சட்டம் பெண் கையில்... 144, கர்ஃபியூ, லாக் டெளன், பேரிடர் மேலாண்மை... அவசியம் அறிய வேண்டிய விஷயங்கள்

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
இன்று நம் எல்லோரையும் தனிமைப்படுத்திக் கட்டிப்போட்டு வைத்திருப்பது செக்ஷன் 144. கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மைக் காப்பதற்கான சுய தனிமைப்படுத்துதலை நடைமுறைப்படுத்த அரசு எடுத்திருக்கும் ஒற்றை ஆயுதப் பிரிவு இது. இந்தச் சூழலில், செக்ஷன் 144, கர்ஃபியூ, லாக் டெளன், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியவை குறித்து விரிவாக விளக்கம் அளிக்கிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.
குற்றவியல் நடைமுறைச்சட்டம் 1973 பிரிவு 144 என்ன சொல்கிறது?
144 தடை உத்தரவு பற்றி தமிழ் சினிமாக்கள் வழியாக நாம் ஏற்கெனவே அறிவோம். இப்போது தலைமுறை வித்தியாசமின்றி அனைத்து வயதினரையும் 144 என்ற வளையத்துக்குள் கட்டிப் போட்டுள்ளது கொரோனா வைரஸ்.

மனிதர்களின் சுதந்திரத்தை உறுதிப் படுத்தும் இந்திய அரசியலமைப்பு சாசனம் 19(1)ன்படி சுதந்திரமான பேச்சுரிமை மற்றும் அமைதியான முறையில் கூட்டமாகக் கூடும் உரிமை, இந்திய எல்லைக்குள் சுதந்திரமாக உலவும் உரிமை உறுதிப்படுத்தப்படுகிறது. இப்போதோ, இந்திய அளவில் நிலவும் லாக் டெளன் விதிகளின்படி, `பொது இடத்தில் கூடாதே', `தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாதே' என்று சட்டம் போட்டு, தனி மனித சுதந்திரம் பறிக்கப்படுவது நியாயமா என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த விதிகளை மீறுவோரிடம் காவல்துறையினர் சாத்விகமாகவும், ஒரு சில இடங்களில் கடினமாகவும் நடந்துகொள்கின்றனர். விதிகளை மீறுவோரைக் காவலர்கள் அடிப்பது மனிதாபிமானமற்ற செயல் என மக்கள் கொந்தளிக்கின்றனர்.
ஏன் 144?
மனித உயிர்களுக்கு ஆபத்து, அவர்களது உடல்நலத்துக்குக் கேடு, கலவரம் போன்ற காரணங்களுக்காக மக்களைக் காக்கும் பொருட்டு மாவட்ட நீதிபதி அல்லது இதன் பொருட்டு அரசின் சார்பில் உத்தரவைப் பிறப்பிக்க தகுதிவாய்ந்த அலுவலர்கள் 144 என்ற ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக் கின்றனர். பொதுவாக ஊரடங்கு உத்தரவானது இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கப்படக் கூடாது. எனினும், மனிதர்களின் உடல்நலத்துக்கும் உயிருக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து குறையாதபட்சத்தில் ஊரடங்கு உத்தரவை மீண்டும் நீட்டிக்கலாம். மக்கள் பொதுவெளியில் நடமாடினால் பேராபத்து உண்டாகும் என்கிற நிலையில் ஊரடங்கை நீட்டிக்க நீதிபதிக்கு அல்லது அரசின் உத்தரவைச் செயல்படுத்தும் தகுதிவாய்ந்த நீதிபதிக்கு அதிகாரம் உண்டு. அப்படி, மீண்டும் அறிவிக்கப்படும் ஊரடங்கானது ஆறு மாத காலத்துக்கு மேல் நீடிக்கக் கூடாது.

பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்... நான்கு அல்லது ஐந்துக்கு மேற்பட்ட நபர்கள் ஓரிடத்தில் கூடக்கூடாது... 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்ட பின்னர் அந்தப் பகுதிக்கு உட்பட்டவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டும்... இவற்றை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இதற்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-ன்படி ஒரு மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அளிக்க வாய்ப்புள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக லாக் டெளன் அறிவிக்கப்பட்ட பின்னர் சட்டத்துக்குக் கட்டுப்படாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்தவர்கள்மீது சட்டம் பாய்ந்துள்ளது. இதற்காக வடமாநிலங்களில் சில காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் எண்ணிக்கை பதினேழாயிரத்தை எட்ட உள்ளது.
அண்மையில் டாக்டர் விக்ரம் சிங் என்பவரால் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அவர் கோவிட் வைரஸ் விவகாரத்தில் லாக் டெளன் கால கட்டத்தில் விதிகளை மீறியவர்கள்மீது பதிவான எஃப்.ஐ.ஆர்.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின்படி சுதந்திரமான பேச்சுரிமை மற்றும் அமைதியான முறையில் கூட்டமாகக் கூடும் உரிமை, இந்திய எல்லைக்குள் சுதந்திரமாக உலவும் உரிமை உறுதிப்படுத்தப்படுகிறது.
பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த அடிப்படையில், இந்தியாவைச் சேர்ந்த மற்ற மாநிலங்களில் உள்ள காவல்நிலையங்களில் லாக் டெளன் விவகாரத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கைகளும் ரத்து செய்யப்படுமா... உதாசீனமாக, விளையாட்டுத்தனமாக சட்டச்சிக்கலில் மாட்டிக்கொண்டவர்கள் விடுவிக்கப் படுவார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
லாக் டெளன்
கொரோனா வைரஸ் லாக் டெளனை அனுபவபூர்வமாக உணர வைத்துள்ளது. இதிலும் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மருந்து, பால், காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில அலுவலகங்கள் இயங்கும். எந்த மாதிரியான சலுகைகளை வழங்குவது என்பதை அந்தந்த சூழ்நிலைகளும் அதிகாரிகளும் எடுக்கும் முடிவுகளே தீர்மானிக்கின்றன.
லாக் டெளன் காலத்தில் வருமான இழப்பு, பொருளாதாரச் சிக்கல், மன உளைச்சல், வாழ்வாதாரத்துக்கு வழியின்மை எனப் பலவிதமான சிக்கல்களை மக்கள் சந்திக்கின்றனர். அதோடு, விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததால் காவல் துறையினரின் கடும் நடவடிக்கைகளுக்கும் ஆளாகின்றனர். இதன் அடுத்த கட்டமாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 188, பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 51 முதல் 60 வரை உள்ள சட்டப் பிரிவுகளின் கீழும் தண்டிக்கப்படுவார்கள். லாக் டெளன் காலத்தில் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி இந்தக் கடினமான காலகட்டத்தைக் கடந்து செல்ல வேண்டும். லாக் டெளனுக்குப் பின்னர் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப என்னவெல்லாம் செய்யலாம் என்று சிந்தித்து அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கலாம். விதிமுறைகளை மீறுவதால் காவல் நிலையம், நீதிமன்றம் என்று அலைந்து அவற்றிலிருந்து மீண்டு வருவதற்குள் நேரம், பணம், நிம்மதி எல்லாமே விரயமாகிவிடும்.
கர்ஃபியூ
கர்ஃபியூ தடை விதிக்கப்பட்டால் அவசர தேவை தவிர, காய்கறி, மளிகை, பால் போன்ற அத்தியாவசிய தேவைக்குக்கூட வீட்டைவிட்டு வெளியே வர இயலாது. பொதுவாக அபாயகரமான சூழ்நிலைகளில் 144 கர்ஃபியூ அமல்படுத்தப்படும். கர்ஃபியூவின் போது எந்தவித சலுகையும் கிடையாது. சிறை போல அடைபட்டுதான் கிடக்க வேண்டும். கர்ஃபியூ நீக்கப்பட்ட பின்னரே வீட்டை விட்டு வெளியே வரமுடியும்.
இன்றைய லாக் டெளன் காலம் நமக்கு நிறையவே கற்றுக்கொடுத்துள்ளது. சேமிப்பு, சிக்கனம், கூடி வாழ்வதில் உள்ள மகிழ்ச்சி, நெருக்கடியைச் சமாளிப்பது போன்ற நல்ல விஷயங்களுடன் பேரிடர் மேலாண்மை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
அது பற்றி அடுத்த இதழில்...