மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்... கிரிமினல் குற்றம் என்றால் என்ன? அறிய வேண்டிய சட்டங்கள் எவை?

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில்

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

``எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் காவல் நிலையம், நீதிமன்றம், வழக்கு என்று அவர்களின் சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்ந்தால், அவர்கள் படித்தவர்களாக இருந்தாலும் உலக அனுபவம் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்கோ, அவர்களின் உறவுகளுக்கோ என்று வரும்போது அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்கிற யோசனைகூட இல்லாமல் தவித்து விடுகின்றனர்.

குறிப்பாக கிரிமினல் தொடர்பான விவகாரம் என்றால் பயம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். கைது என்பது ஒருவரின் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் ஒன்று. அது மட்டுமல்ல... வாழ்நாள் முழுவதும் நினைத்து வருந்தக்கூடிய கரும்புள்ளியாகவே பதிந்துவிடும். அதனால் யாராக இருந்தாலும் காவல், கைது, விசாரணை, ஜாமீன், வழக்கு என்றால் கலங்கத்தான் செய்வார்கள். அவசியமான கிரிமினல் குற்றங்கள், அதற்கான சட்டங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்'' என்றுகூறி சட்டப்பிரிவுகளை விளக்குகிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

FIR முதல் தகவல் அறிக்கை

ஒரு குற்றம் நடைபெற்றால் பாதிக்கப்பட்ட தரப்பு காவல்நிலையத்தை நாடி புகார் கொடுப்பது அனைவரும் அறிந்ததே. எழுத்துப் பூர்வமாகவோ, வாய்மொழியாகவோ பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்கள் சார்பாகக் கூறப்படும் புகாரைப் பெற்றுக் கொண்டு, புகார் அளித்த விவரத்தைப் படித்துக்காட்டி, பிறகு அதில் அவர்களின் கையெழுத்தைப் பெற வேண்டும்.

காவல்நிலையத்திலிருந்து புகாரைப் பெற்றுக்கொண்டதற்கான ரசீது வழங்கப்படும். பாதிக்கப்பட்ட தரப்பு அளிக்கும் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் அதிகாரி, அவர்களிடம் கொடுக்கப்பட்ட புகாருக்கு முதல் தகவல் அறிக்கை எனும் FIR ரிப்போர்ட் தயாரிக்க வேண்டும்.

குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 154 இதுபற்றி விரிவாக விவரிக்கிறது.

புகார் கொடுத்தவர் அல்லது தகவலைத் தெரிவித்தவருக்கு FIR நகலைப் பணம் பெற்றுக் கொள்ளாமல் கொடுக்க வேண்டும்.

புகாரை அளித்த பிறகும் அதை ஏற்க மறுத்தாலோ, அதன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்தாலோ, புகார்தாரர் அவரின் புகாரை எழுதி அதைப் பதிவு தபாலில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

குற்றம் நிகழ்ந்ததாக புகார் அளிக்கும் நபர், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல்நிலை யத்தில் புகார் கொடுக்கலாம். இப்போது தமிழகக் காவல்துறை ஆன்லைனில் புகாரை அளிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

https://bit.ly/tncomplaint

இந்த இணையதளப் பக்கத்தில் வீட்டில் இருந்தபடியே புகாரைப் பதிவு செய்யலாம். பொய்யான புகாரை அளிப்பவர்கள் இந்திய தண்டனை சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.

சட்டம் பெண் கையில்... கிரிமினல் குற்றம் என்றால் என்ன? அறிய வேண்டிய சட்டங்கள் எவை?

FIR ரிப்போர்ட்டும் இப்போது ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. அதனால் வீட்டில் இருந்தபடியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பெண்களைக் கைது செய்ய வேண்டுமென்றால்...

  • பெண் காவல் அதிகாரிதான் பெண் குற்றவாளியை விசாரிக்க வேண்டும்.

  • ஒரு பெண்ணின் இருப்பிடத்திலோ, பெண்ணிடமோ தேடுதல் செய்ய வேண்டும் என்றால் அதைப் பெண் காவல் அதிகாரி மட்டுமே மேற்கொள்ள வேண்டும்

சட்டம் பெண் கையில்
சட்டம் பெண் கையில்
  • சூரிய உதயத்துக்கு முன்போ, சூரிய உதயத்துக்குப் பின்போ பெண்ணைக் காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது

  • பிரிவு 160 (1)-ன்படி காவல்துறை அதிகாரிகள் குற்றம் சம்பந்தமான தகவலைச் சேகரிக்க பெண்களிடம் விசாரிக்க வேண்டுமென்றால், அவர்கள் இருப்பிடத்தில்தான் விசாரிக்க வேண்டும். இது 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கும் பொருந்தும்

கைது ஆணை (வாரன்ட்)

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதை விடவும் கடினமான ஒன்று, குற்றவாளியாக அடையாளம் காணப்படும் நபரை விசாரணைக்கு அழைத்துச் செல்வதும், அவரை கைது செய்வதுமே. இதற்குக் காரணம் உண்டு. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் ஷரத்து 19(1)(d)-ன்படி இந்திய குடிமக்களாக இருக்கும் எவரும் சுதந்திரமாக வாழக்கூடிய உரிமை கொண்டவர்கள். அதற்குப் பங்கம் உண்டாக்கும் விதமாக தகுந்த காரணங்கள் இல்லாமல் ஒருவரைக் கைது செய்யமுடியாது.

ஆனால், கைது செய்ய வேண்டுமென்றால் காவல்துறை அதிகாரி பிடிவாரன்ட் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கைது செய்யும் பிடிவாரன்ட் உத்தரவை நீதிமன்றமே பிறப்பிக்கும். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து பிடி ஆணை என்னும் வாரன்ட் வாங்கி வந்தபிறகோ, வாரன்ட் இல்லாமலோ காவல் துறையினர் கைது செய்ய இயலும். கைது செய்த 24 மணி நேரத்துக்குள் குற்றம் சுமத்தப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

ஜாமீன்

குற்றவியல் சட்டம் 1973 பிரிவு 2(a)-ல் ஜாமீனில் விடுவிக்கக்கூடிய குற்றம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டவரை ஜாமீனில் விடுவிக்க காவல்துறைக்கு அதிகாரம் உண்டு. காவல்துறைக்கு அதிகாரமில்லாத நிலையில் குற்றம் சுமத்தப்பட்டவரை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தால் நீதிமன்றம் ஜாமீன் கொடுக்கும்.

நீதிமன்றக் காவலில் விசாரணைக் கைதியாக வைக்கப்பட்டிருக்கும் நபரால் ஆபத்து ஏற்படும் அல்லது வெளியுலகில் அவர் சுதந்திரமாக நடமாடினால் சாட்சியங்களைக் கலைத்து விடுவார் என்று நீதிமன்றம் கருதினால் ஜாமீனில் விடுவிக்க மறுப்பு தெரிவிக்கும்.

கைதான நபரின் உறவுகள் பாதிக்கப் பட்டவரின் சார்பாக வழக்கறிஞர் ஒருவரை நியமித்து, நீதிமன்றத்தில் ஜாமீனுக்காக விண்ணப்பிக்க வேண்டும். பணம் அல்லது சொத்து ஆகியவற்றை ஈடாக வைத்து ஜாமீன் கொடுப்பார்கள். ஜாமீனில் விடுவித்தாலும் கண்டிஷனல் பெயிலில் விடுவிக்கும் நிலையும் உண்டு. `கண்டிஷனல் பெயில்' என்பது வாரத்துக்கு ஒருநாள் காவல்நிலையத்துக்குச் சென்று கையெழுத்திட்டு வர வேண்டும், வெளியூருக்குப் பயணம் செய்யக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை உள்ளடக்கியதாகும்.

ஜாமீனில் விடுவிக்க முடியாத குற்றம்

ஜாமீனில் விடுவிக்க முடியாத குற்றங்களின் பட்டியல் மிக நீளமானது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

கொலை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, கடத்தல் போன்றவை ஜாமீனில் விடுவிக்க முடியாத குற்றங்களாகும். ஜாமீனில் விடுவிக்க முடியாத குற்றங்களில் பதிவானவர்களின் தரப்பு உரிய காரணங்களைத் தெரிவித்து அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் மட்டுமே அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள். நீதிமன்றம் குற்றவாளியின் தரப்பு விவாதத்தை ஏற்க மறுத்தால் ஜாமீன் கிடைக்காமலும் போகலாம்.

முன்ஜாமீன் (Anticipatory Bail) - பிரிவு 438

ஏதோ ஒரு வகையில் தான் கைது செய்யப்பட இருக்கிறோம் எனத் தெரியவந்தால், அத்தகைய குற்றமானது ஜாமீன் வழங்கக்கூடிய குற்றமாக இருந்தால், அந்த நபர் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்.

செஷன்ஸ் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற முடியும். `அடுத்த வாரம் நான் ஒரு குற்றம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறேன். அப்போது காவல்துறை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கொடுங்கள்' என்று முன் ஜாமீன் கேட்க முடியாது!

நீதிமன்றம் முன் ஜாமீன் கொடுத்தாலும் அதில் காலக்கெடு குறிப்பிடப்பட்டிருக்கும். கால அவகாசம் முடிவுறும்போது முன் ஜாமீனும் ரத்தாகிவிடும்.

இப்போது... ஜனவரி 2020-ல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், `முன் ஜாமீன் வாங்கினால் முன்ஜாமீன் வாங்கியவரின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் முடிவுறும் வரை அந்த முன்ஜாமீன் செல்லுபடியாகும். காலவரையறை கிடையாது' என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பத்திரிகை பிரிவு 173 (2)

குற்றவாளி என்று அடையாளம் கண்டவரை முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த பிறகு காவல்துறை குற்றம் தொடர்பாக விரிவாகத் தயாரிக்கும் ஆவணமே குற்றப்பத்திரிகை.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது முதல் விசாரணை செய்த விவரங்கள் வரை கொண்ட ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள்.

இருதரப்பினரின் பெயர், குற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டாரா, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தால் பிணயம் (Surety) கொடுத்து விடுவிக்கப்பட்டாரா என்பது போன்ற விவரங்கள் இதில் அடங்கியிருக்கும். நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இந்த குற்றப்பத்திரிகை அவசியமான ஆவணமாகும்.

K Ramachandra Reddy & Anr vs The Public Prosecutor என்ற வழக்கில் காயம் அடைந்த ஒருவர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு இறந்துவிடுகிறார். மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றமானது இறப்பதற்கு முன்பாக அவர் கொடுத்த புகாரின் FIR, மரண வாக்குமூலமாக ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஒருவர்மீது FIR பதிவாகிவிட்டால் அது அவர்களின் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது. வேலை, பாஸ்போர்ட், விசா, தொழில், வெளிநாட்டுப் பயணம் என எல்லாவற்றிலும் இந்த FIR-தான் முந்திக்கொண்டு நிற்கும். வேண்டாதவர்களின் வாழ்க்கையை முடக்கிப்போட பொய்யான புகாரைக் கொடுத்து FIR பதிவுசெய்வது முறையற்ற செயல்.