அரசியல்
அலசல்
Published:Updated:

சிறுத்தை சிக்கும்... சின்னவரு சிக்குவாரா?! - ஓ.பி.எஸ் மகன் தோட்டத்து சர்ச்சை!

ஓ.பி. ரவீந்திரநாத்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பி. ரவீந்திரநாத்

யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்படவில்லை. உயிரிழந்த சிறுத்தையின் பிரேத பரிசோதனை முறையாக நடந்தப்பட்டிருக்கிறது

ஓ.பி.எஸ் மகனும், தேனி மாவட்ட எம்.பி-யுமான ஓ.பி. ரவீந்திரநாத்துக்குச் சொந்தமான கோம்பை தோட்டத்தில், மின்வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று இறந்தது சர்ச்சையாகியிருக்கிறது. இது தொடர்பாக தோட்டத்தில் கிடை வைத்திருந்த அலெக்ஸ்பாண்டியன் என்பவர் கைதுசெய்யப்பட, “ஓ.பி.எஸ் மகனைக் காப்பாற்ற இன்னொருவரை பலிகடா ஆக்குவதா?” என்று கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள்!

சிறுத்தை சிக்கும்... சின்னவரு சிக்குவாரா?! - ஓ.பி.எஸ் மகன் தோட்டத்து சர்ச்சை!
சிறுத்தை சிக்கும்... சின்னவரு சிக்குவாரா?! - ஓ.பி.எஸ் மகன் தோட்டத்து சர்ச்சை!

இது குறித்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சரவணனிடம் பேசினோம். “அலெக்ஸ்பாண்டியன் கடந்த ஆறு மாதங்களாக ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் `கிடை’ போட்டிருக்கிறார். செப்டம்பர் 27-ம் தேதி காலையில் சிறுத்தை ஒன்று அதே பகுதியிலுள்ள சோலார் மின்வேலியில் சிக்கி இறந்திருக்கிறது. அதை யாருக்கும் தெரியாமல் தோட்டத்திலேயே குழிதோண்டி, அதற்குள் போட்டு எரித்து, புதைத்துள்ளனர். இந்த விவகாரம் வெளியே கசிய, வனத்துறையின் உதவியுடன், அலெக்ஸ்பாண்டியன்தான் வேலியில் ‘சுருக்கு’ வைத்தார் என்று அவர்மீது பொய்வழக்கு போட்டு கைது செய்திருக்கிறார்கள். ஓ.பி.எஸ் மகனின் தோட்டத்தில் இறந்தது ஆண் சிறுத்தை. ஆனால், பக்கத்துத் தோட்டத்தில் சுருக்கில் சிக்கிய பெண் சிறுத்தையைக் காட்டி, வழக்கை திசைதிருப்புகிறது வனத்துறை. இதைக் கண்டித்தும், அலெக்ஸ்பாண்டியனை விடுதலை செய்துவிட்டு, தோட்ட உரிமையாளரான ரவீந்திரநாத்தை கைதுசெய்யக் கோரியும் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

ஓ.பி. ரவீந்திரநாத்
ஓ.பி. ரவீந்திரநாத்

இது தொடர்பாக, இந்திய பிராணிகள் நல வாரியத்தின் கெளரவ பிராணிகள் நல அலுவலர் பால்ராஜ் பேசும்போது, “வனவிலங்குகள் உயிரிழந்தால் முதலில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும். அதன் உறுப்பினர் முன்னிலையில்தான் பிரேத பரிசோதனையும், அடக்கமும் செய்யப்பட வேண்டும். அந்தக் குழுவில் வருவாய்த்துறையினர், அங்கீகரிக்கப்பட்ட என்.ஜி.ஓ., அரசு கால்நடை மருத்துவர்கள் இடம்பெற வேண்டும். இந்த விவகாரத்தில், அப்படியான எதுவும் புரோட்டோகால்படி நடக்கவில்லை. முழுமையாக விசாரித்து, தவறு நடந்திருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பவிருக்கிறோம்” என்றார்.

இந்தப் புகார்கள் பற்றி பெரியகுளம் வனச்சரகர் செந்தில்குமாரிடம் விளக்கம் கேட்டோம். “யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்படவில்லை. உயிரிழந்த சிறுத்தையின் பிரேத பரிசோதனை முறையாக நடந்தப்பட்டிருக்கிறது. உயிரிழந்தது பெண் சிறுத்தைதான். இதற்கான அனைத்துச் சான்றாவணங்களையும் வைத்திருக்கிறோம். விசாரணை தொடர்ந்து நடப்பதால் ஏதும் கூற இயலாது” என்றார்.

சரவணன்
சரவணன்

ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் விசாரித்தபோது, “வனச்சட்டத்தின்படி தோட்டத்தில் நடக்கும் பிரச்னைக்கு உரிமையாளர் பொறுப்பேற்கவேண்டியது இல்லை. அலெக்ஸ்பாண்டியன் ஆடுகள் காணாமல்போனதைத் தொடர்ந்து வேலியில் சுருக்குக் கண்ணி அமைத்திருந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். தோட்ட மேலாளர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், எம்.பி-யைக் கைதுசெய்ய வேண்டும் என்று போராடுபவர்களின் பின்னணியில் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதல் இருக்கிறது” என்றனர்.

சிறுத்தை சிக்கும்... தேனியின் சின்னவரு

ஓ.பி.ஆர் சிக்குவாரா?!