
வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
லாக் டெளன் காலம் நமக்கு நிறையவே கற்றுக்கொடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக... இன்று நம் எல்லோரையும் தனிமைப்படுத்திக் கட்டிப்போட்டு வைத்திருப்பது செக்ஷன் 144.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மைக் காப்பதற்கான சுய தனிமைப்படுத்துதலை நடைமுறைப்படுத்த அரசு எடுத்திருக்கும் ஒற்றை ஆயுதம் இது. இந்தச் சூழலில் செக்ஷன் 144, கர்ஃபியூ, லாக் டெளன் குறித்து சென்ற இதழில் விளக்கம் அளித்த வழக்கறிஞர் வைதேகி பாலாஜி, இந்த இதழில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 குறித்து விரிவாகச் சொல்கிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை... சுனாமி எனும் பேரதிர்ச்சி கடலிலிருந்து கிளம்பிய பிறகு தான் இயற்கை நம்மைத் தண்டிக்கும் என்கிற திகில் மக்களிடையே துளிர்த்தது. இப்படி ஓர் இடர் இன்னொரு முறை வந்தால் தாங்குவோமா என்ற பயத்தில் இதற்குத் தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கம் எல்லோருக்குமே உண்டு. எளியோர், வசதி படைத்தோர் எனப் பாரபட்சம் இல்லாமல் அடித்து நொறுக்கி, உயிரற்ற உடலைக் கரையோரம் சேர்த்த சுனாமிக்குப் பிறகு நீர், நிலம், காற்று எனக் கூட்டணி சேர்ந்து ஓக்கி புயல், கஜா புயல், லைலா புயல், சென்னையை மூழ்கடித்த பெரு வெள்ளம் என சதுரங்கப் பலகையில் மக்களை வைத்து விளையாடித் தீர்த்தது இயற்கை. அது கையில் எடுத்திருக்கும் புதிய டிரெண்ட் கொரோனா வைரஸ். இதுபோன்று இன்னும் எத்தனை வைரஸ் புயல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ?
இப்படி, இயற்கை உண்டாக்கும் பேரிடர் காலங்களில் பாதுகாக்கும் முன்னேற்பாடுகளை எடுக்கும் பொருட்டு பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி தேசியப் பேரிடர் மற்றும் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அண்மையில் லாக் டெளன் கட்டுப்பாடு களை மீறுபவர்கள் மீதும் இந்தச் சட்டம் பாயும் என்று அதிகாரிகள் அறிவிப்பு விடுத்துள்ளனர்.
மக்களை பீதியடைய வைக்கும் பொய்யான தகவல்களைப் பரப்புபவர்கள் அபராதத்துடன் ஓர் ஆண்டு சிறைத் தண்டனைக்கு உள்ளாவார்கள்.
தவறான தகவல்களை பரப்புபவர்கள், லாக் டெளன் விதிமுறைகளை மதிக்காதவர்கள் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளாவார்கள் என அலுவலர்கள் எச்சரிக்கின்றனர். `குறும்புத்தனமாகப் பொது வெளிகளில் சுற்றி, நட்புகளோடு விளையாடி, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் கறி விருந்து சாப்பிட்டு நாள்களைக் கழிப்போம்; காவல்துறையினருக்குத் தெரியவா போகிறது' என இளைஞர்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம். இது இரண்டு ஆண்டுக் காலம் வரை சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கும்.
மக்களுக்கு இயற்கையாகவோ, மனிதர்களாலோ ஏற்படும் பேரிழப்புகளைக் கண்டறிந்து அல்லது இழப்புகள் ஏற்பட்ட பிறகு அவர்களைத் தற்காக்கும் நடவடிக்கைகளை தேசியப் பேரிடர் மற்றும் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் மேற்கொள்ளும்.

வருங்காலத்தில் இயற்கையினால் கொரோனா வைரஸ் போன்ற ஆயிரம் மடங்கு ஆபத்துள்ள பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். அப்போதெல்லாம் தற்காக்கும் பணியில் இந்த ஆணையங்கள்தாம் செயல்படும்.
பேரிடர் மேலாண்மை ஆணையம்
இடர்பாடுகள் வருவதற்கு முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தலே முதல் பணி!
ஆணையத்தில் தேசிய அளவில் முதன்மையான அதிகாரம் படைத்த தலைமைப் பதவி (Chairperson) வகிப்பவர் பாரதப் பிரதமர் ஆவார். இதில் அவரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்பதுக்கும் மிகாத நபர்கள் உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள்.
மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு ஒவ்வொரு மாநிலத்திலும் இயங்கும். அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தலைவராகச் செயல்படுவார்கள்.
மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழுவானது மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் இயங்கும்.
முனிசிபாலிட்டி, பஞ்சாயத்து போர்டு, மாவட்ட ஆணையம், டவுன் பிளானிங் அமைப்புகள் ஆகியவை அவரவர் கட்டுப்பாட்டுக்குள் வரும் பகுதி மக்களுக்கு அவசர தேவைக்கு உதவ வேண்டும்.
சட்டப் பிரிவு 51 முதல் 60 வரை
மத்திய மாநில மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த அலுவலர்கள் நிர்வாகக் குழுவினர்களின் செயல்பாடுகளுக்கு யாரேனும் தடையை உண்டாக்கினால், உயிர்ச் சேதம் உண்டாக்கும் செய்கைகளில் இறங்கினால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
பேரிடர் காலங்களில் மத்திய மாநில அரசுகள், மாவட்ட அலுவலர்கள், மத்திய மாநிலக் குழுக்களிடம் பொய்யான தகவல்களைத் தெரிவித்து இழப்பீடு வாங்கிச் சென்றால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.
பாதிக்கப்பட்ட மக்களிடம் சேர்ப்பதற் காக மத்திய மாநில மாவட்ட அரசு சார்ந்த அமைப்புகள் நிவாரண நிதி மற்றும் பொருள்களைப் பாதுகாப்பவர்கள் போன்றோர், அவர்களின் சொந்த தேவைக்காக அபகரித்து எடுத்துச் செல்லுதல் குற்றம். அதற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை உண்டு.
`பேராபத்து நிகழப்போகிறது, நாம் அனைவரும் ஆபத்தில் சிக்கி உள்ளோம், மரணிக்கப் போகிறோம்' போன்ற மக்களை பீதியடைய வைக்கும் பொய்யான தகவல்களைப் பரப்புபவர்கள் அபராதத்துடன் ஓர் ஆண்டு சிறைத்தண்டனைக்கும் உள்ளாவார்கள்.
யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் கையில் கிடைத்ததென்று கொரோனாவைப் பற்றி இஷ்டத்துக்கு வீடியோ பதிவை வெளியிடுபவர்கள் ஜாக்கிரதை.
அரசுத் துறையினர் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபணமானால் தண்டனைக்கு உள்ளாவார்கள். பேரிடர் காலங்களில் அரசு அதிகாரிகள் செய்த தவறு அவர்களுக்குத் தெரியாமல் நிகழ்ந்திருக்கிறது என்பது நிரூபணமாக வேண்டும். இல்லையெனில் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
அரசின் கடமையைச் செய்யாதவர்கள், அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், மேலதிகாரியின் அனுமதி இல்லாமல் வேலை செய்ய மறுப்பவர்கள் மீறுபவர்களுக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை அபராதத்தோடு விதிக்கப்படும்.
பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி அதனுடைய ஆணையங்கள் முழு வீச்சோடு செயல்பட வேண்டும். அப்போதுதான் இயற்கை அல்லது செயற்கை உண்டாக்கும் பாதிப்பிலிருந்து சாமானியர்கள் மீண்டு வர முடியும்.
தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம்
மாவட்ட அவசர உதவி எண் 1077
மாநில அவசர உதவி எண் 1070