
வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
கருமுட்டை / உயிரணு தானத்தில் நடக்கும் குளறுபடிகள், சட்டத் தீர்வுகள் குறித்து சென்ற இதழில் விளக்கியிருந்தார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.
இந்த விஷயத்தில் இன்னும் பல விதிமுறைகளும் உண்டு. அவை...
சிகிச்சை மேற்கொண்ட தம்பதிக்கு ஆர்ட் எனும் Assisted reproductive technology சிகிச்சை பெற்றதன் குறிப்புகள் அடங்கிய டிஸ்சார்ஜ் சான்றிதழ் வழங்க வேண்டும்.
இந்தச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட ஆர்ட் பேங்க் நடத்துநர்கள் மட்டுமே பாலின உயிரணுக்களைச் சேமிக்கவும், மருத்துவமனைக்கு அளிக்கவும் அதிகாரம் பெற்றவர்கள்.
தேசிய ஆணையம், நேஷனல் ரெஜிஸ்டரி ஆகிய அமைப்புகள் நேரடியாக சோதனைக்கு வந்தால், அதற்கு ஆர்ட் கிளினிக் அல்லது ஆர்ட் வங்கி தயாராக இருக்க வேண்டும்.

சிகிச்சையில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினர்களிடமும் எழுத்துபூர்வமான சம்மதம் பெற வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்களின் எழுத்துபூர்வ மான அனுமதி பெற்ற பிறகே பாலின உயிரணுக்கள் அல்லது வளர்ந்த கருவைச் சேமித்துவைக்க முடியும். பாலின உயிரணுக்களோ, வளர்ந்த கருவோ உயிர்த்தன்மை அற்றுப் போகும் நிலை அல்லது கருவை உருவாக்கிய பிறகு சிகிச்சைக்கு இசைவில்லாத சூழல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எழுதி பதிவு செய்ய வேண்டும்.
கடைசி நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் சிகிச்சையில் விருப்பமில்லாவிட்டால், சம்பந்தப்பட்ட பெண்ணின் கருப்பைக்குள் கருவைச் செலுத்துவதற்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும் நிராகரிக்கும் உரிமை உண்டு.
சிகிச்சையில் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர ஆராய்ச்சி போன்ற பிற தேவைகளுக் காக இந்தக் கருமுட்டை / உயிரணுக்களை உபயோகப்படுத்தக் கூடாது. அப்படியொரு தேவையிருப்பின், அதில் தொடர்புடையவர் களின் எழுத்துபூர்வமான அனுமதி பெற வேண்டும்.
ஆர்ட் கிளினிக் மற்றும் வங்கிகள் ரீபுராடக்டிவ் சிகிச்சையில் தொடர்புடைய விவரங்களைச் (பயன்படுத்தியவை, பயன்படுத்தாதவை) சேகரிக்க வேண்டும்.
இந்தச் சட்டத்தின்படி கருமுட்டையுடன் ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களின் பாலின உயிரணுக்களைச் சேர்த்து கருவை உருவாக்க கூடாது.
தானம் கொடுப்பவர் பெண்ணாக இருந்தால், அவர் திருமணம் செய்தவராக இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்குத் தாயானவராகவும் இருக்க வேண்டும்.
தானம் கொடுப்பவருக்குப் பரம்பரை நோய் ஏதேனும் இருக்கிறதா என்றும் பரிசோதிக்க வேண்டும். இந்தச் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நோய்களில் ஏதேனும் தானம் கொடுப்பவருக்கு இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட வேண்டும்.
தானம் கொடுப்பவர் ஆணாக இருந்தால் 21 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். பெண்ணாக இருந்தால் 21 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தானம் கொடுப்பவர் பெண்ணாக இருந்தால், அவர் திருமணம் செய்தவராக இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்குத் தாயானவராகவும் இருக்க வேண்டும். அந்தக் குழந்தைக்குக் குறைந்தபட்சம் மூன்று வயதாகி இருக்க வேண்டும்.
வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டும்தான் தானம் கொடுக்க வேண்டும். டோனரிடமிருந்து பெறப்படுவதில் ஏழு உயிரணுக்களை மட்டுமே சேமித்துவைக்க வேண்டும்.
சிகிச்சை பெற வரும் தம்பதிகளின் எழுத்துபூர்வ அனுமதியுடன் உபயோகிக்காத கருமுட்டை / உயிரணுக்களைப் பாதுகாத்து வைக்கலாம். அதை அடுத்த சுழற்சி சிகிச்சையின்போது பயன்படுத்தலாம் அல்லது ஆராய்ச்சிக்காக அளிக்கலாம்.
தானம் கொடுப்பவருக்குக் காப்பீடு எடுக்க வேண்டும்.
பாலின உயிரணுக்களை விற்பனை செய்வது தடை செய்யப்படுகிறது.
ஆராய்ச்சிக்காகப் பாலின உயிரணுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது தடை செய்யப்படுகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தியாவில் ஆராய்ச்சியை மேற்கொள்ள அனுமதியுண்டு.
1இயற்கையாகப் பிறந்த குழந்தைக்குரிய அனைத்து உரிமைகளும் ஆர்ட் சிகிச்சையின் மூலம் பிறக்கும் குழந்தைக்கும் உண்டு.
தானம் கொடுத்தவர் எந்தவிதமான உரிமையும் அடைய முடியாது.
பாலின உயிரணுக்களை விற்பனை செய்தல், தம்பதி அல்லது தானம் செய்தவர்களை ஏமாற்றுதல், ஏற்றுமதி செய்தல், கருவை ஆணுக்கோ, விலங்குகளுக்கோ செலுத்துதல், தானம் செய்பவர்களை ஏற்பாடு செய்ய இடைநிலைத் தரகர்களை ஏற்பாடு செய்தல் போன்ற குற்றங்களைச் செய்வது முதன் முறையாக இருந்தால் தேசிய ஆணையத்தின் மூலம் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் முதல் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
குற்றம் மீண்டும் தொடருமானால் 10 ஆண்டுச் சிறைத் தண்டனை மற்றும் 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
17 வயதில்...
17 வயது பெண் ஒருவர், 2010-ல் மும்பை மருத்துவமனை ஒன்றில் கருமுட்டை தானம் செய்தார். அவரே 2009 - 2010 ஆண்டுகளில் மூன்று முறை தானம் செய்துள்ளார். கடைசியாக தானம் கொடுத்துவிட்டு வந்தபிறகு அவருக்கு உண்டான உடல் உபாதைகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார். இந்த மரணத்துக்குப் பிறகுதான் கருமுட்டை தானம் செய்வதன் அபாயம் மற்றும் அதுபற்றிய பயம் மக்களிடையே பரவியது.
அப்போதைய விதிமுறைகளின்படி 18 வயது நிரம்பாத மைனர் பெண்ணிடம் தானம் பெற்றது, ஒருமுறை தானம் செய்ததற்கும் இன்னொரு முறை செய்வதற்குமான இடைப்பட்ட நாட்களுக்கான இடைவெளி பின்பற்றப்படாதது ஆகியவை குற்றமே. அதனால், அந்தப் பெண்ணை தானம் பெற அழைத்துச்சென்றவர்கள், மருத்துவர்கள் எனப் பலதரப்பினரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மருத்துவர் கடம் என்பவரை 2019 ஆகஸ்ட்டில் இந்த வழக்கில் இருந்து மும்பை செசன்ஸ் நீதிமன்றம் விடுவித்தது.
17 வயது பெண்ணான அவர் தனக்கு 20 வயது என்று சமர்ப்பித்த ஆவணங்கள்தான் தானம் பெறப்பட்டதற்குக் காரணம் என்றும் 2009-ல் முதன்முறை சிகிச்சை செய்தது மட்டுமே மருத்துவர் கடம். அதற்குப்பிறகு அந்தப் பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டார் என்றும் மருத்துவர் கடம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் இறப்பில் டாக்டர் கடத்துக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதால் ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.