
வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
``கருமுட்டை அல்லது உயிரணு தானம் என்பது காதும் காதும் அறியாமல் கொடுக்கப்படவேண்டிய தானம். இது மிக ரகசியமாக நடக்கும் தானம் என்பதால் முறைகேடுகளும் அதிகம். இதில் ஏமாற்றப்படுவதைக்கூட வெளியில் சொல்லி நீதிபெறத் தயங்கும் நிலையே மக்கள் மத்தியில் உள்ளது. ஆனாலும், சிலர் பாதிப்பை ஏற்படுத்திய தரப்பினர்மீது புகார்கள் கொடுத்து, அவை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு தீர்ப்பாகும் நிலையில் நாமும் அதைப் பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது'' என்கிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி. இதில் நடக்கும் குளறுபடிகள், சட்டத் தீர்வுகள் குறித்தும் விரிவாக விளக்குகிறார்.

குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு வாடகைத்தாய் முறை, உயிரணு மற்றும் கருமுட்டை தானம் போன்றவை வரம் என்பதை மறுப்பதற்கில்லை. பெண்ணிடமிருந்து வழங்கப்படுவது கருமுட்டை தானம், ஆணிடம் இருந்து வழங்கப்படுவது உயிரணு தானம். Gamete என்பது இவற்றுக்குப் பொதுவான சொல். இந்த தானம் செய்பவர்கள் பெரும்பாலும் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களாக உள்ளனர். சில பகுதிகளில் இது மறைமுகத் தொழிலாகவே உள்ளது. சிலர் கருமுட்டை / உயிரணு தானம் கொடுப்பதால் பெருந்தொகை கிடைப்பதை தங்களுக்கான நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இடைத்தரகர்கள் பெருந்தொகையை அபகரித்துக்கொள்வதும் நிறையவே உண்டு.
குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு வாடகைத்தாய் முறை, உயிரணு மற்றும் கருமுட்டை தானம் போன்றவை வரம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால்...
கருமுட்டை / உயிரணு தானம் என்றால் என்ன? யாரெல்லாம் தானம் செய்யத் தகுதி வாய்ந்தவர்கள்? இதற்கென உள்ள தனிச்சட்டங்கள், நீதிமன்ற வழக்குகளில் வெளியான தீர்ப்புகளைப் பார்ப்போம்.
ஒரு பெண்ணுக்கு அல்லது ஆணுக்கு உயிரை உருவாக்கும் தன்மையில் குறைபாடு என்று மருத்துவ ரீதியாக உறுதியான பின்னர், அவர்களால் இயற்கையாக குழந்தைபெற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்னும்பட்சத்தில் மருத்துவத்தின் மூலம் ஒரு வாரிசை உருவாக்கிக்கொள்ளும் ஓர் அரிய வாய்ப்புதான் கருமுட்டை / உயிரணு தானம். தம்பதியரில் கணவனுக்கு குறைபாடு எனில் பெண்ணின் கருமுட்டையும் மனைவிக்கு குறைபாடு எனில் பாலின உயிரணுவும் தானமாக பெறப்படுகிறது.
மாறிவரும் உணவுப்பழக்கம். உறக்கமின்மை, பணிச் சுமை, டென்ஷன், சூழல் மாசு போன்ற காரணங்களால் இனிவரும் காலத்தில் கணவன் மனைவி இருவருக்கும் குழந்தை பெற்றுக்கொள்ளும் உடலமைப்பு இல்லாமல் போகும் நிலை அதிகரிக்கும்.
கருமுட்டை உயிரணுக்களை டோனர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள் அவர்கள் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனையின் துணையுடன் தானமாகக் கொடுக்க முன்வரும் நபர்களிடமிருந்து அதைப் பெற்றுக்கொள்வார்கள். டோனரிடமிருந்து சேகரித்து வைத்த கருமுட்டை / உயிரணுக்களை உறைநிலையில் வைத்து பாதுகாத்து, சிகிச்சை எடுத்துக்கொள்பவரின் கருமுட்டை / உயிரணுக்களைச் சேகரித்து, கருவை உருவாக்கி எம்ராய் (embroy) என்னும் கருவின் ஆரம்ப நிலையில் மனைவியின் கர்ப்பப்பையில் சிகிச்சையின் மூலம் செலுத்துவார்கள். இந்த நீண்ட நெடிய மருத்துவ சிகிச்சையை கடந்து வருவதென்பது அத்தனை சுலபமாக நடந்து விடுவதில்லை.

கருமுட்டை / உயிரணு தான முறையை நெறிப்படுத்தும் சட்டங்கள் இந்தியாவில் இல்லை. இதுவரை வாடகைத்தாயாக வருபவர்கள் கரு முட்டையையும் அளிக்க வேண்டிய தேவையிருந்தால், அதை தானமாகக் கொடுப்பார். வாடகைத்தாய் முறைக்கான புதிய சட்டம் அமலுக்கு வந்தால், வாடகைத்தாயாக வர முன் வருபவர்கள் கருமுட்டை தானம் செய்யவேண்டிய அவசியமில்லாது போகும்.
மாறிவரும் உணவுப்பழக்கம், உறக்கமின்மை, பணிச் சுமை, டென்ஷன், சூழல் மாசு போன்ற காரணங்களால் இனிவரும் காலத்தில் கணவன் மனைவி இருவருக்கும் குழந்தை பெற்றுக்கொள்ளும் உடலமைப்பு இல்லாமல் போகும் நிலை அதிகரிக்கும். அதனால் கருமுட்டை / உயிரணுக்களை தானமாக வாங்கும் நிலை பெருகும்.
பாலியல் உயிரணு தானம் கொடுக்க முன்வரும் நபர் உறவுப் பெண்ணாகவோ, தோழமையாகவோ இருந்தால் `பாதிக்கப்பட்ட தரப்பு' என்ற பட்டியலும் அதற்கான சட்டம் இயற்றுவதற்கான அவசியமும் ஏற்பட்டிருக்காது. ஆனால், தானம் கொடுப்பவரும் பெற்றுக்கொள்வோரும் அறிமுகமில்லாதவர்கள். யார் தானம் கொடுத்தார்கள் என்பது அதைப் பெற்றுக் கொள்பவர்களுக்குத் தெரியப் போவதும் இல்லை என்பதால் - குறிப்பாக தானம் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்படும் அநியாயங்களுக்கு எதிராகக் கேள்வி எழுப்ப - இதற்கான சட்டங்கள் அவசியமாகின்றன.
இந்த நடைமுறையில் தொடர்புடைய கருமுட்டை / உயிரணு தானம், கருவை ஆரம்ப நிலையில் உருவாக்குதல், கருமுட்டை / உயிரணுக்களை உபகரணங்களின் உதவியுடன் பாதுகாத்தல், சிகிச்சை நடைமுறைகளில் எழும் அசம்பாவிதங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் இதில் பாதிக்கப்படும் தரப்பைப் பாதுகாக்கவும் விசாரணை மேற்கொள்ளவும் The Assisted Reproductive Technology (Regulation) Bill 2017 வரையப்பட்டது. இந்தச் சட்டத்தின் சில பிரிவுகள் அனைத்துத் தரப்பினராலும் அங்கீகரிக்கப்படவில்லை. அதனால் எதிர்வினையும் எதிர்ப்புகளும் வலுவாக எழுந்துள்ள நிலையில் இந்தச் சட்டம் அமலுக்கு வராமல் நிலுவையிலேயே உள்ளது.
கருமுட்டை / உயிரணுக்கள் தானம் (Gamete donation)
டோனராக முன்வரும் பெண்ணுக்கு ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்பட்டு, அதிகபடியான கருமுட்டைகளை உருவாக்கி, அவற்றின் வளர்ச்சியைக் கண்காணித்து, குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்தது கருமுட்டைகள் எடுக்கப்படுகின்றன. இந்த நடைமுறையால் ஒவ்வாமை உண்டானால் அதற்கான மருத்துவச் செலவை மருத்துவமனையோ, தானம் பெறும் தரப்போ ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கான மருத்துவச்செலவை டோனர்தான் ஏற்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த நடைமுறை காரணமாக பக்கவிளைவுகள் உண்டானால் டோனராக வருபவருக்கு கர்ப்பப்பை வீக்கம், உயிர்போகும் அபாயம் போன்றவற்றுக்கும் வாய்ப்புண்டு என்கிற எச்சரிக்கையும் இதில் இருப்பதால் இந்தச் சட்டம் நாளைய சமுதாயத்துக்கு தேவையான ஒன்று.

The Assisted Reproductive Technology (Regulation) Bill 2017 (ART)
இந்தச் சட்டத்தின்படி மத்திய மற்றும் மாநில அளவில் தனி ஆணையம் உருவாக்கப்படும். மத்திய அரசின் கீழ் தேசிய ஆணையம் அமையும். சுகாதாரத்துறை, மனித உரிமை ஆணையம், நேஷனல் கமிஷன் ஃபார் வுமன் எனப் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாகப் பங்கேற்பார்கள். தலைவர் மற்றும் மூன்று முழுநேர உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள். 21 நபர்களுக்கு மிகாமல் பகுதிநேர உறுப்பினர்களும் சேர்க்கப்படுவார்கள். இதில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என இந்தச் சட்டப்பிரிவு 4-ல் விளக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலும் இதேபோன்ற ஆணையம் அமைக்கப்படும். அதில் முழுநேர உறுப்பினர்களோடு, பகுதிநேர உறுப்பினர்களாக 11 நபர்கள்வரை இடம்பெறுவார்கள். இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
தம்பதிகள் மட்டும்தான் தானம் பெற்றுக் கொள்ள முடியும். தம்பதிகள் என்பது திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதிகளையும் குறிக்கும் (லிவ் இன் ரிலேஷன்ஷிப்).
இந்தச் சட்டத்தின் பிரிவு 37-ன்கீழ் கருமுட்டை / உயிரணுக்களைச் சேகரித்து வைக்கும் சேமிப்பு வங்கியிலிருந்து பெறும் மருத்துவமனையானது, தானம் கொடுத்தவருக்கு இந்தச் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த வகையான நோயும் இல்லை என்பதை பரிசோதித்த பின்னரே வாங்க வேண்டும்.
ஆர்ட் (ART) கிளினிக்கின் நடத்துநர்கள் சிகிச்சைக்காக வந்திருக்கும் தம்பதியிடம் சிகிச்சையின் முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். சிகிச்சையின் நன்மை தீமைகளைத் தெளிவுபடுத்த வேண்டும். செலவு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். மருத்துவரீதியான பக்க விளைவுகள், அபாயம் போன்றவற்றையும் இந்த சிகிச்சை முறையை தவிர்த்து, தத்து எடுத்துக்கொள்வதின் சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆர்ட் (ART) சிகிச்சையினால் பல கருக்கள் உருவாவதற்கான சாத்தியம் இருப்பதையும் அதன் அபாயத்தையும் தெரிவிக்க வேண்டும்.
விதிமுறைகள்
சிகிச்சை மேற்கொள்ளும் தம்பதிகள் பற்றிய தகவல் மற்றும் காமெடிக்ஸ் தானம் கொடுத்தவர்கள் ஆகியவர்களின் விவரங்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது. சிகிச்சையின் திட்டத்துக்குள் வரும் நேஷனல் ரெஜிஸ்டரைப் பாதுகாத்து வைக்கும் மத்திய தரவுத் தளத்தில் மட்டுமே தானம் கொடுத்தவர்கள், பெற்றவர்களுக்கான விவரங்கள் சேகரித்து வைக்கப்படும். மெடிக்கல் எமர்ஜென்சி சூழ்நிலைகள் உண்டானால் சம்பந்தப்பட்ட தம்பதி அல்லது நீதிமன்ற உத்தரவின்படியே சிகிச்சையில் தொடர்புடையவர்களின் விவரங்களைப் பெற முடியும்.
ஆர்ட் (ART) சிகிச்சைக்கான கிளினிக் மற்றும் ஆர்ட் வங்கி போன்றவற்றுக்கான புகார் அளிக்கும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும்.இந்த விஷயத்தில் இன்னும் பல விதிமுறைகளும் உண்டு. அவை அடுத்த இதழில்...