மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்... விவாகரத்துக்குப் பின் குழந்தையைப் பராமரிக்கும் உரிமை யாருக்கு?

விவாகரத்து
பிரீமியம் ஸ்டோரி
News
விவாகரத்து

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

விவாகரத்துக்குப் பின் குழந்தையைப் பராமரிக்கும் உரிமை என்கிற கஸ்டடி யாருக்கு என்பது வழக்கின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். குழந்தையின் நலன் மட்டுமே இங்கு முதன்மைப்படுத்தப்பட்டு முடிவெடுக்கப்படும்.

சட்டம் பெண் கையில்... விவாகரத்துக்குப் பின் குழந்தையைப் பராமரிக்கும் உரிமை யாருக்கு?

பேபி சரோஜம் Vs எஸ்.விஜயகிருஷ்ணன் என்ற வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இரண்டு மைனர் குழந்தைகளின் தாய் இறந்து விட்டார். இயற்கையாக மட்டுமல்லாமல் சட்டப்படியும் அவர்களின் கஸ்டடி உரிமை தந்தை வசமே வரும். இரண்டு குழந்தைகளின் தாய்வழிப் பாட்டி குழந்தைகளைப் பாதுகாக்கும் உரிமையைத் தன்னிடம் கொடுக்கும்படி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குழந்தைகளின் தந்தைக்கு இதில் சிறிதளவும் விருப்பமில்லை. இறுதியாக, தந்தைக்கும் பாட்டிக்கும் தனித்தனியாக சில கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்து குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் உரிமை பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை விரும்பாத இருதரப்பும் தனித்தனியாக மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்கள்.

மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி குழந்தைகள் அவர்களின் பாட்டி வீட்டில் வளர்வார்கள். விடுமுறையின்போது அவர்களைப் பார்த்துச்செல்ல அல்லது விடுமுறையைக் கொண்டாட அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்ல தந்தைக்கு உரிமை உண்டு. ஆனால், அன்று மாலையே அவர்களைப் பாட்டி வீட்டில் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும் என்ற கீழமை நீதிமன்றத்தின் நிபந்தனையை உயர் நீதிமன்றம் தளர்த்தியது.

சட்டம் பெண் கையில்... விவாகரத்துக்குப் பின் குழந்தையைப் பராமரிக்கும் உரிமை யாருக்கு?

தந்தையின் வாதத்துக்குத் தீர்வாக குழந்தைகளின் தந்தையான அவர் மாமியார் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். குழந்தைகளைப் பார்த்துச் செல்லலாம். பள்ளியிலும் அவர்களது கல்வியை பாதிக்காத வகையில் சென்று பார்க்கலாம். விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை நாள்களில் குழந்தைகளை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம். அதேபோல பள்ளி தொடங்குவதற்கு முன்தினமே பாட்டி வீட்டில் அழைத்துவந்து விட்டுவிட வேண்டும் என்றும் தெரிவித்தது. பாட்டி தாத்தாவுக்கு வயதாகிறது, அவர்கள் குழந்தைகளைப் பராமரிக்க மாட்டார்கள், அதனால் அவர்களுக்குப் பாதுகாக்கும் உரிமையைக் கொடுக்கக் கூடாது என்ற எதிர்த்தரப்பு வாதங்களை அலசும்போது, பேரக் குழந்தைகளுக்கு, பாட்டியும் தாத்தாவும் வங்கியில் பணம் முதலீடு செய்து வைத்துள்ளனர்; பேரக் குழந்தைகளிடம் பாசமாக உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டி குழந்தைகளைப் பாதுகாக்கும் கஸ்டடி உரிமை தாத்தா பாட்டியிடமே ஒப்படைக்கப்பட்டது. பெற்ற தந்தை வாழும் நிலையில் குழந்தைகளின் கஸ்டடி உரிமையைப் பாட்டியிடம் கொடுத்தது அபூர்வமான தீர்ப்பே.

பெண் குழந்தையை வளர்க்கும் உரிமை அம்மாவுக்கு மட்டுமல்ல; அப்பாவுக்கும் உண்டு.

விவாகரத்து
விவாகரத்து

பெண் குழந்தை எனும்போது அந்தக் குழந்தை அம்மாவிடம் வளர்வதுதான் சரியாக இருக்கும். அவளது பாதுகாப்புக்கும் அவளது தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவும் பதின்ம வயதில் பருவ மாற்றத்துக்குத் தகுந்தாற்போல அவளுக்குப் பாதுகாப்பு உணர்வை அளித்து வளர்க்கவும் தாயால் மட்டுமே முடியும் என்பதை எல்லோரும் நம்புவதால் பெண் குழந்தைகள் விஷயத்தில் அவர்களின் கஸ்டடி தாய்வசமே வந்தடைகிறது. இதுதான் விதிமுறை என்று பலராலும் நம்பப்படுகிறது.

இதற்கு நேர்மாறாக மீனாட்சி Vs ஷாலிஷ் என்ற வழக்கில் தீர்ப்பு  வழங்கப்பட்டுள்ளது. கணவனுக்கும் மனைவிக்கும் விவாகரத்து, ஒன்பது வயது மகள் ஸ்ரீயின் கஸ்டடி உரிமையை குடும்பநல நீதிமன்றத்தின் மூலம் தாயார் பெற்றார். ஸ்ரீக்கு தாயுடன் வசிப்பதில் விருப்பம் இல்லை. சண்டீகர் உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீயின் தந்தை குடும்பநல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஸ்ரீயின் கஸ்டடி உரிமை அவரிடமே வந்தடைந்தது. அவளது தாய்க்கு விசிட்டேஷன் ரைட்ஸ் கிடைத்தது.

தாய்க்கு வருமானம் இல்லை என்ற காரணத்துக்காக குழந்தையை வளர்க்கும் உரிமை பறிக்கப்படுவதில்லை.

ஸ்ரீயின் தாய் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன் தாக்கல் செய்தார். ஒன்பது வயது பெண் குழந்தையின் நலனைக் கருதி அவர்கள் மனுவை நீதிமன்றம் விசாரிக்க முடிவெடுத்தது. பெற்றோர் மற்றும் மகள் மூவரும் நீதிமன்ற சேம்பரில் தனித்தனியாக விசாரிக்கப்பட்டனர். ஸ்ரீ அவள் தாய்மீது புகார் அளித்தார். தந்தையுடன் இருந்து படிப்பதையே விரும்புவதாகத் தெரிவித்தாள்.

`நாக்பூர் நீதிமன்ற மத்தியஸ்த மையத்தில் ஸ்ரீயின் தந்தை அவளை அழைத்து வந்துவிட வேண்டும். அவளின் தாய் அவளை அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று மாலையில் மையத்தில் ஒப்படைக்க வேண்டும். குறிப்பிட்ட சில தேதிகளில் இது நடக்க வேண்டும். அவர்கள் நடந்து கொள்ளும்விதம் பற்றி மத்தியஸ்த மையம் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். அதைக்கொண்டு முடிவெடுக்கலாம்' என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

வளர்ந்த மகளின் கஸ்டடி உரிமை தந்தையிடம் வழங்கப்பட்ட முக்கியமான வழக்குகளில் இதுவும் ஒன்று.

குழந்தையைப் பராமரிக்கும் அளவுக்கு அவனை அல்லது அவளை வளர்க்க விரும்பும் தரப்பின் வருமானம் உள்ளதா என்று கணக்கிடப்படுகிறது என்றாலும், தாய்க்கு வருமானம் இல்லை என்ற காரணத்துக்காக, குழந்தையை வளர்க்கும் உரிமை பறிக்கப்படுவதில்லை. மாறாக, தந்தையிடமிருந்து பராமரிப்புத் தொகையைப் பெற்றுத் தருகிறது.  குழந்தையின் கஸ்டடியைத் தந்தை கேட்கும்போது அவர் வேலைக்குச் செல்பவராக இருந்தால்,  அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் அந்தக் குழந்தையைப் பராமரிக்கும் சூழ்நிலை உள்ளதா, தாத்தா பாட்டி கவனித்துக்கொள் வார்கள் என்றால் வயதான அவர்களால் பராமரிக்க இயலுமா என்பதும் கவனிக்கப்படுகிறது.

எல்லாவற்றையும்விட முக்கியம், வளர்ந்த பிள்ளை யாக இருந்தால்  குழந்தை யாரிடம் வளர  விரும்பு கிறது என்பது மிக முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

குழந்தையைப் பெற்றவளைவிட அதிக உரிமை வேறு யாருக்கும் இல்லை என்பது இயற்கையான ஒன்று. எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. ஆனாலும், குழந்தையிடம் வன்முறையைக் கையாளும் அம்மா வாக இருந்தால், குழந்தைக்கு நல்ல பழக்கவழக்கங்களைக் கற்பித்து வளர்க்க முடியாத குணத்தைக்கொண்ட தாயாக இருந்தால், அவரிடம் ஒப்படைக்கப்படும் குழந்தை பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது என்று நீதிமன்றம் கருதினால் தாய்க்கு கஸ்டடி உரிமை மறுக்கப்படுகிறது.

`தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என குடும்பமாக ஒரே வீட்டில் வசித்தோம். பெற்றோர் விவாகரத்து வாங்கிவிட்டார்கள். இனிமேல் பெற்றோரில் ஒருவருடன்தான் வசிக்கப் போகிறோம். படிக்கும் பள்ளி மாறும். பழகிய நண்பர்களை விட்டுச் செல்லும் நிலை உண்டாகும்...' - இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு, மனத்தளவில் ஏற்படும் பிரிவுத் துயரத்தில் ஆழ்ந்து குழப்பத்தில் வருந்திக்கொண்டிருக்கும் குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதால்தான் இரண்டு தரப்பின் அன்பும் அக்கறையும் குழந்தைக்கு நிரந்தரமாகக் கிடைக்க வேண்டும் என்று குழந்தையின் நலனை முன்னிலைப்படுத்தி கஸ்டடி உரிமை தீர்மானிக்கப்படுகிறது.

கஸ்டடி பற்றிய விதிமுறைகளை இந்து திருமணச்சட்டம் 1955 பிரிவு 26 விளக்குகிறது. கஸ்டடி, மைனர் குழந்தையின் கல்வி, பராமரிப்புத் தொகை ஆகியவற்றுக்காக விண்ணப்பங்கள் வரும்போது அதன்மீது உடனடியாக நீதிமன்றம் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை, இடைக்காலத் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை நீதிமன்றத்துக்கு இந்தச் சட்டப் பிரிவு வழங்குகிறது. அதாவது, குழந்தையை யார் வளர்க்க வேண்டும் என்று உத்தரவு வழங்க, வழக்கின் இறுதியில் முடிவெடுக்க வேண்டும் என்று காத்திருக்கத் தேவை இல்லை. மைனர் குழந்தையின் கல்வி, பராமரிப்புத் தொகை ஆகியவற்றைத் தீர்மானித்து 60 நாள்களுக்குள் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும்.

கிறிஸ்தவ மதச்சட்டம், இஸ்லாமிய மதச்சட்டம் கஸ்டடி உரிமையைப் பற்றி என்ன சொல்கிறது? இந்தியா அல்லாத வேறு நாடுகளில் பெற்றோரில் ஒருவர் வசித்தால் இந்தியாவில் வசிக்கும் பெற்றோரில் ஒருவர் தனது குழந்தையை விசிட்டேஷன் ரைட்ஸ் வைத்திருந்தாலும் எப்படி பார்க்க இயலும்? கஸ்டடி உரிமையை வெளிநாட்டு நீதிமன்றங்கள் தீர்மானித்தால் இந்தியாவில் வசிக்கும் தாயோ தந்தையோ யாரை அணுகுவார்கள்? இது போன்ற கேள்விகளுக்கான விளக்கத்தை அடுத்த இதழில் அறிவோம்.

முத்திரை பதித்த சில வழக்குகள்...

த்மஜா சர்மா Vs ரத்தன்லால் சர்மா என்ற வழக்கில், `தந்தைக்கு இருக்கும் அதே உரிமைதான் தாய்க்கும் இருக்கிறது. அதனால் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்குத் தந்தையைப் போல தாயும் பொறுப்பேற்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஷாலின் Vs ஷிவானி என்ற வழக்கில் தம்பதியின் விவாகரத்துக்குப் பிறகு குழந்தையின் கஸ்டடி யாருக்கு என்பதைத் தீர்மானிக்க டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். பதினைந்து வயது மற்றும் ஒன்பது வயதில் இரு மகன்கள். தன்னுடைய படிப்புக்கு தந்தைதான் உதவ முடியும் என்று மூத்த மகன் தெளிவாகக் கூறியதால், `மூத்த மகனின் கஸ்டடி உரிமை தந்தையிடமும் இளைய மகனின் கஸ்டடி உரிமை தாயிடமும் வழங்கப்படுகிறது’ என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பிலும் சமாதானம் ஆகாமல் உச்ச நீதிமன்றத்தை அணுகுகின்றனர்.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், `ஜம்முவுக்கு வேலை மாற்றலாகி செல்லும் தந்தை ஐஏஎஸ் அதிகாரி, பேராசிரியரும்கூட. அதனால் அவரால் பிள்ளைகளை நல்லவிதமாக வளர்க்கவும், தரமான கல்வியை அளிக்கவும் முடியும். அதோடு, பாசத்துடன் சேர்ந்து வளர்ந்த சகோதரர்களை வெவ்வேறு இடத்துக்கு ஏன் மாற்ற வேண்டும், அவர்கள் சேர்ந்தே வளரட்டும்' என்று மகன்கள் இருவரின் கஸ்டடி உரிமையைத் தந்தையிடம் ஒப்படைத்தது. மகன்களை மாதம் ஒருமுறை சென்று பார்க்கும் விசிட்டேஷன் ரைட்ஸைத் தாய்க்கு வழங்கியது. `ஜம்முவுக்கு மகன்களைப் பார்க்க வரும் தாயின் ரயில் பயணச் செலவைத் தந்தை ஏற்க வேண்டும், அவர் விரும்பினால் தங்குவதற்கு வசதியும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்' என்றும் கூறப்பட்டது.