மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்: சக மனிதர் துயர் துடைப்போம் சட்டத்தின் அன்புக்கரங்களால்! - 45

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

சக மனிதர் துயர் கண்டு பொங்கும் நெஞ்சின் வேதனைகளுக்கும் சட்டத்தின் வழியாகத் தீர்வு காண முடியும். இதற்குக் கைகொடுப்பவைதாம் பொதுநல வழக்குகள். இந்த வழக்குகளை யாரெல்லாம் போடலாம்... எந்த நேரத்தில் என்னென்ன காரணங்களுக்காக வழக்கு தொடுக்க முடியும்... விளக்கம் அளிக்கிறார், வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

பொதுநல வழக்குகளை அவற்றோடு சம்பந்தப்படாதவர் தொடரலாமா?

`எனக்கு ஒரு பிரச்னை. அதைத் தீர்த்து வையுங்கள்' என்று நீதிமன்றத்துக்குச் செல்பவருக்கு, நீதிமன்றத்தை அணுகும் உரிமை இருக்க வேண்டும். இதையே சட்டத்தில் லோகஸ் ஸ்டேண்டி (Locus Standi) எனச் சொல்வார்கள். ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்றால் அதற்கு எந்த வகையிலாவது அவர் நேரடியாக தொடர்புகொண்டிருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது (ரிட் வழக்குகளில் சில இதற்கு விதிவிலக்கு உண்டு).

`என் ஊரில் இயங்கும் சாயப் பட்டறையிலிருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள் அருகிலுள்ள கிராம மக்களின் குடிநீரில் கலக்கிறது. அந்த அசுத்தமான நீரைப் பயன்படுத்தும் மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இதை சரி செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கு உள்ளது. ஆனால், நான் நேரடியாக பாதிக்கப்படவில்லை. இந்தப் பிரச்னைக்கு சட்டப்படியாக வழக்கு தொடர நான் சம்பந்தப்பட்டிருக்க வேண்டுமா' என்கிற குழப்பம் இனி தேவையே இல்லை. இதுபோன்ற சூழல்களில் உங்களுக்குக் கை கொடுப்பவை தான் PIL என்னும் பொதுநல வழக்குகள்.

பொதுநல வழக்கு என்றால் என்ன?

பொதுநலனுக்காக, பாதிப்புக்குள்ளாகும் வேறு யாரோ ஒருவருக்காக யார் வேண்டு மானாலும் பொதுநல வழக்குகளைத் தொடரலாம். உதாரணமாக... மனித உரிமைகள் மீறப்பட்டால், சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப் பட்டால், சாதியின் பெயரால் உரிமைகள் நிராகரிக்கப்பட்டால், கல்வி மறுக்கப்பட்டால், குழந்தைத் தொழிலாளர்கள் நலனுக்காக, சிறைச்சாலையில் கைதிகள் உரிமை மீறப்பட்டால் என பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுத்தர விரும்பும் இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரலாம். ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் நீதிமன்றம் தாமாக முன் வந்தும் பொதுநல வழக்குகளைத் தொடரும்.

சட்டம் பெண் கையில்
சட்டம் பெண் கையில்

எந்தச் சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் பொதுநல வழக்கு தொடரலாம்?

பொதுநல வழக்குகள் பற்றி எந்தச் சட்டப் பிரிவிலும் சொல்லப்படவில்லை. Mumbai Kamgar Sabha v. M/s Abdulbhai Faizullabhai and others 1976 என்ற வழக்கு தான் பொதுநல வழக்குகள் உருவாவதற்கு காரணமாக அமைந்த முதல் வழக்கு.

ஒரு தொழில் நிறுவனம் ஒருகட்டத்தில் பணியாளர்களுக்கு போனஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டது. தங்களுக்கு போனஸ் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை பணியாளர்கள் முன்வைத்தபோது அது நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டது. ஊழியர்கள் இண்டஸ்ட்ரியல் ஆணையத்துக்குச் சென்ற போது ஆணையங்களின் தீர்வும் நிறுவனத்துக்குச் சாதகமாகவே இருந்தது. போனஸ் சட்டத்தில் எந்தப் பக்கத்தில் தேடினாலும் ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பது கட்டாயமில்லை என்பதாகவே உள்ளது. நிறுவனங்கள் பாரம்பர்யமாகவே பணியாளர்களுக்கு போனஸ் கொடுத்து வந்திருக்கின்றன. அதனால் தொடர்ந்து போனஸ் கொடுக்க வேண்டும் என்று அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று சொல்லி பணியாளர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதுதான், பொதுநல வழக்குகள் தொடரும் வாய்ப்பை அனைவருக்கும் நீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுத்தது.

இப்போது சமுதாயத்தில், சட்டக் கூடத்தில் உச்சமாற்றத்தை உண்டாக்க பல பொதுநல வழக்குகள் காரணமாக இருந்திருக்கிறது. அதில் முக்கியமாக விசாகா எதிர் ராஜஸ்தான் மாநில வழக்கைக் குறிப்பிடலாம். பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் உருவாக காரணமானது இந்தப் பொதுநல வழக்குதான். இந்த வழக்கின் விவரங்கள் பற்றி `சட்டம் பெண் கையில்' பகுதியில் ஏற்கெனவே விரிவாகக் கூறியுள்ளோம்.

பொதுநல வழக்கு என்பது நீதித்துறை அளித்த கொடை. இன்றைய சூழலிலோ ஊடகங்களின் வெளிச்சத்துக்காக, எதிர்த்தரப்பை மிரட்டி பணம் பெறுவதற்காக, வேண்டாதவர்கள்மீது பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவதற்காக எனப் பொது நல வழக்குக்கான காரணங்கள் திசை திரும்பிவிட்டன.

இதுபோல பொய்யான வழக்கு எனக் கண்டறியப்பட்டால் அந்த வழக்கைத் தொடர்ந்த நபர் தண்டனைக்குள்ளாக நேரிடும்.

உதாரணமாக...

உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரின் அலுவலக உதவியாளராக இருந்த நபர் ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தார். அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் சுகாதாரமின்மையால் மாணவர்கள் பாதிக்கப் படுகின்றனர் என்று வழக்கு தாக்கல் செய்தார். வழக்கின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அந்தப் பள்ளியின் சூழ்நிலைகளை ஆய்ந்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. இடைப்பட்ட காலத்தில் வழக்கு பதிவு செய்ய காரணமானவர் பள்ளியின் நிர்வாகி மற்றும் அவர்களின் செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளார்.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அளித்த தகவலின்படி இந்தச் செய்தி நீதிமன்றத்தில் பதிவானது, பள்ளி நிர்வாகத்தை அவர் மிரட்டுவதாகவும் கூறப்பட்டது. `நீதிமன்ற ஆணையை நீதிமன்றம்தான் அனுப்பும், நீங்கள் அனுப்பி மிரட்டியது தவறு என்றும், பணம் சம்பாதிக்கின்ற தொழில் இது இல்லை' என்றும் நீதிமன்றம் கடுமையாக அவரை கண்டித்தது. இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் பொதுநல வழக்கு என்பதையே அவர் கையாள முடியாது என்பதையும் தெளிவுப்படுத்தி எச்சரித்தது. மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் பள்ளியின் நிர்வாகச் சூழ்நிலையை ஆராய்ந்தபின் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பொதுநல வழக்குகளில் சில சுவாரஸ்யங்கள்

Shyam Narayan Chouksey vs Union of India - 2016.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான இந்த பொதுநல வழக்கின்படி... திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடுவதற்கு முன்னதாக, திரையில் தேசியக்கொடியைத் திரையிட்டு தேசிய கீதம் ஒலிபரப்ப வேண்டும். அப்போது அனைவரும் எழுந்துநின்று மரியாதை செலுத்த வேண்டும், அந்த நேரத்தில் திரையரங்குக்குள் உள்ளே நுழையும், வெளியேறும் கதவுகளைத் தாளிட்டு வைக்க வேண்டும். தேசிய கீதத்தை சுருக்கி சிறிய பாடலாக ஒலிக்கவிடக் கூடாது. இதுபோன்ற நிபந்தனைகளுடன் தீர்ப்பு வெளியானது.

சட்டம் பெண் கையில்: சக மனிதர் துயர் துடைப்போம் சட்டத்தின் அன்புக்கரங்களால்!  - 45

இது தொடர்பாக கேரளத் திரைப்பட சங்கம் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தது. திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்ப வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசும் இருந்தது. அதனால் இதனுடைய சாதக பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க மத்திய அரசால் குழு ஒன்று நியமிக்கப்படும் என்றும் அதுவரை முன்பு அளித்த உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அரசு கோரிக்கை வைத்தது.

இந்த மனுவின் மீதான உத்தரவு 2018-ல் வெளியானது. நீதிமன்றம் இதற்கு முன்பு வழங்கிய தீர்ப்பினை திருத்தம் செய்தது. அதன்படி திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்ப வேண்டும் என்பது கட்டாயமில்லை என்கிற உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

கொரோனா தொடர்பான பொதுநல வழக்கு

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளவர்கள் தனியார் மருத்துவ மனைகளுக்கும் சிகிச்சைக்கு செல்கின்றனர். அங்கே அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை விசாரித்த நீதிமன்றம் கட்டண விவரங்களைத் தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தர விட்டுள்ளது.

Prashant Tandon & Anr VS Union of India & Ors - 2020

கொரோனா நோய்த்தொற்று உடையவர் களைப் பரிசோதிக்கும் தகுதிவாய்ந்த பரிசோதனைக் கூடங்கள் 53 தாம் உள்ளன. அவற்றை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளும் குறைவாகவே உள்ளன. தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்கும் வசதிகள் போதுமானதாக இல்லை. அதனால் கிராமப்புற, நகர்ப்புற மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்க படுக்கை வசதிகள் செய்துதர வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை முன்னெடுத்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடர்ந்துள்ளார் பிரசாந்த் டண்டூன்.

பொதுநல வழக்குகள் தொடுப்பவர்மீது விழும் புகழ் வெளிச்சத்துக்காக , அநேகமானோர் பொதுநல வழக்குகளைக் கையிலெடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். பொதுநலம் என்பதே இங்கு பெரும்பான்மையான நேரங்களில் சுயம் சார்ந்துதான் முன்னெடுக்கப்படுகிறது. அதனால் நீதிமன்றம் அளித்துள்ள அரிய வாய்ப்பின் அடிப்படைத் தன்மையே வேரறுந்து போகிறது.

பொதுநல வழக்கு என்ற பெயரில் சட்டம் அளித்திருக்கும் அன்பின் கரங்கள் கொண்டு சக மனிதர் துயர் துடைப்போம். அனைவரும் இன்புற்றிருக்கவே இதைப் பயன்படுத்துவோம்.