மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்: ஆதார் ஏன் அவசியம்? சட்டம் சொல்லும் உண்மைகள்! - 38

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

ஒருவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு அல்லது இன்னாரென்று நிரூபிப்பதற்கு அவசியமான ஆவணங்களே அடையாள அட்டைகள். இவற்றில் ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, பத்தாம் வகுப்புச் சான்றிதழ் ஆகியவை முதன்மையான ஆவணங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அனைத்துத் தரப்பினராலும் அங்கீகரிக்கப்படும் ஒன்றாக இந்த ஆவணங்கள் இருக்கின்றன. இந்தச் சூழலில் குடிமக்களின் அடையாள அட்டையாக `ஆதார்' அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் ஆதார் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமும் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய சட்ட நுணுக்கங்கள் குறித்து விளக்கமளிக்கிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

பள்ளியில் சேர, எரிவாயு இணைப்புப் பெற, வங்கிக்கணக்கு தொடங்க, பழைய கணக்கின் சேவையைத் தொடர, பத்திரப் பதிவு, வரி விதிப்பு என எல்லாவற்றுக்கும் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தியுள் ளது. ஆதார் `தனி மனிதனின் அடையாளம்' என வலியுறுத்தப் பட்டது. ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே அரசு சலுகைகளைப் பெற முடியும் என்கிற சூழல் ஆதாரின் அவசியத்தை அனைத்து மக்களுக்கும் உணர்த்துகிறது.

வைதேகி பாலாஜி
வைதேகி பாலாஜி

பான்கார்டு வாங்கவும் ஆதார் தேவைப் பட்டது. பான்கார்டுடன் ஆதார் இணைக்கப் பட்டால் வரவு செலவு கணக்குகள் வெளிச்சத்துக்கு வரும். எந்த வங்கியில் கடன் வாங்கியிருந்தாலும், அந்த விவரங்கள் ஆதார் கார்டின் மூலம் தெரிந்துவிடும். இதனால் ஆதார் எண்ணை பான்கார்டு மற்றும் வங்கிக் கணக்கோடு இணைப்பதில் பலர் ஆர்வம் காட்டுவதில்லை.

ஆதார் அட்டை பெறுபவரின் கைரேகை, விழித்திரை ஆகிய தனி மனித அடையாளங்கள் மற்றும் முகவரி போன்றவை பயோமெட்ரிக் முறையில் சேமிக்கப்பட்டன. புகைப்படம், முகவரி, ஒவ்வொருவரையும் தனியாக அடையாளப்படுத்த பன்னிரண்டு இலக்க எண்கள் போன்ற விவரங்களுடன் இந்திய குடிமக்களுக்கு ஆதார் வழங்கப்பட்டது. ஆதார் அட்டை வழங்குவதற்காக தனிநபர் களிடமிருந்து சேமிக்கப்பட்ட விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்கிற உறுதியும் அரசால் அளிக்கப்பட்டது. அரசு மட்டுமல்ல... தனியார் நிறுவனங்களும் `KYC' எனும் சுய விவரங்களுக்காக ஆதார் அட்டையைக் கேட்டன. தனியார் மொபைல் நிறுவனம் தனது கட்டணமில்லாத செல்போன் சேவையை அறிமுகம் செய்தபோது, ஆதார் எண் கொடுத்தால்தான் தனது சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்தது. இலவச சேவையாக இருந்தாலும்கூட, அதன் மூலம் தங்கள் தனிமனித அடையாளத்தை அவர்கள் அறிந்துகொள்வார்களே எனச் சிலர் அதன் பயன்பாட்டைத் தவிர்த்தனர்.

`அரசு பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவாகி பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பப்பட்ட தனிமனித விவரங்கள் வலைதளங்களில் உலா வருகின்றன' என்ற செய்தி மக்களை அதிர்ச்சியடையச் செய்தது. மக்கள் ஆதாரை எதிர்க்கும் நிலை ஏற்பட்டது.

`ஆதார் எங்களுக்குத் தேவையில்லை' என்பவர்களின் எதிர்ப்பு வலுவடைந்த போதும், ஆதார் விவரத்தைக் கொடுத்தால்தான் சலுகை பெற முடியும் என்று தனியார் நிறுவனங்கள் ஆசைகாட்டியபோதும், `சுயவிவரங்கள் களவாடப்படலாம்' என்ற அச்சத்தில் பலர் சலுகைகளைத் தவிர்க்க நேர்ந்தது. `இந்தியர்களின் சுயவிவரங்கள் உலக மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன' என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் ஆதாருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். `ஆதார் இந்திய அரசியல் சாசனம் 21-க்கு எதிரானது' என்று ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ்.புட்டசாமி தொடர்ந்த வழக்கு இவற்றில் முக்கியமானது.

சட்டம் பெண் கையில்
சட்டம் பெண் கையில்

`ஆதார் சட்டமானது தனிமனித உரிமை யைப் பறிப்பது. இந்திய அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது. `ஆதார் கட்டாயம்' என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட வேண்டும். தனிமனிதரின் அந்தரங்கத்துக்குப் பாதுகாப் பில்லை. வளர்ச்சி பெற்ற மற்ற நாடுகளில்கூட இது போன்ற கட்டாயத் திட்டம் இல்லை. இப்படியொரு திட்டம் இந்தியாவில் கொண்டு வருவதற்கான அவசியம்தான் என்ன?' - இப்படி ஆதார் விவாதக் கருத்தாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியது.

ஆதார் என்றால் என்ன?

ஆதார் சட்டம் 2016 வழக்கின் தீர்ப்பு, தீர்ப்புக்குப் பின்னர் ஆதார் கட்டாயமா, எங்கெல்லாம் ஆதார் எண்ணைக் கொடுக்கத் தேவையில்லை என்பதையெல்லாம் நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆதாரின் அடிப்படை

ஆதார் என்பதன் பொருள் `அடிப்படை' அல்லது `அஸ்திவாரம்' என்பதே. 2009-ம் ஆண்டில் ஆதார் அறிமுகம் செய்யப்பட்டது. 

யூஐடிஏஐ எனும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் / Unique Identification Authority of India (UIDAI) ஆதார் சட்டம் 2016-ன் கீழ் கட்டமைக்கப்பட்டது.  இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் பன்னிரண்டு இலக்க எண்கள் கொண்ட அடையாள அட்டையே `ஆதார்' எனப்படுகிறது. ஆதார் தொடர்பான அனைத்தும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் கீழ் நடைமுறைக்கு வருகிறது. 

2016-ல் ஆதார் சட்டம் இயற்றப்பட்டபிறகும், இப்படியொரு சட்டம் இருப்பது பலருக்குத் தெரியவில்லை. இச்சட்டம் பற்றி அறிந்துவைத்திருக்க வேண்டிய அவசியமும் பலருக்கு ஏற்படவில்லை. ஆதார் அட்டைக்கு எதிர்ப்பு கிளம்பிய பிறகோ `ஆதார் சட்டம் 2016' முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது.

அதன் பிறகு, வாழ்க்கையின் அன்றாடச் செயல்பாடுகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அதிகரித்தது. பள்ளியில் படிக்கும் சிறுவர் சிறுமியர் ஆதார் அட்டை பெறுவதற்காக அரசின் இணையதள சேவை மையங்களில் வரிசையில் நின்றனர். நீட் தேர்வு எழுதுவதற்கும் ஆதார் அவசியமானது. தனியார் நிறுவனங் களிலும் அடையாள ஆவணமாக ஆதார் கேட்கப்பட்டது.

`தனிமனித அந்தரங்கத்துக்குப் பாதுகாப்பில்லை, ஆதார் இல்லாதபோதும் மக்கள் வாழ்ந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆதார் அட்டையை வைத்திருப்பதால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடும்?’ - இப்படி சாதாரண மக்களில் தொடங்கி அலுவலகப் பணியாளர் வரை பலரும் கொந்தளித்தனர். ஆதாருக்கு எதிராக முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகளைக்கொண்ட அரசியலமைப்பு சாசன அமர்வு இந்த வழக்குகளை விசாரித்து 2018-ல் இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆதார் வழக்குகளை ஒன்றிணைத்து வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பு என்ன சொல்கிறது?  

அடுத்த இதழில்...