உருவாகியுள்ள வாடகைத்தாய் முறையை மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

உதாரணமாக, தம்பதியின் உறவினர்களில் ஒருவர்தான் வாடகைத்தாயாக வர இயலும் என்கிறது இந்த மசோதா. ஒருவேளை அவர்களின் உறவினர்கள் யாரும் இதற்கு முன்வரவில்லை எனில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியின் உரிமை இங்கே மறுக்கப்படுகிறது. எனவே, இதில் தேவையான சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். குழந்தைப்பேறில்லாத தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் சாத்தியங்களைக் குறைக்கும் விதமாக அல்லாமல், அதை சட்டக் கண்காணிப்புக்குள் கொண்டுவரும் வகையான விதிமுறைகளுடன் அமைக்கப்பட வேண்டும் என்பதே இந்தச் சட்டம் குறித்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.