சட்டம் பெண் கையில்... எளியவர்களுக்கு உதவ இருக்கவே இருக்கிறது இலவச சட்ட உதவி மையம்! - 46

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை இந்த இதழில் விரிவாக விளக்குகிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.
நாட்டில் இயங்கும் முக்கியமான துறைகளில் ஒன்று நீதித்துறை. இதை நாட்டின் முதன்மை அதிகாரம் படைத்த துறை என்று சொல்லலாம். சட்டமும் அதில் உள்ள பிரிவுகளும் சட்டம் படித்தவர்களுக்கே சவாலான ஒன்று. சட்டம் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்கள், பத்திரிகைகளில் வெளிவந்தாலும் அவற்றை முழுவதுமாக உள்வாங்கிக்கொள்வது எளிதாக நடப்பதில்லை. சட்டப் புத்தகத்தை ஒருவர் வாங்கி படிப்பதால் மட்டுமே அவர் முழுமை யான சட்ட அறிவைப் பெற்றுவிட முடியாது.
உதாரணமாக ஒருவர் படித்த சட்டப் புத்தகத்தில் பெண்ணின் திருமண வயது 18 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். வழக்கு ஒன்றிலோ மைனர் பெண்ணுக்கு நடந்த திருமணத்தை நீதிமன்றம் அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாட்டில் வேறு எங்கேனும் மைனர் திருமணங்கள் நிகழ்ந்தால் இந்தத் தீர்ப்பு மேற்கோள் காட்டப்படும். இப்படி நடைமுறைக்கும் சட்டப் புத்தக வரிகளுக்குமிடையே இடைவெளி உள்ளது. அத்தகைய இடைவெளியை நிரப்ப அதற்கு வழக்கறிஞர்கள் தேவை. வழக்கறிஞரை நியமித்துக்கொள்ளாமல் தனக்குத் தானே வாதிடவும் அனுமதி உண்டு. ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியமானது அல்ல. பாமர மக்கள் நீதிமன்றம் எப்படி இருக்கும் என்பதைக்கூட அறிந்திருக்க மாட்டார்களே...

சட்டமும் நீதியும் உயர்தட்டு மக்களுக் கானதுதானா, சாமானியர்கள் சட்டத்தை எளிதாக அணுக முடியாதா என்றெல்லாம் கேள்விகள் எழலாம். நீதி அனைவருக்கும் சமமானது என்பதை இந்த வழக்கு உங்களுக்கு விளங்கவைக்கும்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு பெண்கள் உரிமைகளை நிலைநாட்டும் பல அற்புதமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் இந்த வழக்கு. எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் அந்த வழக்கின் விவரத்தைத் தெரிவிக்க ஆசைப்படும் வழக்கு ஒன்று உண்டென்றால் அது இந்த பின்னியக்காள் வழக்குதான்.
உசிலம்பட்டி அருகேயுள்ள நல்லுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பின்னியக்காள். அவர் தந்தை அந்த கிராமத்தில் அமைந்துள்ள துர்கை அம்மன் கோயிலில் பூசாரியாக இருந்தார். அவருக்குத் துணையாக பின்னியக் காளும் கோயிலில் பூஜை செய்வார். அவருக்கு உடல்நலமில்லாத நாள்களிலும் பின்னியக்காள் பூஜை செய்து வந்துள்ளார். தந்தை காலமான பிறகு பின்னியக்காள் கோயிலில் பூஜை செய்வதற்கு அந்தக் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அனுமதிக்க வில்லை. வாசுதேவன் என்பவரை பூசாரியாக நியமித்தனர்.
இப்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 144 தடை உத்தரவு பற்றி நமக்குத் தெரிகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பே 144 தடை ஊரடங்கு உத்தரவைப் பற்றி நல்லுபட்டி மக்களுக்குத் தெரிய காரணமானவர் பின்னியக்காள். பெண் ஒருவர் கோயிலில் பூசாரியாக இருக்கக் கூடாது என்ற சர்ச்சையில் அந்த வட்டார ஆட்சியர் நல்லுபட்டி கிராமத்தில் 144 தடை உத்தரவை அப்போது பிறப்பித்திருந்தார். படிக்காத பெண்மணியாக இருந்தாலும் பின்னியக்காள் பயப்படவில்லை. உசிலம்பட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே உயர் நீதிமன்றத்தை நாடினார். பெண் தெய்வமாக வீற்றிருக்கும் கோயிலில் பெண் பூஜை செய்யக் கூடாதா என்கிற கேள்வியை நீதிபதி முன்வைத்தார்.
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவரும் வரை பின்னியக்காள்தான் பூசாரியாகச் செயல்படுவார் என்றும், கோயிலில் பூஜை செய்யும்போது அவருக்குப் பாதுகாப்பாக காவல்துறை அதிகாரி உடன் செல்ல வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார் நீதிபதி. நீதி உயிரோடுதான் இருக்கிறது... பட்டிதொட்டியில் வசிப்பவர்களுக்கும் நீதி கிட்டும் என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஓர் உதாரணம்.
உசிலம்பட்டி நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்றது. அவரின் தந்தை உயிரோடு இருந்தபோதே பூஜை செய்துவந்துள்ளார் என்பதன் அடிப்படையில் பின்னியக்காள் துர்கை அம்மன் கோயிலில் பூஜை செய்யலாம் என்கிற தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.
பின்னியக்காள் நீதிமன்றம் சென்று வழக்கு நடத்தும் அளவுக்கு வசதி இல்லாதவராக இருந்திருந்தால் பொதுமக்கள், அரசு அதிகாரிகளின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்திருப்பார் என்பதுதானே பலரின் எண்ணம்...
உண்மையில், பின்னியக்காள் நீதிமன்றத்தை அணுகி வழக்கு நடத்த வசதி இல்லாதவராக இருந்திருந்தாலும், அவருக்கு இலவச சட்ட உதவி மையம் உதவி இருக்கும். அதைப்பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

லீகல் சர்வீஸ் அத்தாரிட்டிஸ் ஆக்ட் 1987
பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள் தங்களுக்கு எதிராக நடந்த அநியாயத்துக்கு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுசெய்ய வாய்ப்பில்லாதவர்களுக்கு துணை நிற்க லீகல் சர்வீஸ் அத்தாரிட்டிஸ் ஆக்ட் என்ற சட்டம் 1987-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. சாதி, மதம், இனம் என எல்லாவற்றையும் கடந்து நீதி அனைவருக்கும் பொதுவானது, எவராக இருந்தாலும் வசதி மற்றும் வாய்ப்பு இல்லாததால் நீதி மறுக்கப்படக் கூடாது என்பதையே இந்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது.
குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 304 மற்றும் இந்திய அரசியலமைப்பு சாசனம் ஷரத்து 39A ஆகிய சட்டங்களும் இலவச சட்ட உதவியை மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதையே தெளிவு படுத்துகின்றன.
இந்தச் சட்டத்தின்படி யாரெல்லாம் இலவச சட்ட உதவியைப் பெறலாம்...
வசதி வாய்ப்பில்லாத ஏழை மக்கள், பெண்கள், குழந்தைகள், தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள், பழங்குடியினர், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், புயல், பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள், வருடத்துக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டுபவர்கள் என இந்தப் பட்டியலுக்குள் வரும் நபர்கள் இலவச சட்ட உதவி மையத்தை அணுகலாம்.
இலவச சட்ட சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளும்போது, அப்போது எந்த விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதோ அதன்படி உங்கள் தேவையை மனுவாக எழுதிக் கொடுக்கலாம். இந்தச் சட்டத்தில் அறிவுறுத்தி உள்ளதைப்போல தேசிய சட்ட சேவைகள் ஆணையம், மாநிலச் சட்ட சேவைகள் ஆணையம், மாவட்டச் சட்ட சேவை மையம், தாலுகா சட்ட சேவை மையம் என ஒவ்வொரு நிலையிலும் இலவச சட்ட சேவை மையங்கள் இயங்குகின்றன. முக்கியமாக நீதிமன்றங்கள் எங்கெல்லாம் செயல்படுகின்றனவோ அந்த வளாகத்தில் இலவச சட்ட உதவி மையமும் அமைந்திருக்கும்.
நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி நிவாரணம் பெற விரும்புபவர்கள் வழக்கறிஞரை நியமித்து வாதாட வேண்டும். வழக்கறிஞரை நியமித்து வாதாட வசதி இல்லாத காரணத்தால் அவர்களுக்கு நியாயம் மறுக்கப்படக் கூடாது. அத்தகையோர் இலவச சட்ட மையத்தை அணுகி மனு கொடுக்க வேண்டும். மனு சரிபார்க்கப்பட்ட பிறகு, உங்கள் வழக்குக்காக ஆஜராக வழக்கறிஞர் ஒருவரை இலவச சட்ட உதவி மையம் நியமித்துக் கொடுக்கும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
இலவச சட்ட உதவி மையத்தின் அதிகாரங்கள் என்னென்ன?
தங்களிடம் மனு கொடுத்தவர்களுக்கு இலவசமாக வழக்கறிஞரை நியமித்துக் கொடுத்தல், இலவச சட்ட ஆலோசனை வழங்குதல், லோக் அதாலத் நடத்துதல் போன்றவை இதன் பணிகளில் முக்கியமானவை.
லோக் அதாலத்
வழக்கு தொடுத்த இரு தரப்பும் சமாதான மாகப் பேசி வழக்கை முடித்துக்கொள்ள விருப்பப்பட்டால் அதற்குச் சட்டப்படி உதவுவதுதான் லோக் அதாலத். இது நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு நீதிமன்றம். நீதிபதிகள் அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் வழக்கு தொடர்ந்தவர் மற்றும் எதிராளி என இருதரப்பும் விசாரிக்கப்பட்டு வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்படும்.
தேசிய, மாநில, மாவட்ட, தாலுகா என ஒவ்வொரு நிலையிலும் லோக் அதாலத் நடைபெறுகிறது. லோக் அதாலத்தின் மூலம் வழங்கப்படும் தீர்ப்புகள் நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு இணையானவையே. இங்கு தீர்வு கண்ட பிறகு மீண்டும் நீதிமன்றத்தை அணுகவேண்டிய அவசியம் இல்லை.
தன் வழக்குக்கு வாதாட அனுபவமிக்க வழக்கறிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு வழக்குக்கான கட்டணம் செலுத்தினால் தனக்காக அக்கறையோடு வாதாடுவார். வழக்கைத் தனக்கு சாதகமாக வெற்றி பெறச் செய்வார். இலவசமாக அமர்த்தப்படும் வழக்கறிஞர் எப்படி இருப்பாரோ என்று அச்சப்படத் தேவை இல்லை. ஏனென்றால், சட்ட உதவி மையத்தின் மூலம் வாதிடும் வழக்கறிஞருக்கான கட்டணத்தை அந்த மையமே செலுத்திவிடும்.
இலவச சட்ட உதவி தினம் ஆண்டுதோறும் நவம்பர் 9 அன்று கொண்டாடப்படுகிறது. சட்ட விழிப்புணர்வு மற்றும் இலவச சட்ட உதவியைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் நாளாக இந்நாள் அறியப்படுகிறது.
கிரிமினல் வழக்குகள், குடும்பநலம் சார்ந்த வழக்குகள், உரிமையியல் வழக்குகள் மற்றும் இந்தச் சட்டத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் பட்டியலில் உள்ள வழக்குகளை நடத்த விரும்புபவர்களுக்குச் சட்ட உதவி வேண்டுமென்றால் இலவச சட்ட உதவி மையத்தில் மனு கொடுக்கலாம்.
`சட்டம் பெண் கையில்' என்ற தொடரின் மூலம் பல்வேறுபட்ட சட்டப்பிரிவுகள், சட்டம் உருவாகக் காரணமான தீர்ப்புகள், நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புடைய சட்டங்கள், பெண்களுக்கு சாதகமாக அவர்கள் உரிமையை நிலைநாட்ட வெளிவந்த அபூர்வ தீர்ப்புகள் எனப் பல்வேறு சட்டங்களை அவள் விகடன் வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி.
(நிறைந்தது)