மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்... மனித உரிமை ஆணையம்... தனிமனித உரிமைக்கான பாதுகாப்பு வளையம்

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில்

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

“கொரோனா வைரஸ் தாக்கத்தின் நெருக்கடியில் உலக மக்கள் முடக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்தியாவிலும் லாக் டெளன் நீட்டிக்கப்பட்டே வருகிறது.

இந்த லாக் டெளன் காலகட்டத்தில் எங்கும் எதிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் லாக் டெளன் விதிமுறைகளைக் காற்றில் பறக்க விட்டு வெளியில் சுற்றுகின்றனர். அப்படி அத்துமீறுபவர்களைக் காவல்துறையினர் பிரம்பால் அடித்து தண்டிக்கின்றனர்; நூதன தண்டனைகள் வழங்குகின்றனர். சட்டம் ஒழுங்கை மீறினார்கள் என்பதற்காக மக்களை வரம்புமீறி தண்டிப்பது, அடிப்பது, கேலிக்கு உள்ளாக்குவது போன்றவை நெருடலை ஏற்படுத்தாமல் இல்லை.

சட்டம் பெண் கையில்... மனித உரிமை ஆணையம்... தனிமனித உரிமைக்கான பாதுகாப்பு வளையம்

ஆனால், மக்களின் உயிரைக் காப்பதற்காகத்தான் காவலர்கள் தண்டிக்கின்றனர் என்பதால், யாரும் இதைப் பெரிதுபடுத்தவில்லை. உண்மையில் மனித உரிமைகள் மீறப்படும் இதுபோன்ற சூழல்களில் மனிதர்களுக்குப் பாதுகாப்புக் கவசமாக உதவுவதே மனித உரிமை பாதுகாப்புச் சட்டம்.

அரசுக்கு அதிகாரம் இருப்பதால் யாரை வேண்டுமானாலும் தண்டிக்கலாமா? இதுபோன்ற செயல்களைக் கேள்வி கேட்க யாரும் இல்லையா? இக்கேள்விகளுக்கு மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் 1993 பதிலாக அமையும் என்கிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

மனித உரிமை என்பது...

இனம், சாதி, மதம், மொழி ஆகியவற்றைக் கடந்து மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தனிப்பட்ட சுதந்திரத்துடன் மரியாதையாக வாழ்வது இயற்கையாக அமைத்துக்கொடுத்த உரிமை. ஒரு மனிதனுக்கு எதிராக நிகழும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் காவல்துறை, நீதித்துறை ஆகியவை செயல்படுகின்றன. இவர்கள் மனித உரிமையை மீறினால் எங்கே முறையிடுவது?

அரசு, அரசுத்துறை சேர்ந்த அலுவலர்கள், செல்வாக்குகொண்ட தனிமனிதர்கள் அவர்களின் அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தி சகமனிதர் களைத் துன்பத்துக்கு ஆளாக்கினால், அத்துமீறி அவர்களை அடக்கி ஒடுக்க நினைப்பவர்களின் அதிகார துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்தவே மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

பாதுகாப்புக் கவசமாக இருக்க வேண்டியவர்களே அத்து மீறும்போது, அவர்களிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் உதவும். இச்சட்டம் முதன்முதலாக 1993-ல் கொண்டுவரப்பட்டது. இதில் 2019-ம் ஆண்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

சட்டம் பெண் கையில்... மனித உரிமை ஆணையம்... தனிமனித உரிமைக்கான பாதுகாப்பு வளையம்

மனித உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், மனித உரிமை நீதிமன்றங்கள் ஆகியவை அமைப்பதைப் பற்றி இந்தச் சட்டப்பிரிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையத்தில் தலைவர் பதவியை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்லது நீதிபதி வகிப்பார். மேலும், மனித உரிமை தொடர்பாக அனுபவம் வாய்ந்த மூன்று நபர்கள் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பர். அதில் ஒருவர் பெண் உறுப்பினர் என்பது சிறப்பு.

மாநில மனித உரிமை ஆணையத்தில் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்லது நீதிபதி ஒருவர் தலைவராகப் பொறுப்பு வகிப்பார். இவர்களின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் அல்லது பதவியில் இருப்பவர்கள் எழுபது வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.

மனித உரிமை ஆணையங் களின் செயல்பாடு

தேசிய அளவிலும், மாநில அளவி லும் மனித உரிமை ஆணையங்கள் அமைக்கப் படுகின்றன.

  • சமூகத்தில் மனித உரிமைகள் மீறப்படுவது இந்த ஆணையத்துக்குத் தெரியவந்தால் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றாலும்கூட, தாமாக முன்வந்து புகாரை எடுத்துக்கொண்டு விசாரிக்கலாம்.

  • மனித உரிமை ஆணையத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது இதன் கடமை. விளம்பரங்கள், ஊடகங்கள், கருத்தரங்குகள் ஆகிய தளங்களை இதற்குப் பயன்படுத்தலாம்.

  • மனித உரிமை ஆணையமானது மனித உரிமைப் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் அரசு சாராத மனித உரிமை அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றை ஊக்கப்படுத்த வேண்டும்.

  • புகார்களை விசாரிக்கும்போது சிவில் நீதிமன்றத்துக்குரிய அனைத்து அதிகாரங்களும் இந்த ஆணையங்களுக்கு உண்டு.

  • மனித உரிமை மீறலுக்காகப் பதிவாகும் புகார்கள்மீது நடவடிக்கை எடுக்க, சம்பந்தப் பட்டவர்களை விசாரிக்க, ஆவணங்கள் ஆகியவற்றைச் சேகரிக்கும் அதிகாரம் மனித உரிமை ஆணையத்துக்கு உண்டு.

  • விசாரணைக்காக அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் ஆவணங்களைக் கேட்டு வாங்குவதற்கான அதிகாரம் இவர்களுக்கு உண்டு.

  • குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், அத்துமீறல்களில் இருந்து அவர்களைப் பாதுகாத்தல், பழங் குடியினர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரைப் பாதுகாக்க, குழந்தைகளின் நலனுக்காகவும் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் உதவுகிறது.

சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10-ம் தேதி கொண்டாடப்படுகிறது சமீபத்தில் நடந்த மனித உரிமை ஆணைய விழாவில் மனித உரிமை மீறல் என்பது காவல்துறையினரின் அத்துமீறல்களே என்று நம்பப்படுவது உண்மைதான் என்பதும், மனித உரிமை ஆணையத்துக்கு வரும் புகார்களில் 95 சதவிகித புகார்கள் காவல்துறைக்கு எதிராக வருபவைதாம் என்பதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஒரு நாளைக்குக் குறைந்தது 130 புகார்கள் பதிவாவதாகவும் அந்த விழாவில் தெரிவிக்கப்பட்டது.

கைதிகளுக்குச் சிறையில் நடக்கும் கொடுமைகளும் அவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களும் தெரியவந்தால் யாரும் புகார் அளிக்கவில்லை என்றாலும், அவர்களுக்கு எதிராக இந்த ஆணையங்கள் தாமாக முன்வந்து புகாரை எடுத்துக்கொண்டு விசாரணை மேற்கொள்ளும்.

மனித உரிமை ஆணையத்தைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. புகார்களை விசாரிக்க போதிய அலுவலர்களும் இல்லை என்று குறைபட்டுக்கொள்ளும் இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் பொது மக்களுக்கு இந்த ஆணையத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர்.

இப்போது ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி மாநில மனித உரிமை ஆணையத்தில் உள்ளது.

அதிகாரம் கையில் இருக்கிறது என்ற தைரியத்தில் அரங்கேறும் உரிமை மீறல்களால் சாதாரண மனிதர்கள் யாரும் வஞ்சிக்கப்படக் கூடாது. அரசாங்கத்தில் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், எவ்வளவு பலம் கொண்டவராக இருந்தாலும், எல்லை மீறும் அவர்களையும் கேள்வி கேட்கும் அதிகாரம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை மக்கள் மனத்தில் பதிய வைக்க வேண்டும்.

இதற்கென தனிச்சட்டம் அமலில் இருப்பதையும், மனித உரிமை ஆணையத்தின் முக்கியத்துவத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தச் சட்டப்பிரிவு 30-ன்படி மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். மனித உரிமை ஆணையங்களுக்குச் செல்ல ஆர்வமில்லாதவர்கள் அவர்களின் உரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் அரசுத் துறையினரின்மீது உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்கின்றனர்.

மனித உரிமை ஆணையம் பற்றிய விழிப்புணர்வு, மனித உரிமை நீதிமன்றங்கள், புகார் கொடுப்பவருக்கு நம்பிக்கையாக மனுவை விசாரித்து விரைவாக தீர்வளித்தல், எளியோரும் தொடர்புகொள்ளும் வகையில் மாவட்டந்தோறும் ஆணையங்கள் என மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி எளிமைப்படுத்தினால் இந்தச் சட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.