சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

பறவையாய் பறந்து திரிந்து...

பயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பயணம்

பயணம்

வாழ்க்கையின் எல்லா எமோஷன்களையும் இணைப்பது பயணம். அதிலும், இமயமலைப் பயணம் என்பது பிரமிப்பின் உச்சம். தேசாந்திரிகள் பலருக்கும் இமயமலையில் பைக் ஓட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. எங்களுக்கும் அப்படித்தான்! இமயமலையின் மீதான அந்தக் காதலோடு சண்டிகரிலிருந்து லடாக் வரை நானும் புகைப்படக்கார நண்பரும் பைக் பயணம் மேற்கொண்டோம்.

டாக் சென்று வந்தவர்களின் வெற்றிக்கதைகளைப் பலமுறை கேட்டிருக்கிறோம். ஆனால், இந்த வெற்றிக்குப் பின்னால் எவ்வளவு கஷ்டங்களும் சந்தோஷங்களும் இருக்கின்றன என்பதை அங்கு சென்று வந்த பின்னரே உணர முடிந்தது. காரோ, பைக்கோ பொதுவாக, நாம் 800 கி.மீ தொலைவை இரண்டு நாள்களில் கடந்துவிடுவோம். ஆனால், இமயமலையில் இந்த தூரத்தைக் கடக்க குறைந்தபட்சம் நான்கு நாள்கள் தேவை. இதற்கு முக்கியமான காரணங்கள் சாலை, குளிர், இருட்டு.

லடாக்
லடாக்

சுரங்கத்துக்குப் பின் சொர்க்கம்

முதல் நாள் பயணம் மணாலி வரை. 150 கிலோமீட்டர் தூரத்துக்கு சாதாரண நெடுஞ்சாலைதான். சட்லெஜ் நதிக்கரையில் சண்டிகரைக் கைவிட்டபடி இமாசலப்பிரதேசத்துக்குள் நுழைந்தபோது கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறியது. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தெருவிளக்குகள் இருந்தன. பெரிய பெரிய ட்ரக்குகள் சாலையின் இரண்டு பக்கமும் வந்துகொண்டே இருந்ததால், இருட்டிய பிறகு மணாலியை அடைவது கடினம் என்பது புரிந்தது. பல திருப்பங்களும் பாலங்களும் எங்களுடைய வேகத்தைக் குறைத்தன. சராசரியாக 80 கி.மீ வேகம்வரை மட்டுமே செல்ல முடிந்தது.

சண்டிகர் - மணாலி சாலையில் கடைகளுக்குப் பஞ்சமில்லை. மணாலியை அடைவதற்கு முன் நீளமான(3 கி.மீ) `AUT' டனல் உண்டு. இந்த டனலின் கும்மிருட்டில், புழுதிக் காற்றும் சேர்ந்தபடி எதிரில் வரும் வாகனங்களைப் பார்ப்பதே சிரமம். ஹெட்லைட் வெளிச்சத்தை வைத்துத்தான் என்ன வாகனம் என்பதே தெரியும். இதில் பயணிக்கும் அந்த திகில் அனுபவம் வேறு எங்கும் கிடைக்க வாய்ப்பில்லை. அதைக் கடந்த பிறகு வரும் 60 கி.மீ தூரமும் சொர்க்கம். பியாஸ் நதியைப் பார்த்தபடியே செல்லும் இந்தச் சாலையின் அடர்ந்த மரங்களும், மலையும், படிக்கட்டுகள் போன்ற அமைப்பைக்கொண்ட கிராமங்களும் கண்களுக்கும் கேமராவுக்கும் ஸ்பெஷல் ட்ரீட்.

லடாக்
லடாக்

மணாலியை வந்தடைந்தபோது நேரம் மாலை 6:30ஐக் கடந்திருந்தது. இரவு 7:30 மணிவரை பளிச்சென இருந்த வெளிச்சம் எங்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. 8 மணி போல இருள் சூழத் தொடங்கியதும் குளிரும் சேர்ந்துகொள்ள... இரவை மணாலியில் கழித்துவிட்டு, காலை 8 மணிக்கு கெலாங் புறப்பட்டோம்.

மணாலியிலிருந்து கிளம்பியது ஞாயிற்றுக்கிழமை என்பதால், வாகன நெரிசல் சென்னை அண்ணா சாலைக்கு ஈடுகொடுத்தது. முதல் செக்போஸ்ட்டைக் கடக்கவே இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆனது. ஒவ்வொரு செக்போஸ்ட்டிலும் டிரைவிங் லைசென்ஸைக் கொடுத்து என்ட்ரி போட வேண்டும். மணாலியிலிருந்து 50 கி.மீ தொலைவிலிருக்கும் ரோத்தங் பாஸ் எனும் இடத்தில் முதன்முறையாக இமயமலையின் பனியைப் பார்த்தோம்.

லடாக்
லடாக்

ரோத்தங் பாஸ் எனும் இடம் கடல்மட்டத்திலிருந்து 13,052 அடி உயரத்தில் இருக்கும் சமதளமான பகுதி. பனியைப் பார்த்ததும் இங்கே மீண்டும் குழந்தையாக மாறி உருண்டு விளையாட ஆரம்பித்து விட்டோம். முதுகு பஞ்சரான பிறகுதான் பனிக்குக் கீழே இருப்பது மலை என்ற ஞாபகம் வந்தது. மீண்டும் கெலாங் பயணத்தைத் தொடங்கினோம். இங்கே ஹோட்டல்கள் கிடையாது. ஒவ்வொரு செக்போஸ்ட்டிலும் சில கடைகள் இருக்கும். டீ, காபி, நூடுல்ஸ், பிரெட் ஆம்லெட், சாம்பார் சாதம்... இந்த ஊர் தாபாக்களின் மெனு இவ்வளவுதான். கெலாங்வரை வாட்டர் கிராசிங் எதுவும் இல்லை. ஆனால், இந்த மலை ரொம்பவே ஆபத்தானதாக இருந்தது. அதிகபட்சம் 60 கி.மீ வேகத்துக்கு மேல் செல்ல முடியவில்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் பெரிய பள்ளம், புல்வெளி, பனி, அருவிகள்! கெலாங்வரை `சிக்னல் நோ’ என்பதால், செல்போனுக்கு வேலையே இல்லை!

ஒரு நதி... ஒரு லாரி

கெலாங்குக்கு முன்னால் பெட்ரோல் பங்க் உண்டு. இதைத் தாண்டிவிட்டால் அடுத்த 365 கி.மீவரை பெட்ரோல் பங்க் கிடையாதாம். அருகிலிருந்த லாரி டிரைவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். இரவில் இந்த ரூட்டில் பயணிக்கத் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதைக் கேட்டதும் இந்தச் சாலையின் ஆபத்து புரிந்தது.

லடாக்
லடாக்

கெலாங்கை அடைந்தபோது மாலை 5:00 மணி. அதே பளிச் வெளிச்சம் மீண்டும் ஆச்சர்யத்தைக் கிளப்பியது. 8 மணிக்கு மேல்தான் இங்கேயும் இருள். அடுத்த நாள் எங்களுடைய இலக்கு சார்ச்சு. சாலை மிகவும் மோசமாக இருக்கும் என்ற ஹோட்டல்காரர், `ஆல் தி பெஸ்ட்’ சொல்லி வழியனுப்பிவைத்தார். கெலாங்கிலிருந்து கிளம்பிய முதல் வளைவிலேயே முழங்கால் அளவுக்குத் தண்ணீரைக் கடக்க வேண்டியிருந்தது. நீரின் பாய்ச்சல் அதிகம் இல்லை என்பதால், சுலபமாகக் கடந்துவிட்டோம். ஆனால், அடுத்த 20 கி.மீ தொலைவில் சாலையில் வந்த நீர் பாய்ச்சல், வீடு எந்தப் பக்கம் என யோசிக்க வைத்துவிட்டது. 100-க்கும் அதிகமான செம்மறி ஆடுகள் சாலையை முற்றுகையிட, எதிரில் ஒரு லாரி. இந்த இரண்டுக்கும் இடையில் சாலையின் நடுவில் வேகமாகச் ஓடும் தண்ணீர். நீருக்கு அடியில் கரடுமுரடான கற்கள். ஒரு முறை இதில் பைக்கைக் கீழே போட்டுவிட்டால் தூக்கிக் கொண்டுசெல்வது மிகவும் கடினம். பைக்கைத் தள்ளிக்கொண்டு போகவே முடியாது. ஓட்டியே ஆக வேண்டும். சாலை ஓரத்தில் எந்தத் தடுப்பும் இல்லை. ஒருவேளை நிலைதடுமாறி விழுந்தால் நேரடியாக அதளபாதாளம்தான்.

பைக்கை முதல் கியரில் போட்டபடி, கிளட்ச்சைப் பிடிக்காமல் லைட்டாக ஆக்ஸிலரேட்டரை முறுக்கிக்கொண்டே நீரோட்டத்தைக் கடந்தோம். இந்த இடத்தைக் கடந்ததும், சென்னையில் மழை வந்தால் இனி எந்தப் பள்ளமும் நம்மை ஒன்றும் செய்துவிடாது என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இதற்குப் பிறகு வந்த அனைத்து நீரோட்டங்களையும் அசால்ட்டாகக் கடந்துவிட்டோம். கெலாங் பாதையில் இருந்த பசுமை இங்கே கிடையாது. வறண்ட, பனிபடர்ந்த நிலப்பரப்பு மட்டுமே. இந்த மோசமான சாலை கிராபிக்ஸில் உருமாறுவதுபோல திடீரென அருமையான சாலையாக மாறிய இடம், சார்ச்சு.

எனர்ஜி முக்கியம் ப்ரோ!

இரண்டு பக்கமும் பசுமையான மலை, பள்ளம் மேடுகள் இல்லாத சாலை, சாலைக்கும் மலைக்கும் இடையே 300 அடி இடைவெளியில் ஃபுட்பால் மைதானம்போல புல்தரை. இடதுபக்கம் மலையின் ஓரமாகப் புல்வெளியில் ஒரு நதி... `அந்த வானம் பக்கம், இந்த பூமி சொர்க்கம்' எனக் காற்றாகி மிதந்துகொண்டிருக்கையில் நம் சாதாரண வாழ்க்கை மொத்தமும் மறந்து, புதிதானதுபோன்ற உணர்வு கிடைத்தது. சார்ச்சுவில் `பிளானட் ஹிமாலயா’ என்ற கேம்ப்பில் தங்கினோம். இரவு தொடங்கியதும் சமாளிக்க முடியாத அளவுக்குக் குளிர். பனியன், டீஷர்ட், ஸ்வெட்டர், லைனிங், ரைடிங் ஜாக்கெட் என ஐந்தடுக்கு உடை, குளிரிலிருந்து கொஞ்சம் காப்பாற்றியது.

லடாக்
லடாக்

தண்ணீர் வரும்; ஆனால் தொட முடியாத அளவுக்குச் சில்லென இருக்கும். நடப்பதற்கு அழகான இடம்; ஆனால் 100 மீட்டர் நடந்தாலே உடலின் மொத்த எனர்ஜியும் கரைந்துவிடும் என்ற இடத்தில் என்ன செய்வது! சார்ச்சுவிலேயே தலைச்சுற்றல் ஆரம்பித்துவிட்டது. வரும் வழியில் பாரா-லாசா பாஸ் எனும் 16,043 அடி உயரச் சிகரத்தைக் கடந்ததால் வந்த தலைச்சுற்றல். `எந்த வேலையும் செய்யாமல் படுத்துக்கொள்ளுங்கள்' என அங்கிருந்த டாக்டர் அறிவுரை சொன்னார்.

இதற்குப் பெயர் `அக்யூட் மவுன்டெயின் சிக்னெஸ்'ஸாம். இமயமலைக்கு வரும் 45 சதவிகிதம் பேர் இதில் பாதிக்கப்படுவார்களாம். `தலைச்சுற்றல், வயிற்றுவலியில் ஆரம்பித்து கோமாவரை இது நம்மைக் கொண்டு சென்றுவிடும்’ என்றார். `சிகரெட் பிடிக்காதவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்றார். ரெஸ்ட் எடுத்துவிட்டு அடுத்த நாள் காலை 10 மணிக்கு லடாக்கில் இருக்கும் லே என்ற நகரத்துக்கு எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.

14,074 அடி உயர சார்ச்சுவிலிருந்து புறப்படும்போது செம உற்சாகம். ஆனால், தண்ணீர் அதிகம் அருந்தும்படி டாக்டர் கூறியதால், கூடுதலாக இரண்டு பாட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டோம். குளிராக இருப்பதால், உடலில் தண்ணீர் வற்றுவதே தெரியாது. அதனால் அவ்வப்போது பைக்கை நிறுத்தித் தண்ணீர் குடிப்பது அவசியமாக இருந்தது. சார்ச்சுவில் இதன் அவசியத்தை மேலும் உணர்ந்தோம். காரணம், மற்ற இடங்களைவிட இங்கு வேகமாக உடலில் தண்ணீர் வற்றியது. அவ்வப்போது தண்ணீர் குடிக்கவில்லையென்றால் தலைச்சுற்றல் ஆரம்பித்துவிடுகிறது.

சார்ச்சு - லே சாலை, பளிங்கு மேல் பைக் ஓட்டுவதுபோல அவ்வளவு ஸ்மூத். லே, 11,562 அடி உயரத்தில் இருக்கும் நகரம். ஆனால், சார்ச்சுவிலிருந்து நேரடியாக இறங்க முடியாது. நகீலா (15,547அடி), லாச்சுலங்லா (16,616 அடி) மற்றும் டங்லாங்லா (17,480 அடி) சிகரங்களைக் கடந்தே கீழே இறங்க முடியும். அகலமான சாலை என்பதால், கொஞ்சம் பாதுகாப்பாக உணர்ந்தோம். வேகமும் மணிக்கு 80 கி.மீவரை செல்ல முடிந்தது.

டங்லாங்லா பாஸ் எனும் இடத்தைக் கடந்த பின் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அதிகமாகச் சோர்வடைந்திருந்தோம். ‘ரும்ஸே’ ஆர்மி செக்போஸ்ட்டில் பைக்கை நிறுத்திவிட்டு அருகிலிருந்த கடையில் கொஞ்சம் `பவர் நேப்' எடுத்தோம். ஒரு டீ சாப்பிட்ட பின் மீண்டும் எனர்ஜி வந்தது. பயணத்தைத் தொடங்கினோம்.

‘லடாக்குக்கு வரவேற்கிறோம்’, ‘Ladak: The Land Of Gompa' எனப் பலகைகளைப் பார்த்து லடாக் வந்துவிட்டதை உணர்ந்தோம். Gompa என்பது புத்தமத வழிபாட்டுமுறை.

லடாக்கில் மக்கள் நடமாட்டம் குறைவு. எங்கு திரும்பினாலும் ஆர்மி கேம்ப்தான். சிறு தொலைவிலேயே ஒரு பெரிய இரும்புப்பாலம் முழுவதும் புத்த கொடிகள் கட்டப்பட்டிருந்தது. லடாக்கின் தலைநகரான லே நகருக்குள் நுழையும்போது எதையோ சாதித்த உணர்வு.

முதன்முறை பைக்கைத் தனியாக ஓட்டிய த்ரில், முதல் விமானப்பயணத்தின் கம்பீரம் கலந்த பயம், முதல் செல்ஃபியின் தயக்கம், முதல் ஹேங் ஓவர் வேதனை, முதல் சம்பளத்தின் சந்தோஷம், முதல் முத்தத்தின் கதகதப்பு என எல்லாவற்றையும் மீண்டும் கொடுத்தது இந்த லடாக் பயணம். ‘நான்லாம் யார் தெரியுமா?’ என்பவர்கள், தங்களைப் புரிந்துகொள்ள லடாக் பயணம் செல்ல வேண்டியது மிக அவசியம்!