சட்டம் பெண் கையில்... சாமான்ய மனிதனின் அடிப்படை உரிமையை உறுதி செய்கிறதா ரிட் மனு? - 44

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
இந்திய அரசியலமைப்பு சாசனம் இந்தியர் களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம். சாதி, மொழி, இனம், மதம் போன்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் சட்டத்தின் முன்பு எல்லோரும் சமமானவர்கள். இதை உறுதி செய்ய உறுதுணையாக இருக்கும் ரிட் மனுக்கள் பற்றி விரிவாக விளக்கம் அளிக்கிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.
ரிட் மனு என்பது என்ன?
நீதிமன்றத்திடமிருந்து எழுத்து பூர்வமாக உத்தரவைப் பெறுவதையே ரிட்டன் ஆர்டர் என்கிறோம். இதன் சுருக்கமே `ரிட்' என்றழைக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சாசனம் ஷரத்து 226-ன்படி உயர் நீதிமன்றத்திலும், ஷரத்து 32-ன்படி உச்ச நீதிமன்றத்திலும் ரிட் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம்.

ரிட் மனுக்களை எந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்?
பாதிக்கப்பட்டவர் அல்லது நிவாரணம் எதிர்பார்ப்பவர் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்பது சிவில், குடும்பநலம், சொத்துரிமை ஆகிய இதர வழக்குகளுக்குப் பொருந்தும். ஆனால், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே ரிட் மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.
யார் தாக்கல் செய்யலாம்?
பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றத்தை நாடுவது என்பது மற்ற வழக்குகளில் நிகழ்வது. ஆனால், ரிட் மனுக்களின் சில வகைகளில் உறவுகளுக்காகவோ, வேறு தரப்பினருக்காகவோ நீதிமன்றத்தை அணுகி நியாயம் கேட்கலாம்.
எப்போது, எந்தெந்த சூழ்நிலைகளில் ரிட் மனு தாக்கல் செய்யலாம்... அதற்குத் தகுதியானவர்கள் யார்?
ரிட் மனுக்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம். 1. ரிட் ஹேபியஸ் கார்பஸ் (Habeas corpus), 2. ரிட் மாண்டமஸ் (Mandamus), 3. ரிட் செர்ஷியோரரி (Certiorari), 4. ரிட் புரபிசன் (Prohibition), 5. ரிட் கோவாரண்டோ (Quo-Warranto).
இவற்றைப் பற்றித் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று நினைக்க வேண்டாம். ரிட் மனுக்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களை அனைத்து தரப்பினரும் அறிந்திருப்பது அவசியம். அதிகாரவர்க்கத்தினர் தங்கள் அதிகாரத்தை அவர்களின் சுயநலத்துக் காக உபயோகித்து, பொது மக்களுக்கு இடையூறு உண்டாக்கினால், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மனு செய்து நிவாரணம் பெறும் உரிமையை உறுதிப்படுத்துகிறது ரிட் மனு.

ரிட் ஹேபியஸ் கார்பஸ்
இதையே `ஆட்கொணர்வு மனு' என்கிறோம். சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்ட ஒருவரை அல்லது காணாமல் போன ஒருவரை நீதிமன்றத்தின் முன்பு கொண்டுவர (You may have the body) தாக்கல் செய்யும் மனு `ரிட் ஹேபியஸ் கார்பஸ்' எனப்படுகிறது. சிறைக்கைதிகள், பெண்கள், குழந்தைகள், பெற்றோர் என இதன் மூலம் பயனடையும் பயனாளிகளின் பட்டியல் நீளமானது.
எந்தத் தவறும் செய்யாத ஒருவரை, காவல்துறையினர் அத்துமீறி கைது செய்திருந்தால், கைது செய்யப்பட்டவரின் நிலையை அறிந்துகொள்ள அல்லது சட்ட விரோதமான கைது நடவடிக்கை தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றமற்ற வரை விடுவிக்க கைதானவரின் உறவுகள் அல்லது அவரைச் சார்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யலாம்.
காதல் திருமணங்கள் சகஜமாகி வரும் காலத்தில் பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக விரும்பியவரைத் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருக்கும் தன் மகனை அல்லது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று பெற்றோர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வார்கள்.
சில பெற்றோர் தங்களது விருப்பத்துக்கு மாறாகத் திருமணம் செய்துகொண்ட மகன் அல்லது மகளை அவர்களின் வாழ்க்கைத் துணையிடமிருந்து பிரித்து அழைத்து வந்து வீட்டுக் காவலில் வைத்திருப்பார்கள். `நான் சட்டப்படி திருமணம் செய்துகொண்டேன்... வீட்டுக்காவலில் வைத்திருக்கும் என் மனைவியை/கணவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' என்று பாதிப்புக் குள்ளான கணவனோ, மனைவியோ உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம்.

சிறைக்கைதிகள், பெண்கள், குழந்தைகள், பெற்றோர் என ஹேபியஸ் கார்பஸ் ரிட் மனு மூலம் பயனடையும் பயனாளிகளின் பட்டியல் நீளமானது.
இந்த வழக்குக்குத் தொடர்புடைய காவல் துறைக்கு உத்தரவிட்டு சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிடும்.
மேஜர் இருவர் திருமணம் செய்துகொண்ட விவகாரத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும்போது, அவற்றை விசாரித்து நியாயமான காரணம் இருந்தால் மட்டும் ஆட்கொணர்வு மனு உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும், சட்டத்துக்குப் புறம்பான, போதிய காரணமற்ற மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்கப்படுவதும் உண்டு.
கணவனும் மனைவியும் பிரிந்து வாழும்போது குழந்தையின் கஸ்டடியை வைத்துக்கொள்ள விரும்பும் தரப்பு, இன்னொரு தரப்புக்குத் தெரியாமல், தாங்கள் வசிக்கும் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவர். சிலர் வெளிநாட்டுக்கே குழந்தையை அழைத்துச் சென்றுவிடுவர். குழந்தையைப் பிரியும் இன்னொரு தரப்பு கணவனோ, மனைவியோ தங்களிடமிருந்து மறைத்து வளர்க்கப்படும் குழந்தையை மீட்டுக்கொடுக்க நீதிமன்றத்தில் வேண்டும்போது அல்லது தன் பிள்ளை எங்கு இருக்கிறான் என்பதை அறிய விரும்பும் பெற்றோரில் ஒருவர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கும்போது, அவர்களது கோரிக்கை நியாயமாக இருக்கும்பட்சத்தில் நீதிமன்றம் அதற்கு உத்தரவிடும்.
ரிட் மாண்டமஸ்
அரசாங்கம், அரசு ஊழியர்கள், கீழமை நீதிமன்றங்கள், ஆணையங்கள், கார்ப்பரேஷன் ஆகியோர் கடமையைச் செய்ய மறுத்தால் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் ரிட் மாண்டமஸ் மனு தாக்கல் செய்யலாம்.
கடமையைச் செய்யத் தவறிய அமைப்புக்கு கடமையைச் செய்யும்படி பிறப்பிக்கப்படும் உத்தரவுதான் இது. அரசாங்கம், அரசு ஊழியர்கள், கீழமை நீதிமன்றங்கள், ஆணையங்கள் ஆகியவை அவற்றின் கடமையை செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் உத்தரவிடும். இதற்கு ரிட் மாண்டமஸ் என்று பெயர்.
ரிட் செர்ஷியோரி
கீழமை நீதிமன்றங்கள், ஆணையங்கள் ஆகியோர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கும். கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விசாரணைகள் முடிந்த பிறகு நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பானது நியாயமற்றது, சட்டத்துக்குப் புறம்பானது என்று கருதினாலோ... உண்மைக்குப் புறம்பாக அல்லது இயற்கைக்கு மாறாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் என்றாலோ கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய உத்தரவிடும்படி மனு கொடுக்கலாம். இதுவே ரிட் செர்ஷியோரி ஆகும்.
ரிட் புரபிசன்
கீழமை நீதிமன்றம் அல்லது ஆணையங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது நீதிமன்றம் அல்லது தீர்ப்பை வழங்கும் அதிகாரம் படைத்த அமைப்பு, தனக்கு எதிர்மறையான தீர்ப்பைத்தான் கொடுப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்தால் கீழமை நீதிமன்றம் தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்பே, அதைத் தடை செய்ய உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தில் பதிவாகும் மனுவே ரிட் புரபிசன்.
மனு செய்தவரின் தரப்பை அவரின் ஆவணங்களை விசாரித்து உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பிக்கும். இப்படி, கீழமை நீதிமன்றங்கள் வழங்கவிருக்கும் உத்தரவுக்கு எதிராகப் பிறப்பிக்கும் ஆணையே ரிட் புரபிசன்
ரிட் கோவாரண்டோ
நகராட்சி, மாநகராட்சி, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை போன்ற வற்றில் அரசாங்கப் பொறுப்பில் அமர்ந்திருக்கும் தொடக்கநிலை ஊழியர் முதல் உச்ச பதவியில் இருக்கும் உயரதிகாரி வரை அவர்கள் எத்தகைய உச்ச பதவியை வகிப்பவர்களாக இருந்தாலும், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அவர் அந்தப் பதவியை வகிக்கிறார் என்று கேள்வி கேட்கும் உரிமை மற்றவர்களுக்கு உண்டு. இது ரிட் கோவாரண்டோ எனப்படுகிறது.
ரிட் மனுக்களில் சில...
ரிட் மனுக்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் போலியான காரணங்களுக்காக ரிட் தாக்கல் செய்யப்பட்டது என்பது அறியப்பட்டால் அந்த மனுக்களை அபராதம் விதித்து, தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை வழக்கின் தீர்ப்பொன்றில் குறிப்பிட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்கிற சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தபோது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.
லாக் டெளன் காலகட்டத்தில், கொரோனா வைரஸ் நோய் த்தொற்றின் காரணமாகத் தமிழகத்தில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. சில கட்டுப்பாடுகளுடன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, மதுக்கடைகளைத் திறப்பதை அனுமதிக்கக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களால் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ரிட் மனு மீது உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால்தான் திறக்கப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் அடைக்கப்பட்டன.
தனக்கோ, சக மனிதருக்கோ சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்க ரிட் மனுக்கள் கரம் கொடுக்கும்!