மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்! - இரண்டாவது மனைவி... சட்டம் எப்படி அணுகுகிறது? - 30

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

இந்தியா போன்ற நாடுகளில் திருமணத்தைத் தாண்டிய உறவுகள் அங்கீகரிக்கப்படுவதில்லை. இரண்டாவது திருமண பந்தத்துக்கான சட்ட நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கிறார், வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

ஒருவரின் கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும்போது, இருவருக்கும் இடையில் நடந்த திருமண பந்தத்தை சட்டப்படி முறித்துக்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட நபர் இன்னொரு ஆணை/பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதை, சட்டம் குடும்பப் பிரச்னையாகப் பார்ப்பதில்லை. இதைக் குற்றச்செயலாகக் கருதுகிறது.

இருதார திருமணம் சட்டப்படி தவறு என்றாலும், சில சூழல்களில் அது நிகழ்ந்துவிட நேரும்போது, அது சட்டப்படி அங்கீகரிக்கப்படாத திருமணமாகக் கருதப்படும். சட்டப்படி அங்கீகரிக்கப்படாத இரண்டாவது மனைவி, தன் கணவனின் பென்ஷன் தொகை மற்றும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் இதர பயன்களைத் தனக்கும் அளிக்க வேண்டும். இரண்டாவது மனைவியாக இருந்தாலும் தானும் மனைவிதான் என்று கோரும் வழக்குகள் பலவற்றை நீதிமன்றங்கள் சந்திக்க நேர்கிறது. சட்டப்படி செல்லாத திருமணம் என்றாலும், கிட்டத்தட்ட 20, 30 ஆண்டுகள் ஒருவரோடு சேர்ந்து வாழ்ந்த பெண்ணின் நியாயத்தை நீதிமன்றத்தால் புறந்தள்ள முடியாது போகிறது. அதுபோன்ற சூழல்களில், வழக்கின் தன்மைக்கேற்ப இரண்டாவது மனைவிக்கும் கணவனின் சொத்து மற்றும் பணி ஓய்வு ஊதியப் பங்குகளில் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளன நீதிமன்றங்கள். ஆனால், அது அரிதாகவே நிகழ்கிறது. பெரும்பான்மையைப் பொறுத்தவரை, இரண்டாவது மனைவி என்பவர் சட்ட அங்கீகாரத்துக்கு அப்பாற்பட்டவராகவே இருக்கிறார்.

கடந்த ஜூலை 2019-ல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்த வழக்கு ஒன்றின் தீர்ப்பு, இரண்டாவது மனைவிக்கான சொத்து மற்றும் பென்ஷன் உரிமைகள் குறித்த ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கின் விவரத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, இது தொடர்பான சட்டங்களைத் தெரிந்துகொள்வோம்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494 மற்றும் 495

ஒருவரின் மனைவியோ கணவனோ உயிருடன் இருக்கும்போதே அவருக்குத் தெரியாமல் (மேலும் மணம் முடிக்க இருப்பவரிடமும் தனது முதல் திருமணத்தை மறைத்து) சம்பந்தப்பட்டவர் இன்னொரு திருமணம் செய்துகொள்ளும் ‘பைகேமி' (Bigamy) ஒரு கிரிமினல் குற்றம். அதற்கு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494-ன் கீழ் புகார் கொடுத்து அது நிரூபணமானால், அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படும். மேலும், 495-ன் கீழ் புகார் அளித்து அது நிரூபிக்கப்பட்டால், முதல் திருமணத்தை மறைத்து திருமணம் செய்தவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படும்.

இந்து திருமணச் சட்டம் பிரிவு 17

இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள், முதல் திருமணம் நடைமுறையில் இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்துகொண்டால், இந்து திருமணச் சட்டம் பிரிவு 17-ன் கீழ் குற்றமாகும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494 மற்றும் 495 ஆகிய பிரிவுகளில் விளக்கப்பட்டுள்ள தண்டனை இதற்கும் பொருந்தும்

சிறப்பு திருமணச் சட்டம் 1954 பிரிவு 43, 44

எந்த மத சம்பிரதாயங்களையும் பின் பற்றாமல், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தங்களுடைய திருமணத்தைப் பதிவு செய்தவர் பைகேமி குற்றத்தில் ஈடுபட்டால், அவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494 மற்றும் 495-ன் படி தண்டனை வழங்கப்படும்.

கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872

இருதார மணத்துக்கு எதிராக கிறிஸ்தவர்களுக்கு தனியாகச் சட்டப் பிரிவுகள் இல்லை. ஆனால், ஒரு கிறிஸ்தவர் தனக்குத் திருமணமாகவில்லை என்று போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தால், அந்தத் தவற்றுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 193-ன் கீழ் சிறைத்தண்டனை வழங்கப்படும். அது, ஏழு வருடங்களாக நீட்டிக்கப்படும்.

இஸ்லாமியச் சட்டம்

இஸ்லாமிய மதத்தின் தனிச் சட்டத்தைப் பொறுத்தவரை, முதல் திருமண உறவில் இருக்கும்போது, ஒருவர் மற்றொரு திருமணம் செய்துகொள்வதை குற்றச் செயலாக எடுத்துக்கொள்வதில்லை.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழங்கப்பட்ட தீர்ப்பு

காவல்துறைப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரியின் இரண்டாவது மனைவி அவர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரிட் வழக்கு தாக்கல் செய்தவர், ‘மறைந்த தன் கணவரின் ஓய்வூதியத் தொகை மற்றும் இதர பணப்பலன்களில் முதல் மனைவிக்கு இணையாகத் தனக்கும் உரிமை வழங்க வேண்டும்’ என்று கோரினார். தன் கணவர், அவரது முதல் திருமணம் மற்றும் குழந்தைகள் பற்றிய உண்மையை மறைத்து, தன்னைத் திருமணம் செய்துகொண்டதாகவும், பின் சமரச மன்றத்தில் தாங்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தன் தரப்பில் விளக்கம் அளித்திருந்தார்.

அரசாங்கத்தில் கொடுக்கப்பட்ட ஆவணங்களில், மனைவி என்ற இடத்தில் வழக்கு தொடர்ந்த இரண்டாவது மனைவியின் பெயர் இல்லை என்பதால், கணவரின் ஓய்வூதியப் பலனை தனக்கு அளிக்கக் கோரிய இந்த இரண்டாவது மனைவியின் வழக்கை நிராகரித்தது நீதிமன்றம். ஏனெனில், அரசு ஊழியரின் குடும்ப ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்கு இறந்தவரின் மனைவியை மட்டுமே சேர்க்க முடியும் என்று தமிழ்நாடு பென்ஷன் ரூல்ஸ் 1978-ல் உள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, அரசாங்க ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் துறை வாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பைகேமி குற்றத்துக்காக சம்பந்தப்பட்ட நபர்மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், அதற்கான விதிமுறைகளை உருவாக்கும்படியும் நீதிமன்றம் அரசுக்கு வலியுறுத்தியது. மேலும், அரசு ஊழியர்களின் குறிப்பு களைச் சேகரிக்கும்போது, அவர்கள் கொடுக்கும் மனைவி தொடர்பான விவரங்களை அரசு ஆவணங்களின்படி சரிபார்த்து அறிந்த பிறகே அவற்றைப் பதிவுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பில்தான் இரண்டாவது திருமணம் செய்த அரசு ஊழியரின்மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப் பட்டுள்ளது. அதோடு, முதல் திருமணத்தை ரத்து செய்யாமல், முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது செய்துகொள்ளும் இன்னொரு திருமணம் கிரிமினல் குற்றமாகும். இது கண்டறியப்பட்டால், கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது இந்த வழக்கின் மூலம் அறியப்பட்ட தீர்ப்பு.

இதற்கு முன் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அரசு ஊழியர்கள், முதல் மனைவி தொடர்ந்த ஜீவனாம்ச வழக்கு விசாரணைக்கு சர்வசாதாரணமாக வந்துபோவது வழக்கம். இரண்டாவது திருமண குற்றத்துக்கு அவர் மீது கிரிமினல் வழக்கை எந்த அரசுத் துறையும் செய்வதில்லை (சில விதிவிலக்குகள் தவிர).

இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றப்பட்டால்...

ஒரு பெண், தான் ஏமாற்றப்பட்டு இரண்டாவது திருமணத்துக்கு ஆளானால், திருமண பந்தம் என்ற போர்வையில் தாம்பத்ய உறவுக்கு உட்படுத்தப்பட்டால், மண உறவு ரீதியாக நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றப்பட்டால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 493 முதல் 496, 498 வரையுள்ள பிரிவுகள் மற்றும் 415 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

சட்டம் பெண் கையில்! - இரண்டாவது மனைவி... சட்டம் எப்படி அணுகுகிறது? - 30

பாதிப்புக்கு உள்ளாவது பெண்கள்தாம்!

இத்தனை கடுமையான சட் டங்கள் அமலில் இருக்கும்போதும், இரண்டாவது திருமணங்கள் நடப்பதைத் தடுக்கமுடிவதில்லை. இதில் அதிக பாதிப்புக்கு உள்ளாவது, சம்பந்தப்பட்ட பெண்கள்தான். உணர்வுரீதியாக, சூழல்ரீதியாக என்று எந்தக் காரணத்துக்காகவும் ஒரு பெண், இரண்டாவது மனைவியாக முடிவெடுப்பதற்கு முன், சமூக அங்கீகாரமற்ற வாழ்க்கை, பொருளாதார ஸ்திரமின்மை, குழந்தைகளின் எதிர்காலம், கைகொடுக்காத சட்டப் பிரிவுகள் என்று அனைத்தைப் பற்றியும் சிந்தித்து, தன் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இரண்டாவது மனைவியாகப் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தாலும், பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழில் ‘தந்தை’ எனக் கணவரின் பெயர் இருந்தாலும், ‘மனைவி’ என்ற சட்டப்படியான அந்தஸ்து கிடைக்காத நிலையே பெரும்பாலான பெண்களுக்கு மிஞ்சுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏமாற்றப்பட்டு இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளப்படும் பெண்களின் நிலைமை இன்னும் பரிதாபம். தன் கணவன் மீதான குற்றத்தை நிரூபிக்கும் பெரும் சுமை, புகார் அளிக்கும் பெண்ணிடமே வந்தடைகிறது.

ஆண்களின் சுயநலத்துக்குப் பெண்கள் பலியாகக் கூடாது!

சர்ளா முட்கல் வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா வழக்கு (Sarla Mudgal Vs Union of India)

`இந்துவாக இருந்த ஒருவர் இந்து திருமண சம்பிரதாயப்படி திருமணம் செய்துகொண்டு, அந்தத் திருமணத்தை முறைப்படி விவாகரத்து செய்யாமல், இஸ்லாம் மதத்துக்கு மாறி, தான் இப்போது இஸ்லாமியர் என்பதால் இரண்டாவது திருமணம் குற்றமில்லை என்று வாதிட முடியாது. இந்து முறைப்படி செய்துகொண்ட திருமணத்தை ரத்து செய்யாத ஒருவர், இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், அவர் இந்திய தண்டனைச் சட்டப்படி பைகேமி குற்றத்துக்கு ஆளாவார்’ என்று இந்த வழக்கின் மூலம் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபவர்களுக்கான தண்டனை தெளிவுபடுத்தப்பட்டது.